tamilnadu

img

அம்மாபேட்டை அருகே குலை நடுங்க வைக்கும் வன்கொடுமை தாக்குதல்.... தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்...

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் பூண்டி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மகன் ராகுல், குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்சிடம் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரும் அருகில் உள்ள கோனூர்கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் வேறு சிலரும் விக்கியிடம் மண், மணல் அடிக்கும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த பிப் 1 ஆம்தேதி வேலை செய்த கூலியை வாங்க கோனூருக்கு ராகுல் சென்றுள்ளார். உடன் வேலைசெய்யும் தலித் இளைஞர்கள், விக்கியிடம் போனில் ராகுல் பணம் கேட்கவருகிறார் என பேசியுள்ளனர். 

இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடால் ஆத்திரமுற்ற விக்கி,ராகுல் வந்தவுடன் ஏதும் பேச விடாமல் தனது ஜீப்பில் ராகுலை தூக்கிக் கொண்டு போய்  விக்கியின் வீட்டிலும், அதன் பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத கொல்லை யிலும், ராகுலை கும்பலாகச் சேர்ந்துகொடூரமாகத் தாக்கியுள்ளனர்.ராகுல் எவ்வளவோ மன்றாடியும் விடவில்லை. சாதியை சொல்லிதாக்கியுள்ளனர். அதன்பிறகு கோனூர் சுடுகாட்டில் கட்டி வைத்து அடித்து உயிர் போகும் நிலையில் போட்டுவிட்டு ஓடியுள்ளனர். ராகுலின் பெற்றோர் கேள்விப்பட்டு ஓடிவந்து மகனை தூக்கிச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இக்கொடூர தாக்குதல் பட்டப்பகலில் நடந்துள்ளது. தாக்கிய சாதி ஆதிக்கநபர்களே வீடியோவாக செல்போனில் படம் பிடித்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

இதனால் அவமானப்பட்டு மனமுடைந்த ராகுல் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.‌  அக்கம்பக்கம் இருந்தவர்கள் தூக்கிச் சென்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவையாவும் நேரில் சென்று 
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கேட்டறிந்த விவரங் களாகும். சாணிப்பாலுக்கும், சவுக்கடிக்கும் முடிவு கட்டிய தஞ்சை மண்ணில்இக்கொடூர கும்பல் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குலை நடுங்க வைக்கும் இக்கொடுமை மிக வன்மையான கண்டனத்திற்குரியது. வீடியோ வெளியானதால் தான் இத்தாக்குதல் வெளி உலகிற்கு தெரிந்தது. காவல் துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடன் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இக்கொடூரத் தாக்குதல் வன்கொடுமை மட்டுமல்ல, மிக மோசமான மனித உரிமை மீறல்.இதை நாகரீக சமூகம் என்றுசொல்லும் யாவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என, இக்கொடுமையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் தஞ்சை மாவட்டக்குழு வன்மையாகக் கண்டித்துள் ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுலுக்கு உரிய சிகிச்சையும், ராகுல் குடும்பத்திற்குகாவல்துறை உரிய பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுல் மற்றும்அவரின் பெற்றோரையும் நேரில்பார்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சிவகுரு, ஆர்.கலைச்செல்வி, த.வி.ச மாநில செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி, குணா, மார்க்சிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய செயலாளர் துரை.அருணன் உள்ளிட்டோர் ஆறுதல்கூறினர்.தகவல் அறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், விபரங்களை கேட்டு இக்கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு உரிய சிகிச்சையளிக்கவேண் டும் என்றும், மேலும் வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்கு பதிவுசெய்திடவும், தீருதவி உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

;