tamilnadu

img

கனடா குப்பை கிளறி எப்படி இருப்பார்? - நா.வே.அருள்

ஒவ்வொரு நகரத்திலும் ஒரு டவுன் டவுன் (Diown Town) இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்திருந்தோம்.  அதுதான் நகரின் வர்த்தக மையமாக இருக்கும்.  தொழில் வளர்ச்சியின் ஜீவநாடியாய் இருக்கும். அந்தப் பகுதியில்தான் உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் உலக வர்த்தக மையத்தின் கட்டடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது.  அதன் அடிவாரத்தின் எதிரில்தான் ஒரு கிதார் இசைக் கலைஞன் தனது தொப்பியை டாலர்களால் நிரப்பப்போகும் வழிப்போக்கர்களுக்காக வாசித்துக்கொண்டிருந்தான். கலை பொருளாதார வீதியில் மண்டியிட்டுக் கிடந்ததுபோலத் தோன்றியது.

நகரம் நவீன நாகரிகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது.  உலகமெல்லாம் கடை திறந்து வைத்திருக்கும் கார்ப்பரேட்டு முதலாளிகளின் பன்னாட்டு வங்கிகள், நட்சத்திர விடுதிகள், கேசினோக்கள், விதவிதமான பொம்மைக் கடைகள், அலங்காரப் பொருள்கள் விற்கிற நிறுவனங்கள், உயர்தர ஆடை நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் வானளாவ நின்றுகொண்டிருந்தன.  நிலவின் மறுபுறம் இருளாகத்தானே இருக்கும்?  எங்களுடன் வந்திருந்த ஒருவர் சொன்னார்… போதைப் பொருள்களின் நடமாட்டமும், பெண்களை வைத்து நடத்தும் வாணிபமும் இதே இடத்தில்தான் மறைவாக நடந்துகொண்டிருக்கின்றன, இதே பகுதியில்தான் ஒரு பிச்சைக்காரர் தடித்த கம்பளி ரஜாய் உள்ளிட்ட ஏற்பாட்டோடு படுத்தபடியே ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் டாலர்கள் போடுபவர்களுக்கான அவரது தொப்பி.  நம்முடைய நாட்டில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் வீடு இல்லாமல் காலத்தை ஓட்டும் பலரைப் பார்க்க முடியும்.  ஆனால், உடலை ஊசிகளால் துளைத்தெடுக்கும் குளிர்ப் பிரதேசத்தில் இவர்களைப் போன்றவர்கள் எப்படி வீடு இல்லாமல் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.  இத்தனைக்கும் வீடற்றவர்களுக்காக வாடகைக்கு வீடு எடுத்துக்கொள்ள வசதிகள் செய்து தந்ததாம் கனடா அரசு. எப்போதோ குறித்திருந்த அந்தப் பணத்தின் அளவு இப்போது போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு சிலர் தெருவிலேயே ஸ்கேட்டிங் செய்துகொண்டிருந்தார்கள்.  மிக வேகமாக வந்து திடீரென படிகளில் வழுக்கியபடியே ஏறுகிறார்கள்.  இளைய வயசுச் சாகசம் மயிர்க் கூச்செறிந்தது.  விழுந்தால் என்னாவது என்று யோசிக்கவே கூடாது.  யோசித்தால் ரசிக்க முடியாது.  அப்படி வருபவர்கள் கால் சக்கரங்களில் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.  வேறு எதையுமே அவர்கள் கவனித்தாகத் தெரியவில்லை.  விளையாட்டு வீரர்கள் போல் தோற்றமளித்த இளைஞர்களும், யுவதிகளும் தலையில் ஹெல்மட் அணிந்தபடி சர்வ சாதாரணமாகச் சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.  அங்கங்கும் இரண்டு மூன்று சக்கரங்கள் அடுத்தடுத்துப் பொருத்தியிருந்தார்கள்.  அதில் சிலர் தங்கள் சைக்கிளை வைத்துப் பூட்டிச் செல்கின்றனர்.  சைக்கிள்களைப்  பொது இடங்களில் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடு. அங்கு ஒரு பெரிய கலையரங்கம் இருந்தது.  அன்றைக்கு வெள்ளிக் கிழமை என்பதாக நினைவு.  அன்று ஒருநாள் பார்வையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது.  நன்கொடையாக ஐம்பது டாலர்கள் கொடுத்து நான்குபேரும் உள்ளே நுழைந்தோம்.  ஒரு மாடியில் முழுக்க முழுக்கப் பெண்களின் நிர்வாண பிம்பங்களைத் தீட்டி வைத்திருந்தார்கள்.  அங்கு கூச்சம் ஒரு பிரச்சனையே இல்லை. வெகு இயல்பாக ரசித்துச் செல்கிறார்கள்.  மற்ற இரண்டு மாடிகளில் ஒன்றில் பொறியியலை இணைத்த ஓவியக் கூடம்.  முழுக்க முழுக்க இரும்புப் பொருள்களை இணைத்து இணைத்து வட்டமும் கூம்பும் சேர்ந்தது மாதிரி ஒரு பெரிய வடிவத்தை வடித்திருந்தார்கள்.  அதனை ஊடுருவி உள்ளே செல்வது மாதிரி ஏராளமான விளக்குகள்.  வெளியே இருந்து பிரம்மாண்டம் காட்டிய அந்த வடிவத்துக்குள் சென்று பார்த்தால் மிகச் சின்னதாகத் தோற்றம் காட்டுகிறது.  ஏழெட்டு முறை “உள்ளே வெளியே”  போய்ப் பார்த்த பிறகும் அப்படியே தான் தெரிந்தது.

