தலையங்கம்

img

தேசியக் குடிமக்கள் பதிவேடு:  மக்களிடையே பிளவை உண்டாக்கும் முயற்சி

பொழுதுபோய், பொழுது வந்தால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இதர பாஜக தலைவர்களும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதுக்குமாக தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாடு முழுமைக்குமான தேசியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களும், ஏன் சில அரசியல் கட்சிகளாலும்கூட சிந்தித்துக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், அதற்கான வேலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் விட்டது.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிற்காக கணக்கிடும் பணியுடன் இதுவும் தொடங்கும். மத்திய அரசாங்கம் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைத் தயாரித்திடவும் மேம்படுத்திடவும் தீர்மானித்திருப்பதாக, சென்ற ஜூலையில் குடிமக்கள் பதிவு ரிஜிஸ்ட்ரார் ஜெனரலால் (Registrar General of Citizen Registration) ஏற்கனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

இதற்காக, அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிர இதர மாநிலங்கள் அனைத்திலும் வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கிவிட்டது. இக்கணக்கெடுக்கும் பணி 2020 ஏப்ரல் முதல் தேதிக்கும் செப்டம்பர் 30க்கும் இடையே மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைத் தொகுப்பது என்பது தேசியக் குடிமக்கள் பதிவேட்டைத் (NRC) தயாரிப்பதை நோக்கி, காயை நகர்த்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கையாகும். தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் அடிப்படையில், முறையான சரிபார்த்தலுக்குப்பின், இந்தியக் குடிமக்களுக்கான உள்ளூர் பதிவேடு (Local Register of Indian Citizens) அமைந்திடும். 2003ஆம் ஆண்டு குடிமக்கள் (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகள்) விதிகளின் (“Citizenship (Registration of Citizens and of National Identity Cards) Rules) கீழ் உருவாக்கப்பட்டிருக்கிற செயல்முறையின்படி இது மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஆகையால், 2020 ஏப்ரல் 1இலிருந்து, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான செயல்முறையும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிற்காக, வீட்டிற்கு வீடு வந்து கணக்கெடுக்கும் பணியுடன் தொடங்கிடும்.

இதுதொடர்பாக முக்கியமாகக் குறித்துக்கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விதிகளின்படி, சரிபார்க்கும் செயல்முறை நடைபெறும் சமயத்தில், பதிவுசெய்யப்படுகின்ற நபர்களின் குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கும்பட்சத்தில், அவர் தொடர்பாக தனியே, மக்கள்தொகைப் பதிவேட்டில் ‘மேலும் விசாரணை செய்யப்படவேண்டும்’ எனத் தனியே குறித்துக்கொள்ளப்பட்டு, அவ்வாறு குறித்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு, அல்லது அவர் குடும்பத்தினருக்கு,  அவர்கள் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று சரிபார்த்தல் நடைமுறை முடிந்தபின்னர் தெரிவிக்கப்படும் என்பதாகும்.

மேலும் மேற்படி விதிகளில் உள்ள மற்றொரு பிரிவான 5(a) என்பது,

“(4)ஆவது உட்பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிற ஒவ்வொரு நபரும் அல்லது குடும்பமும், இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டில் அவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சேர்ப்பது அல்லது சேர்க்காமல் தவிர்ப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, குடிமக்கள் பதிவு உதவி-மாவட்டம் அல்லது வட்டப் பதிவாளரால் கேட்கப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்,”  என்று கூறுகிறது.

தேசியக் குடிமக்கள் பதிவேடு தொகுப்பதன் நோக்கம், வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்களை நீக்குவதற்காக என்று பாஜக வெகுகாலமாகவே கூறிவருகிறது. 2003இல் வாஜ்பாயி அரசாங்கம் இருந்த சமயத்தில்தான் 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. முதன்முதலாக, ஒரு தேசியக் குடிமக்கள் பதிவேடு என்னும் கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு தேசிய அடையாள அட்டை அளிக்கப்பட வேண்டும் எனவும் கட்டாயமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், குடிமக்கள் பதிவுக்கான விதிகள் பின்னர் வெளியிடப்பட்டன. இவை, மக்கள்தொகைப் பதிவேட்டினைக் கொண்டுவந்தது.

