tamilnadu

img

புதுமை காணும் அறிவியலில் பழமைவாதம் எதற்கு? - - பொ.இராஜமாணிக்கம் & விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

இமய மலை உருவாவதற்கு முன்பே பூமியில் வாழ்ந்த நீளமான பாம்பின் தொல் எச்சத்தை கண்டு பிடித்துள்ளனர்.  அளவில் நீளமாக இருப்பதால் இதற்கு வாசுகி இண்டிகஸ் என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த செய்தியை  தவறாகப் புரிந்து கொண்டும், மக்களை ஏமாற்றும் விதமாகவும் சிலர் புராணத்தில் கூறப்படும் வாசுகி பாம்பின் தொல்லெச்சத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என போலியாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Kingdom: Animal Kingdom (விலங்கு உலகம்), Phylum: Chordata (முதுகு நாணுள்ளவை), Sub.phylum: Vertebrata (முதுகெலும்புள்ளவை) Class: Reptilia (ஊர்வன)  Order: Ophidia (பாம்புகள்), Family: Madtsoiidae (மெட்சாய்டே) Genus: Vasuki (வாசுகி) Species: Indicus (இண்டிகஸ்)

350 கோடி ஆண்டுகள் முன்னர் பூமியில் உயிர் தோன்றியது எனக் கருதுகின்றனர். ஒரு செல் உயிரியாக  உருவான முதல் உயிரி காலப்போக்கில் பரிணாமப் படி நிலை வளர்ச்சி பெற்று பல்வேறு உயிரிகளாக பரிணா மம் அடைந்தது. இவற்றில் பல தொல்லுயிர்கள் காலப்  போக்கில், டைனோசர் போல, முற்றிலும் அழிந்து விட்டன. முற்காலத்தில் பாம்பு வகை உயிரினம் உரு வான கட்டத்தில் பரிணாமம் அடைந்த ஒரு பாம்பு  வகையின் தொல்லெச்சத்தைத் தான் கண்டு பிடித்துள்ளனர்.  2005 இல் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் நிலக்கரி  சுரங்கம் ஒன்றில் கிடைத்த தொல் படிவ எலும்புகளை வைத்து ரூர்க்கி ஐஐடியை சார்ந்த ஆய்வாளர்கள் இது பாம்பின் எலும்புக்கூடு என முடிவுக்கு வந்தனர், முன்னர் சிலர் இது முதலையின் எலும்புக்கூடு என  தவறாக கருதியிருந்தனர். கிடைத்த எலும்பு துண்டு களை பொருத்தி ஆய்வு செய்தபோது இந்த பாம்பு வகை  சுமார் நாற்பது, ஐம்பது அடி- அதாவது சுமார் 10.2 மீ  முதல் 14 மீட்டர் நீளம் கொண்ட பாம்பு வகை என அனு மானம் செய்துள்ளனர். புதை படிவமாக கண்டெடுக் கப்பட்ட சுமார் 27 முதுகெலும்புகளைக் கொண்டு இதன்  நீளத்தை அனுமானித்து உள்ளனர். அதாவது இந்த  பாம்பு பேருந்தின் அளவுக்கு நீளமாக இருந்திருக்கும் எனக் கருதுகின்றனர். இந்த பாம்பு 4.8 கோடி ஆண்டு களுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் கால  நிர்ணயம் செய்து உள்ளனர். இந்திய தொன்மக் கற்பிதங்களில் வாசுகி எனும் பாம்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு எனவும், மேருமலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடைய வாசுகி எனும்  பாம்பு கயிறாக பயன்பட்டது என்றும் புராணக் கதைகள்  கூறுகின்றன.எனவே பெரிய உருவு கொண்ட பாம்பு என்பதை உணர்த்தும் வகையில் வாசுகி என்றும், இந்தி யாவில் கண்டெடுக்கப்பட்ட தொல் படிமம் என்பதால்  இன்டிகஸ் எனவும் குறிப்பிட்டு, இந்த பாம்பு வகைக்கு  வாசுகி இன்டிகஸ் (Vasuki indicus) என்று பெயர் சூட்டி யுள்ளனர். 