 பௌதிகத்தை இணைத்து ஓவியத் திறனை வேறு விதமாகப் பயன்படுத்துகிறார்கள்.  இன்னொரு இடத்தில் வேதியலையும் ஓவியத்தையும் இணைத்துக் கலை வெளிப்பாட்டினைக் காட்டியிருந்தார்கள்.   பிறிதொரு இடத்தில் சப்த ஜால வேறுபாடுகள்.  இப்படி அந்த அரங்கம் முழுவதும் விஞ்ஞானத்தின் துணையுடன் கலையை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருந்ததைப் பார்க்க முடிந்தது.  அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் ஒரு ஓவியக் கூடம்.  விற்பனைக்காகப் பல்வேறு ஓவியங்கள், சிலைகள், பொம்மைகள், பொருள்கள். ஒரு மூன்று மணிநேரத் திரைப்படத்தைப் பார்த்துவந்த களைப்பு கண்களைத் தின்ன ஆரம்பித்தது.  வெளியே வந்தோம். அரங்கத்தையொட்டிய ஒரு தாழ்வான பகுதியில் இளைஞர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.  எல்லொருமே மைக்கேல் ஜாக்சன்களாகவும், பிரபு தேவாக்களாகவும் இருந்தார்கள்.  பெண்களும் உடன் மிகச் சிறப்பாக நடனம் ஆடினார்கள். பக்கத்தில் ஒரு இசைப் பெட்டி ஒலித்துக் கொண்டிருக்க தன் நிலை மறந்த வெறிக் கூத்து என்பார்களே அப்படியொரு வேகத்தில் சுழல் நடனம். அங்கு ஒரு உணவு வளாகத்தில் உணவை முடித்துக் கொண்டு  மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  

ரயில் நிலையத்தில் ஒருவரைப் பார்த்தேன்.  அவர் மிக நேர்த்தியாக உடையணிந்திருந்தார்.  இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய பைகளில் காலி குளிர்பானக் குப்பிகளையும் இதர நெகிழிக் குப்பைகளையும் சேகரித்துக் கொண்டிருந்தார்.  அவரும் காம்பஸ் கார்டு எனப்படும் பயணி அட்டையை உபயோகித்துத்தான் ரயிலேறுகிறார்.  எங்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.  எல்லா கனடா மக்களும் எதிரில் நேருக்கு நேர் பார்க்கிறபோது ஹாய் சொல்லி புன்னகைக்கிறார்கள்.  ஆனால் யாரும் பேசுவதில்லை.  ஹாய் சொன்னாலே பேசிவிட்ட திருப்தியில் நகர்ந்துவிடுவார்கள் போலும்.  இந்த நபர்தான் எங்களுடன் உரையாடினார்.  இவர் மட்டும்தான் தானாகப் பேச முன்வருகிறார்.  நம்மூரில் ஒரு கோணியைப் பின்னால் போட்டுக் கொண்டு நாலைந்து நாய்கள் குரைத்துக் கொண்டேவர ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகக் கிளறி வாழ்க்கை நடத்துகிற அந்த நபர்கள் என் கண்முன் கணநேரம் தோன்றி மறைந்தனர். வீட்டிற்கு வந்தும் உறங்க வெகுநேரமாயிற்று.  டவுன் டவுனின் அத்தனைக் காட்சிளும் மனதில் பொம்மைகள் போல ஊர்ந்து சென்றன.

  -பயணிப்போம்

;