2003ஆம் ஆண்டிலேயே 13 மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள்தொகைப் பதிவேட்டிற்கான திட்டங்கள் துவங்கப்பட்டுவிட்டன. ஆயினும், பாஜக இதனைத் தொடர முடியவில்லை. காரணம் 2004இல் நடைபெற்ற தேர்தலில் அது தோல்வியடைந்தது. ஐமுகூ அரசாங்கத்தின்கீழ், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின்கீழ் நபர்தகளைப் பதிவு செய்யும் பணியும், அடையாள அட்டைகள் வழங்குதலும் தொடர்ந்தது. ஆயினும், பின்னர், இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின்கீழ்,(Unique Identification Authority of India) ஆதார் திட்டம் வந்ததைத் தொடர்ந்து தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணி கிடப்பில் போடப்பட்டது. ஆதார் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இப்போது மோடி அரசாங்கம் மீண்டும் கணக்கெடுக்கும் பணியை புதுப்பித்திருக்கிறது. அமித் ஷா வங்கதேசத்திலிருந்து “ஊடுருவியிருப்பவர்கள்” அனைவரும் ஒழித்துக்கட்டப்படுவார்கள் என்று பேசிக்கொண்டிருப்பதிலிருந்து, தேசியக் குடிமக்கள் பதிவேட்டின்கீழ் மேற்கொள்ளும் செயல்முறைகள் அனைத்தும் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தினரைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அவர்களை மேலும் எந்த அளவுக்கு சிறுமைப்படுத்த முடியுமோ சிறுமைப்படுத்தி, எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு குடியுரிமை அளிப்பதிலிருந்தும் நீக்கிட வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாகும்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு பணிகள் தொடங்குவதற்கு முன்னர், மோடி அரசாங்கம், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருக்கிறது. இத்திருத்தங்கள் மூலமாக பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானம் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக வந்திருக்கின்ற இந்துக்கள், கிறித்தவர்கள், புத்திஸ்டுகள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினர் அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் குடியுரிமை பெறத் தகுதி பெற்றுவிடுவார்கள். இதன்மூலம் முஸ்லீம்களை மட்டும் குறிப்பாக ஒதுக்கி வைத்திட வேண்டும் என்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.

பாஜகவின் சூழ்ச்சித்திட்டம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மத அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு பக்கத்தில், தேசியக் குடிமக்கள் பதிவேடு வங்க தேசத்திலிருந்து வந்துள்ள “முஸ்லீம் ஊடுருவலாளர்கள்” அனைவரையும் ஒழித்துக்கட்டும் என்று கூறுகிறார்கள். மறுபக்கத்தில், குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் புலம்பெயர்ந்து வந்துள்ள இந்துக்கள் அனைவருக்கும் குடியுரிமை அளிக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பது அம்மாநிலத்தில் நிலவிவந்த குறிப்பிட்ட வரலாறு மற்றும் அரசியல் நிலைமையின் வெளிப்பாடாகும். 1971 மார்ச் 24க்கு முன்பு அம்மாநிலத்திற்குள் வந்த அனைவரும் குடிமக்கள்தான் என்று அஸ்ஸாம் ஒப்பந்தம் தீர்மானித்திருந்தது.  1951இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேசியக் குடிமக்கள் பதிவேடு பெற்றிருந்த ஒரேயொரு மாநிலம் நாட்டில் அஸ்ஸாம் மட்டும்தான். இவ்வாறு, அங்கே தேசியக் குடிமக்கள் பதிவேடு மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இறுதிப்பட்டியல், குடியுரிமை கோரியிருந்தவர்களில் 19 லட்சம் (1.9 மில்லியன்) பேரை விலக்கி வைத்திருக்கிறது. இந்தப் பிழையான பட்டியல் மதவெறியர்களின் தலைமையிலான ஆட்சியில் குடியுரிமைப் பதிவில் உள்ள ஆபத்துக்களையும், பிரச்சனைகளையும் காட்டுகிறது.  

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் பெரும்பகுதியினரை ஆதார் அடையாள அட்டை ஏற்கனவே பதிவு செய்துவிட்ட பின்னணியில்தான் இப்போது தேசியக் குடிமக்கள் பதிவேடு செயல்முறையும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்தல் அடையாள அட்டையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு குடியுரிமைப் பதிவுக்கான அவசியமும் அடையாளமும் அதீதமான ஒன்றேயாகும். தேவையில்லாமல் அதிக அளவில் செலவுபிடிக்கக்கூடிய ஒன்றுமாகும். தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பது புலம்பெயர்ந்த, தொலைதூரக் கிராமங்களில் வாழ்கின்ற மற்றும் இதர இனத்தினரில் உள்ள ஏழை மக்களுக்கு எதிரானதும், அவர்கள் தங்களைப் பதிவுசெய்து கொள்ளவேண்டுமென்றால், அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரச் சுமையைத் தரக்கூடிய ஒன்றுமாகும்.

பாஜக மோடி அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக, தேசப் பாதுகாப்பு என்ற  பெயரிலும், “அந்நியர்கள்” என்ற பெயரிலும்  பிளவுவாத பிரச்சனைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கிறது. இரண்டு குறிக்கோள்களின் அடிப்படையில் இதனை இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒன்று, மக்கள் மத்தியில் ஒரு பிரிவினர் மத்தியில் பாதுகாப்பற்ற சூழலையும் அச்சத்தையும் உருவாக்குவது. மற்றொன்று, மிகவும் வேகமாக சீர்கேடு அடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது.

வேலையிழப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்துகொண்டிருக்கிற நிலையில், மக்களின் துன்பதுயரங்கள் சொல்லொண்ணா அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், இந்துத்துவா ஆட்சியாளர்களோ நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்களுக்கான எதிரிகளைக் காண வேண்டிய நிலையில் இருந்து வருகிறார்கள்.

(அக்டோபர் 16, 2019)

(தமிழில்: ச. வீரமணி)

 

 

 

;