தமிழகம்

img

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தேவை: முதலமைச்சர்

சென்னை:
மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சென்னை தலைமை செயலத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளுடன் மே 29 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க 6 முறை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் தொற்று அதிகம் பரவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.  உலக நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். நோய் அறிகுறி தென் பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்காத நிலையிலும் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் பட வேண்டாம். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அரசின் சொந்த செலவில் இரண்டு லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்  சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்கள் 35.65 லட்சம் பேருக்கு இரண்டு தவணையாக நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.  3,371 வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் பீலாராஜேஷ், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் , காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

;