election2021

img

திமுக அணி மகத்தான வெற்றி.... வீழ்ந்தது அதிமுக ஆட்சி....

சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைகிறது. 

ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2 ஞாயிறன்று நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பெட்டிகள் வரிசை மாற்றம், கண்ட்ரோல் யூனிட்டுகள் திடீர் கோளாறு உள்ளிட்ட சிற்சிலபிரச்சனைகள் நிலவின. எனினும் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடனும் பரபரப்புடனும் நடந்தது.நிமிடத்திற்கு நிமிடம் நிலவரங்கள் மாறிக் கொண்டே இருந்தன. துவக்கம் முதலே திமுக தலைமையிலான அணி முன்னிலைபெற்றது. தொடர்ந்து திமுக அணி வெற்றிமுகத்திலேயே இருந்தது.

இரவு 7.15 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 155க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. அவற்றில் 105 இடங்கள் வெற்றி என அறிவிக்கப்பட்டிருந்தது. 50 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இதில் 122 இடங்களில்திமுக; 17 இடங்களில் காங்கிரஸ்; இரண்டு இடங்களில் சிபிஎம், இரண்டு இடங்களில் சிபிஐ, நான்குஇடங்களில் விசிக, நான்கு இடங்களில்மதிமுக ஆகிய கட்சிகள் முன்னிலை பெற்றன. அதிமுக தலைமையிலான கூட்டணி 79 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 39 இடங்களில் வெற்றிஅறிவிக்கப்பட்டிருந்தது. 79ல், அதிமுக69 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும், புதிய பாரதம் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றிருந்தன.கோவை தெற்கு தொகுதியில் மாலை வரை மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் அத்தொகுதி யில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னிலை பெற்றார்.

திமுக அணியில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், இரவு 7 மணி நிலவரப்படி 60ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் முன்னிலை பெற்றார். அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் 80ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்வேட்பாளர்கள் - தளி தொகுதியில் ராமச்சந்திரனும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்துவும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் - நாகையில் ஆளூர் ஷா நவாஸ் வெற்றிபெற்றார். 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக அணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்த் விஜயகுமார் ஒரு லட்சத்திற்கும்அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகத்தில் இருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் மண்ணைக் கவ்வினார். 

குவியும் வாழ்த்து
தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க  உள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவரைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்தி திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்திருக்கும் தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். (செய்தி : 3)

அமைச்சர்கள் படுதோல்வி
இத்தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, சரோஜா, டி.ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் படுதோல்வி அடைந்தனர்.

;