புதிய உயிரினங்களுக்குப் பெயரிடுதல்

இப்போது இந்தப் பாம்புக்கு வாசுகி இண்டிகஸ் எனப் பெயர் வைத்துள்ளனர். அப்படிப் பேர் வைக்க லாமா? பெரும்பாலும் ஒரு புதிய உயிரினம் கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கு அதன் ஃபைலம் (Phylum),  சப் பைலம் (Sub Phulum), ஆர்டர் (Order), சப் ஆர்டர்  (Sub Order), குடும்பம் (Family), ஜீனஸ் (Genus),ஸ்பீசிஸ் (Speceis) என உள்ளிட்ட வகைப்படுத்தலில் வர வேண்டும். ஒரு புதிய உயிரினத்திற்கு பெயர் வைப்ப தென்றால் விஞ்ஞானி லின்னேயஸ் அவர்களின் வழியில் இரட்டைப் பெயர் (Binomial nomenclature) கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் இப் பாம்பிற்கு வாசுகி இண்டிகஸ் (Vasuki indicus) என பெயர் வைத்துள்ளனர்.  உதாரணமாக நமது நாட்டின் ஒரு மாடு வகைக்கு  போஸ் இண்டிகஸ்(Boas indicus). இதில் போஸ் (Boas) எனபது போவிடே (Bovidae) என்ற குடும்ப  வகையைச் சார்ந்தது. தவளை வகைக்கு ரானா(Rana) என்ற ஜெனெரிக் பெயருடன் அதன் வெவ்வேறு வகை  தவளைகள் எல்லாம் அடக்கம். இதில் ரானா என்பது  ரானிடே என்ற குடும்ப வகையைச் சார்ந்தது. ரானா  கெக்ஷ்சாடேக்டைலா(Rana hexadactyla), ரானா டைக்ரினா(Rana tigrina) என பல வகைத் தவளை கள் பெயரிடப்பட்டிருக்கின்றன. அதே போல் நமது அறி வியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரான முனைவர்  தினகரன் அவர்களின் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் ஒரு புதிய வகைப் பூச்சியை கண்டுபிடித்தார். அது சைமுலிடே(Simulidae) என்ற பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே அந்தப் பூச்சிக்கு தினகரன் பெயர்  விளங்கும் வகையில் சைமுலியும் டினகரனி (Simulium  dinakaranii) எனப் பெயர் வைத்துள்ளார். 

