tamilnadu

img

தேசிய தரவரிசை பட்டியலில் 32வது இடம் பிடித்து கோவை அரசு கலைக்கல்லூரி சாதனை!

பிரபல தனியார் கல்லூரிகளை பின்னுக்கு தள்ளி கோவை அரசு கலைக்கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் 32 ஆவது இடத்தையும், மாநில அளவில் 10 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.  

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான 2022 தேசிய தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் முக்கிய இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.

அந்த வகையில், கோவை அரசு கலைக் கல்லூரி, இந்திய அளவில் 32 ஆவது இடத்தையும், தமிழக அளவில் 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.  

முதல் இடத்தில் சென்னை பிரேசிடென்சி கல்லூரியும், இரண்டாவது இடத்தில் லயோலா கல்லூரியும், மூன்று மற்றும் நான்காம் இடத்தில் முறையே பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியும், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தாற்போல தமிழக அளவில் 10 ஆவது இடத்திலும், கல்வி மாவட்டம் என்கிற பெயரை பெற்ற பல தனியார் கல்லூரிகள் கோலோச்சுகிற கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் நான்காவது இடத்தை கோவை அரசு கல்லூரி பிடித்து சாதனை படைத்துள்ளது. பிரபலமான தனியார் கல்லூரிகளான ஸ்ரீ கிருஷ்ண அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரி, ராமகிருஷ்ணா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை பின்னுக்கு தள்ளி கோவை அரசு கலைக்கல்லூரி தரவரிசையில் முன்னேறி சாதித்துள்ளது.      

கடந்த முறை தேசிய அளவில் 44 ஆவது இடத்தில் இருந்த கோவை அரசு கல்லூரி கடந்த ஓராண்டில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் பேராசிரியர், மாணவர்கள் என அனைவரது கூட்டு முயற்சியில் இந்த சாதனை பெற்றுள்ளதாக கோவை அரசு கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து தீக்கதிர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒண்ணரை ஆண்டு காலத்திற்கு பிறகு கல்லூரி துவங்கப்பட்டது. கல்லூரி துவங்கிய நாளில் இருந்தே பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி செல்ல வேண்டும். எந்த நிலையிலும் மாணவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினோம். பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையில் எல்லா துறை தலைவர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்வோடு பங்கேற்ற 300 நிகழ்வுகளுக்கு மேல் நடத்தியுள்ளோம்.

இதில், மாணவர்களின் ஆராய்ச்சி, கல்வி, மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். இதேபோன்று மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச்செய்ததும், அவர்கள் திறமையாக பங்கேற்று பரிசுகளை அள்ளி வந்ததும் ஒட்டு மொத்த கல்லூரியையும் உற்சாகப்படுத்தியது.

இதேபோன்று என்சிசி, என்எஸ்எஸ் போன்றவைகளில் டில்லிவரை சென்று மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்த்தனர். இதேபோன்று துருக்கியில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் ஒரு மாணவர் பங்கேற்றார்.  கல்லூரியின் வளர்ச்சி என்பது ஒரு துறையில் மட்டுமல்லாது, அனைத்து துறையிலுமான வளர்ச்சியாக இருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்கேற்பு முழுமையாக இருந்தது.

அனைவரது கூட்டு உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இதனை பார்க்கிறோம். இதனைதொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும், மேலும் முன்னேறவும் அனைவரும் இணைந்து உழைப்போம் என்றார்.

;