tamilnadu

img

மேலவளவு கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு கண்டனம் நவ. 22 மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:
மேளவளவு கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நவம்பர் 22அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ளமேலவளவு ஊராட்சி 1996 ல் தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தலித்துகள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில்போட்டியிடக்கூடாது என மிரட்டப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து 9.10.1996 மற்றும் 28.12.96 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு 31.12.96 அன்றுதேர்தல் நடைபெற்றது. அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு திரு. முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தங்களுக்குபாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்து வந்தார்.இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது மேலவளவு படுகொலை நிகழ்த்தப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர்சாதியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் திரு. முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது.இவ்வழக்கின் குற்றவாளிகள் 13 பேர், நவம்பர் 9ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மேலூர் தொகுதிஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் மேலவளவு குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கை வைத்த நாளில் இருந்து தமிழக அரசு குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. வழக்கமான கொலைக்குற்றம் போன்றதல்ல மேலவளவு கொலைக்குற்றம். அரசியல் சாசனத்திற்கு சவால் விடுகிற விதத்தில் நடைபெற்ற சாதிவெறி கொலைக்குற்றம் இது. இந்த விடுவிப்புசாதியவாதிகளுக்கு ஊக்கம் அளித்து உள்ளது. சாதியவாதிகளுக்கு ஆதரவான அப்பட்டமான அரசின் நிலைபாடு இது. எனவேதான் உயர் நீதிமன்றமே கண்டித்துள்ளது.எனவே மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 22 அன்று மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அரசியல் சாசன சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவரும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிகேட்டுக்கொண்டுள்ளது.

;