வானியலில் பெயரிடும் முறை

கோள்களின் பெயர்கள், நெப்டியூன், யுரேனஸ் போன்றவை ஐரோப்பிய தொன்மக் கதைகளை ஒட்டி  தான் உருவானது. அறிவியலில் ஒரு புதிய பொரு ளைக் கண்டுபிடிக்கும்போது, அதைக் கண்டுபிடித்த வர் அல்லது அந்த குழுவுக்கு பெயரை தெரிவு செய்யும்  உரிமை உள்ளது. எனவே தான் பால்வழி மண்டல கேலக்சியில் பெரும் ‘விண்மீன் திரள் கூட்டத் தொகுதி’  (Super Cluster) ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இனம்  கண்டனர். இந்த திரளுக்கு ‘சரஸ்வதி’ (Saraswati Super  cluster) என்று பெயரிட்டுள்ளனர். இதே போல நமது  பால்வழி மண்டலத்தில் இரண்டு விண்மீன்திரள் கேலக்சிகள் மோதி இன்று இரண்டும் ஒன்றாக உள்ளது.  இந்த இரண்டு ஆதிகால விண்மீன்திரள்களுக்கு, ‘சிவா’ (Shiva) , ‘சக்தி’ (Shakti) என்று இப்போது பெயரிட்டி ருக்கிறார்கள். சிவாவும், சக்தியும் அர்த்தநாரியாக ஒன்றுசேர்ந்து இருப்பதுபோல சேர்ந்து காட்சி தருகிறது. இதே போல உலகின் பல்வறு பண்பாடுகள் சார்ந்த தொன்மங்களை கொண்டு பெயரிடுவது அறி வியலில் இயல்பு.  சூரியனை சுற்றிவரும் ஒரு குறுங்கோளுக்கு கணேஷ் என்றும் அனுமான் என்றும் பெயர் உள்ளது.  யாரும் அந்த இரண்டு கோள்கள் தான் புராணங்க ளில் உள்ள கடவுளர்கள் என கூறமாட்டார்கள். அதே  போல இப்படிக் கடவுள் பெயர்களை இடுவதால், சரஸ்  வதியையோ, சிவன், சக்தியையோ அறிவியலார்கள் கண்டுபிடித்து விட்டதாகக் கூற முடியாது.  பொதுவாக இதுபோன்ற அகழ்வாய்வில் கிடைக்  கும் புதை படிமங்களில் கண்டறியப்படும் உயிரி னங்களுக்கு பெயர் வைக்கும்போது, அதனைக் கண்ட றிந்த அறிவியலாளர், அவ் விலங்கின் குடும்பம், குறிப்  பிட்ட நாடு ஆகியவற்றைச் சேர்த்து பெயர் சூட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்திய தொன்ம/புரா ணக் கதைகளில் வரும் ‘வாசுகி’ என்ற பாம்பின் பெயரை யும், இது இந்தியாவில் கண்டறியப்பட்டது என்பதைக்  குறிக்கும் வகையில் ‘இண்டிகஸ்’ என்ற பெயரையும் சேர்த்து ‘வாசுகி இண்டிகஸ்’ என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.எனினும் இந்த பாம்புத் தொல் படிவம் இதுவரை இனம் காணப்பட்ட பாம்பு வகைகளில் ஆகப்  பெரிதும் இல்லை தொன்மையானதும் இல்லை 

உலகில் கண்டெடுக்கப்பட்ட பழமையானதும், பெரி யதுமான பாம்பு, வாசுகி இண்டிகஸ்தானா என்று பார்த்தால், இல்லை. கொலம்பியா நாட்டின் நிலக்கரிச்  சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘டைட்டானோபோ’ (Titanoboa Sp.) படம்-2 என்னும் பாம்பின் தொல்படி மம், 14.3 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்ட தாக இருந்திருக்கிறது. உருவத்திலும் நீளத்திலும் இதுவே இதுவரை இனம் காணப்பட்ட உலகின் மிகப் பெரிய பாம்புப் படிமமாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இது 60 கோடி ஆண்டுகள் பழமையானது. இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட பர்விராப்டர் (‘’Parviraptor’) என்னும் பாம்பின் தொன்ம படிமமே இதுவரை இனம் காணப்பட்ட உலகின் மிகப் பழைமை வாய்ந்தது. இது 140 கோடி ஆண்டு பழமை யானது என்கிறார்கள்.  ஏடன் சுவர்க்கத்தில் காய்த்து பழுத்த ஆப்பிளை கடிக்கக் கூடாது என்ற கடவுள் கட்டளையை மீறி ஆதாமை கடிக்கத் தூண்டியது பாம்பு வடிவில் வந்த சாத்தான் தான் என கிருத்துவ மதம் கருதுகிறது. ஆயி னும் எவரும் பர்விராப்டர் தான் அந்த சாத்தான் என  போலியாகக் கூறுவது இல்லை. 

வாசுகி இண்டிகஸ் வாழ்ந்த காலம்

4.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் முன் ஊழிக்காலம் எனப்படும் நிகழ்வு நடந்தது. அது இயோ சீன்( Eocene) யுகம் ஆகும். அப்போது இமய மலையே  உருவாக வில்லை. இக்காலத்தில் தான் வாசுகி இண்டி கஸ் வாழ்ந்துள்ளது. அதன் பின்னர் இந்திய துணைக்  கண்ட நிலப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து நகர்ந்து ஆசிய கண்டத்தோடு ஏற்பட்ட மோதலில் தான் இமய மலை உயரத் துவங்கியது; இன்றும் இந்த மோதலின் தொடர்ச்சியாக இமய மலை மேலும் மேலும் உயரம் அதி கரித்து வருகிறது.  இன்றைக்கு பூமி கோளத்தில் மடகாஸ்கர் தீவு உள்ள  நிலைப் பகுதியில் தான் அன்று இந்திய துணைக்கண்ட  பகுதி நிலை கோடு இருந்தது. மெல்ல மெல்ல வடக்கு  நோக்கி நகர்ந்து ஆசிய கண்டத்துடன் மோதி அதன்  பின்னர் சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  தான் இந்திய நிலப்பகுதி ஆசியாவுடன் இணைந்தது. 

