tamilnadu

img

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற ஊறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

கொரோனா காலத்தில் பொது சுகாதாரத்துறையின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்ற சிறப்பு திட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்ற பாராட்டுக்குரிய அறிவிப்பினை வெளியிட்டீர்கள்.

அதன் தொடர்சியாக தமிழகம் முழுவதும் உயிர் காக்கும் சேவையை இரவு பகலாக செய்து கொண்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை மேலும் திறம்பட செயலாற்ற இந்த அறிவிப்பு மிக பயனுள்ளதாக இருக்கும். எனவே 108 சேவையை வழங்கும் நிறுவனத்தின் வழியாகவோ, நேரடியாகவோ இச்சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கென்று தீர்மானிக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸில் அனைத்து வகையான ”கொரோனா கிட்” வழங்கப்பட்டுள்ளது.  மற்ற ஆம்புலன்ஸ்களுக்கும் போதுமான முககவசம் உள்ளிட்ட  பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 33 ஆம்புலன்ஸ்களில் 5 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளை கையாள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஊழியர்களுக்கு அனைத்துவகை பாதுகாப்பு உபகரணங்கள்  கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்புலன்ஸ்களில் போதுமான அளவு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை.
எனவே மாநிலம் முழுவதும் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களையும், ஒருமாத சிறப்பு ஊதியத்தையும் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

;