tamilnadu

img

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா : ஜனாதிபதி பங்கேற்கிறார்.... முதல்வர் தகவல்....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுதில்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் திங்களன்று(ஜூலை 19) சந்தித்தார். முதல்வரான பிறகு மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திப்பது இதுவே முதல்முறை.இந்த சந்திப்பின் போது, சென்னை மாகாணத்தின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் களுடன் தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டப்பேரவை 12 1.1921 அன்றுதொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தும் வகையில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.

அந்த விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்திக்கொடுக்க குடியரசுத் தலைவரிடம் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் சட்டப்பேரவை வளாகத்திற்குள் திறந்து வைக்க வேண்டும் என்ற தகவலையும்தெரிவித்ததாகவும் அதற்கும் குடியர சுத்தலைவர் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். அதேபோல் மதுரையில்கருணாநிதி பெயரால் அமையவிருக்கும் நூல் நிலையம், சென்னைகிண்டியில்  அமையவுள்ள அரசு மருத்துவமனையின் அடிக்கல்நாட்டு விழாவையும், அதேபோல்சுதந்திரம் பெற்று 75ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமையவுள்ள நினைவுத் தூணையும் திறந்து வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாக வும் அதற்கு குடியரசுத் தலைவர் தனது இசைவை தெரிவித்துள்ளார் என்றும் இதற்கான தேதி குறித்து ஓரிரு நாளில் தெரிவிப்பதாகக் கூறினார் என்றும் தெரிவித்தார்.குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனான சந்திப்பின்போது மதுரை ஓவியர் மனோகர் வதாஸின்  ஓவியத்துடன் எழுதப்பட்ட  ‘மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை’ என்ற நூலையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

$$$$$$$$$$$$$

மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை...

மனோகர் தேவதாஸ் எழுத்தாளராகவும், ஓவியராகவும் புகழ்பெற்றவர். 1936ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், மதுரையைப் பற்றிய தகவல்கள் அழகிய ஓவியங்களுடன் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இவர் ‘தி கிரீன் வெல்ஸ் இயர்ஸ்’, ‘மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை’ எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி, கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் என்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் வரைந்த கலைநயமிக்க மதுரை கோயில்கள் மற்றும் புராதான கட்டடங்களின் கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மிகவும் சிறப்பாகும். மதுரையைப் பற்றிய புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்? மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம் என்று பதிவிட்டுள்ளார்.

;