புராணத்தை வைத்து ஒரு உருட்டு 

புராணத்தில் பாற்கடலைக் கடைய வாசுகி என்ற  பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி மேரு மலையை மத்  தாக வைத்து தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் மறுபுற மும் கடைந்து அமிர்தம் உள்ளிட்ட அபூர்வப் பொருட் களை எடுத்தனர்.அப்போது பாம்பு தாங்க முடியாமல் தனது நச்சைக் கக்கியதால் சிவபெருமான் நச்சைக் குடிக்க அது தொண்டையைத் தாண்டுவதற்கு முன்  பார்வதி கழுத்தை பிடித்துத் தடுத்து விட்டார். இத னால் சிவபெருமான் உயிர் பிழைத்தார். இதனால் இவ ருக்கு நீல கண்டன் எனப் பெயரும் உண்டு. இதன் பின் சிவபெருமான் அதையே தனது கழுத்தில் மாலை யாகப் போட்டுக் கொண்டார் என்கிறது புராணம்.  இந்தப் பாம்பின் பெயரையே தற்போது கண்டுபிடிக்கப் பட்ட தொல் பாம்புக்குப் பெயராக வைத்துள்ளனர். இந்த  உண்மையை மறைத்து புராண வாசுகி பாம்பின் தொல்  படிமத்தை கண்டுபிடித்து விட்டனர் என்று பொருள் தரும் வகையில் போலி செய்திகளை பலர் பரப்பி வரு கின்றனர். 

வாசுகி என்ற புராணப் பாம்பையா  கண்டு பிடித்தார்கள்...? இல்லை...

கண்ணாயிரம் என்பவருக்கு உள்ளபடியே ஆயி ரம் கண்கள் இருப்பதில்லை. அதுபோல வாசுகி இன்டி கஸ் பாம்பு வகைக்கும் புராண கற்பிதமான வாசுகி எனும் பாம்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே,  ‘பாற்கடலை மேரு மலையைக்கொண்டு (இமயமலை) கடையப் பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பின் எலும் புக்கூடு கண்டறியப்பட்டது’ என்று சொல்வது அறிவிய லுக்குப் புறம்பானதாகும். அப்பட்டமான போலி அறிவி யலாகும். தற்போதைய இந்திய நிலப்பரப்பான குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளைக் கொண்டு இது ஒரு வகைப் பாம்பாக இருக்கலாம் என்ற  வகையில் இப் பாம்பிற்கு இப் பெயர் இடப்பட்டுள்ளது. இது புராணத்தில் கூறப்பட்டுள்ள வாசுகி பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவது போலிச் செய்தி கள் மட்டுமே. போலி அறிவியல் பரப்பும் செயல்பாடாகும். அறிவியல் கண்டுபிடிப்புகளை, அறிவியலாகவே பார்க்கவேண்டும். இந்த பாம்பு வகையின் தொல் படிமத்தைக் கண்டுபிடித்ததை உலகமே வியப்பாகப் பார்க்கிறது. ஆனால் இந்த செய்திகளை திரித்து, உருட்டி, போலி செய்திகளை வெளியிடுவது நம்மை  நாமே தரம் தாழ்த்திக் கொள்ள வைப்பதும் மக்களை  முட்டாளாக்கும் செயல் ஆகும்.

கருத்து உதவி: ராஜ்சிவா(ங்க்), ஜெர்மனி, முனைவர் கிருஷ்ணசாமி
 




 

;