அரசியல்

img

மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரானால் அதற்கு முழுப் பொறுப்பும் ராகுல் காந்தியாகும் - அரவிந்த் கேஜரிவால்

புதுதில்லி, மே 10-

ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரானால் அதற்கு முழுப் பொறுப்பு ராகுல் காந்தியாகும் என்று தில்லிமாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது அரவிந்த் கேஜரிவால் இவ்வாறு கூறினார். அப்போது மேலும் அவர் கூறியதாவது:

“காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் போராட்டத்தை சீர்குலைக்கும் விதத்திலேயே போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, பாஜகவிற்கு எதிராகப் போராடாமல், அங்கே வலுவாகவுள்ள எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவே போராடிக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி – சமாஜ்வாதிக் கட்சிக் கூட்டணிக்கு எதிராகவும், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகவும், ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சிக்கு எதிராகவும், தில்லியில் எங்கள் கட்சிக்கு எதிராகவும்தான் போராடிக் கொண்டிருக்கிறதே யொழியே பாஜகவிற்கு எதிராக அல்ல.“

இவ்வாறு அரவிந்த் கேஜரிவால் கூறினார். தேர்தலுக்குப்பின்பு, இதர கட்சிகளுடன் கூட்டணிக்கு சாத்தியம் உண்டா என்று செய்தியாளர் கேட்டபோது, “எங்கள் குறிக்கோள், மோடி-அமித்ஷா கும்பலை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வது என்பதேயாகும். இதற்காக வேறெவராக இருந்தாலும் ஆதரிப்போம்,” என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

(ந.நி)


;