districts

பள்ளியில் நாட்டுக்கோழி வளர்ப்பு விவகாரம் கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுத்திடுக! சிபிஎம் வலியுறுத்தல்

கரூர், பிப்.5 - பள்ளி மாணவர்கள் நாட்டுக் கோழி வளர்க்க வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்திய கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் சமீபத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்துள்ளார். இத்திட்டத்தை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் செயல்படுத்த செயல்முறை ஆணையும் விதித்துள்ளார். சமீப காலமாக இவருடைய செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

யாருடைய வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட அதிகாரி இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்கிறார் என்பது புரியவில்லை. பள்ளிகளில் கல்வியை போதிப்பதற்கு பதிலாக கோழிப்பண்ணை அமைப்பதற்கு யார் இவருக்கு  அதிகாரம் கொடுத்தார்கள்? இவருடைய இத்தகைய கல்வி விரோத நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், இது போன்ற செயல்பாடுகள் எதிர்காலத்தில் நடக்காத வண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் கோட்பாடுகளுக்கு களங்கம் விளைவிக்க கூடிய முறையில் தன்னிச்சையாக முடிவெடுத்து, சுற்றறிக்கை வெளியிட்ட கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாரின்  நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கட்சியின் கரூர் மாவட்டக் குழு கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;