அறந்தாங்கி அரசு கல்லூரி கூடுதல் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
அறந்தாங்கி, மே 20- ஆவுடையார்கோவில் அருகே, பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித் துறை சார்பில், காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை அடுத்து, கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை வகித்து பேசினார். அறந்தாங்கி ஆர்.டி ஒ சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏவும் ஆவுடையார் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் உதயம் சண்முகம், குத்துவிளக்கு ஏற்றி பேசினார். பொதுப்பணி துறை கட்டுமானம் உதவி செயற்பொறியாளர், அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா உட்பட கல்லூரி அலுவலக பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று கிராமங்களில் நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு
அரியலூர், மே 20- அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம், ஓட்டக்கோவில், விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, புதிய நியாய விலைக் கட்டடங்களை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு அத்தியவாசியப் பொருள்களை வழங்கி பேசினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சாய்நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அம்மாபட்டினத்தில் கோடைகால நல்லொழுக்க பயிற்சி நிறைவு சான்றிதழ், பரிசுகள் வழங்கல்
அறந்தாங்கி, மே 20- புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 சார்பாக கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் நிறைவடைந்ததை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந் பயிற்சி முகாம், மே 3 முதல், மே 17 வரை தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்றது. முகாமில் 150 மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழா வில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைகேட்புக் கூட்டம்
அரியலூர், மே 20- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 293 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலிகருவியை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இசைத்துறையில் சேர்ந்து படிக்க வாய்ப்பு
திருச்சிராப்பள்ளி, மே 20-
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய துறைகளில் பயிலுவதற்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம் மற்றும் தவில் துறைகளில் பயில எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானதாகும். இசைப்பள்ளியில் பயிற்றுவிக்கபடும் சான்றிதழ் படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும்.
இதில் பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.350-செலுத்திட வேண்டும். இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், வெளியூர் மாணவர்கள் அரசு விடுதியில் இலவசமாக தங்கி பயிலவும், பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.
மூன்று ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும் நாதசுரம், தவில் கலைஞராக வாசித்து தொழில் புரியவும், தேவார ஓதுவாராக கோயில்களில் பணிபுரியவும், வானொலி, தொலைக்காட்சிகளில் நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட அரசு இசைப்பள்ளிகளில் தேவாரம் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இருபாலருக்கும் முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. எனவே கலை ஆர்வம் மிக்க மாணவ மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.32. மூலத்தோப்பு, மேலூர் ரோடு, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-620006 என்ற முகவரியிலும் மற்றும் 9486152007, 0431-2962942 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.