tamilnadu

img

ஹேமந்த் சோரன் கைது - முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
அமலாக்கத் துறை மீது முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். தில்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத் துறை சட்ட விரோதமாகச் சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் கொடுத்துள்ளார். தனது பெயருக்கும், தங்கள் சமூகத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செயல்பட்டதாகவும், எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி தில்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வந்ததாகவும், தன்னை பற்றி பொய்யான தகவலைப் பரப்பியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை மூத்த அதிகாரிகள் கபில் ராஜ், தேவ்விரத் ஜா, அனுபம் குமார், அமன் படேல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஞ்சியின் மூத்த போலீஸ் அதிகாரி சந்தன் குமார் சின்ஹா கூறினார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் அவர் புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த செய்தி அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

;