tamilnadu

img

உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தை தொடங்கி வைத்தவர் மார்க்ஸ்

சேலம்:
அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் ஒன்று சேர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற நம் அடிப்படை அரசியல் சட்டக் கோட்பாட்டைப் பாதுகாப்ப தற்கான போராட்டத்தையும் நடத்துவோம் என சேலத்தில் நடைபெற்ற காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் பிரகாஷ் காரத் அறைகூவல் விடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழா நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மனித குலத்தின் விடியலுக்கான வழிகாட்டி மாமேதை காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் திங்களன்று சேலத்தில் நடைபெற்றது. கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் காரல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

உலகில் விஞ்ஞான சோசலிசத்தை தோற்றுவித்த காரல் மார்க்சின் சிலையை சேலத்தில் திறந்து வைத்திட வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரை மனிதர் சுரண்டாத சமூகத்தை எப்படிஉருவாக்குவது, சமூக மாற்றத்தை எப்படிஏற்படுத்துவது என்ற மார்க்ஸின் சிந்தனைகள், தத்துவத்தில் இருந்துதான் உலக அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானது.  உலகளாவிய பாட்டாளி வர்க்க இயக்கத்தை வெற்றிகரமான முறையில் தொடங்கி வைத்தவர் காரல் மார்க்ஸ்.

விடுதலைப் போராட்டத்தில்  முகிழ்த்த இயக்கம்
ரஷ்யப் புரட்சியின் மூலம் உலகில் முதல் சோசலிச சமுதாயம் ஏற்பட்டதைப் பார்த்து, அந்தப் பாதைதான் விடுதலைக்கான ஒரே வழி என்று, இந்திய விடுதலைப் போராட்டத்தில்உதித்தது கம்யூனிஸ்ட் இயக்கம். மகத்தான தியாகம், எண்ணற்ற போராட்டங்களின் மூலம் உருவான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்திய விடுதலைப்போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், அதற்கு ஆதரவாக இருந்த நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் நீண்ட போராட்டத்தை நடத்திய வரலாறு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. 1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதில் இருந்தே  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கடும் அடக்குமுறையை ஏவியது. 1934இல் இருந்து நாடு விடுதலை பெறும் வரை தடையைச்  சந்தித்தே கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேறியது. அதேசமயம் 1925ஆம்ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடு விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடை விதிக்கப்படவில்லை. எந்த அடக்குமுறை யையும் சந்திக்கவில்லை. ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த ஒரேயொருவர் கூட வெள்ளை ஆட்சியை எதிர்த்து தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றதில்லை. இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

காந்தியைக் கொன்ற மதவெறியர்கள்
ஏனென்றால் ஆர்எஸ்எஸ் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களை முதன்மையான எதிரியாகப் பார்க்கவில்லை. அவர்கள் முஸ்லிம்களை எதிரிகளாக கருதினார்கள். மேலும் நாடு விடுதலை பெற்றால் மீண்டும் முஸ்லிம்கள் ஆட்சி வரும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். மகாத்மா காந்தி வலியுறுத்திய இந்து முஸ்லிம்ஒற்றுமையை எதிர்த்துத்தான் அவரை சுட்டுக்கொன்றார்கள். 1948இல் காந்தி படுகொலைக்குப் பிறகுதான் சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அந்தஅமைப்புக்குத் தடை விதித்தபோது, உள்துறை அமைச்சர் சர்தார் படேல், காந்தி படுகொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது என்றார்.தேச விடுதலைப் போராட்டத்தில் மகத்தான தியாகம் செய்தது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி இருந்தது ஆர்எஸ்எஸ். நாட்டைப் பிளவுபடுத்தும் தீவிர வகுப்புவாத அரசியலை முன்னெடுத்தது. நம் நாட்டின் அரசியல் சட்ட வரைவை அம்பேத்கார் தலைமையிலான குழுவினர் உருவாக்கியபோது, இது இந்திய நிலைமைக்குப் பொருத்தமானது அல்ல, மனுஸ்மிருதி அடிப்படையில் அமையவில்லை என்று கூறியது ஆர்எஸ்எஸ். இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.இன்றைக்கு பாஜக இரண்டாவது முறைஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை எல்லா வழியிலும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. 

மதவாதிக்கு பாரத ரத்னாவா?
மகாராஷ்டிரா மாநில சட்டசபை பாஜகதேர்தல் அறிக்கையில் இந்து மகாசபை தலைவர் வி.டி.சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என கூறப்பட்டுள்ளது. இந்தியா இந்து தேசம், முஸ்லிம் தேசம் எனஇரு தேசங்களாக உள்ளன என்று முதன்முதலில் கூறியவர் சாவர்க்கர்தான். முகமது அலி ஜின்னா இரு தேசக் கோட்பாட்டைச் சொல்வதற்கு வெகு முன்னரே சாவர்க்கர் இதைச் சொன்னார். இவ்வாறு மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த நினைத்தவருக்கு பாரத ரத்னா விருது தருவதாக பாஜக சொல்கிறது.மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடுகிறது. பாஜக அரசும் கொண்டாடுகிறது. காந்திஇந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டதற்காக அவரை துரோகி எனச் சொன்னவர் சாவர்க்கர். காந்தி படுகொலை வழக்கில் கோட்சேயுடன் சேர்ந்து வழக்கு விசாரணையைச் சந்தித்தவர் சாவர்க்கர். இந்த கொலை சதியில் அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை என்று விடுவிக்கப்பட்டவர் சாவர்க்கர். எனவேதான் அமித் ஷா, மோடி சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது தர நினைக்கிறார்கள். இந்தியாவை முழுமையான இந்து ராஷ்டிரமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

திசை திருப்பும் மோடி அரசு
இவையெல்லாவற்றையும் தேசியம், தேசியவாதம் என்ற பெயரில் செயல்படுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் மக்களும், நம் நாடும் உண்மையான பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறது. இதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்குத்தான் இதைச் செய்கிறார்கள். ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. இது பொருளாதாரத் தேக்கத்தில் சிக்கும் நிலை உள்ளது. பொருளாதாரம், தொழில்துறை உற்பத்தி எல்லாம்  கிராக்கி இல்லாமல் நலிந்துள்ளன. பல லட்சம் பேருக்கு வேலையில்லை. ஆட்டோமொபைல், ஜவுளித் தொழில் உள்பட பல தொழில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதேபோல் கிராமப்புறப் பகுதிகளில் ஏழைமக்கள், விவசாயிகள் துயரம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.எனவே மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து மக்களை அணிதிரட்டி, ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை நாம் நடத்த வேண்டும். கார்ப்பரேட், சர்வதேச நிதிமூலதனக் கும்பலின் ஆட்சியாக பாஜக அரசு செயல்படுவதற்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டிப் போராடுவதுடன்,  மதச்சார்பற்ற அனைத்து ஜனநாயகசக்திகளையும் ஒன்று சேர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற நம் அடிப்படை அரசியல் சட்டக் கோட்பாட்டைப் பாதுகாப் பதற்கான போராட்டத்தையும் நடத்துவோம். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.அவரது ஆங்கில உரையை கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.சிங்கார வேலு தமிழில் மொழி பெயர்த்தார்.

செய்தி தொகுப்பு : கோவை அ.ர.பாபு, வே.தூயவன். 
படங்கள் : சேலம்  எழில். 

;