tamilnadu

img

சிறுபான்மை மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு வழங்கும் என அறிவித்தார்.
ஒன்றிய அரசால் 2022-23ஆம் ஆண்டு முதல்  நிறுத்தப்பட்ட சிறுபான்மையின மாணவியர்களுக்கான Pre-Matric கல்வி உதவித்தொகையினை 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்குத் தமிழ்நாடு அரசு வக்ப் வாரியம் மூலம் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் சிறுபான்மை மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்கப்படுவர்; சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்குச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்; சிறுபான்மையினர் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்விக் கடன் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
பள்ளிகள், தர்காக்களைப் புனரமைக்கத் தரப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டு, இதன் மூலமாக 134 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் பயன்பெற்றுள்ளன. எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், 
2007-ஆம் ஆண்டு முதல், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியச் சமூகத்தினருக்கு 3.5 சதவீதம் தனி இடஓதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சங்கங்களின் மூலம் ஆதரவற்ற, விதவைகள் மற்றும் வயதான முஸ்லிம்/கிறிஸ்தவ பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் தற்போது 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் ரூ. 14 இலட்சம் செலவில் “செம்மொழி நூலகங்களும்” ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.5.90 இலட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. 
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் இதுவரை மொத்தம் 15,848 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க கடந்த ஆண்டு ஆணையிட்டேன்.
அதேபோல், உறுப்பினர்களுக்கு 5.46 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எங்கள் ஆட்சியில் முதன் முறையாக, 1000 இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் 2500 தையல் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு ஆண்டு நிர்வாக மானியம் ரூபாய் 2.50 கோடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, 4 வக்ஃப் சரக அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
லமா ஓய்வூதியதாரர் இறந்தபிறகு, அவரின் குடும்பத்தினருக்கு “குடும்ப ஓய்வூதியம்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது வரம்பை 40 ஆகவும், பணிக்காலத்தினை 10 ஆண்டாகத் தளர்த்தியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 
கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 
மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 
இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாகச் சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதையும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்கும் 123 பணிகளுக்கு 658.44 கோடி ரூபாய் ஒப்படைப்பு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஆண்டில் 9217 சிறுபான்மை பயனாளிகளுக்கு 62 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
 

;