tamilnadu

img

மீண்டும் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம்

மாநகராட்சி  - சுகாதாரத்துறை மோதலால் பீலாராஜேஷ் மாற்றம்

சென்னை, ஜூன் 12- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம் செய்யப் பட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலராக 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முதல்  பதவி யில் இருந்த வந்த  பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து,புதிய சுகாதார செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ஜெ.ராதாகிருஷ்ணன் முதன்மை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பதவியை மேலும் உத்தரவு வரும் வரை முழு கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் 2012 முதல் 2019 பிப்ரவரி வரை எட்டாண்டு காலம் சுகாதாரத் துறை செயலாளராக இருந்தார். பின்னர் போக்குவரத்து செயலாளராக மாற்றப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து கொரோனா பரவல் சிறப்பு அதிகாரி யாக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருந்தார். நெருக்கடி நிலைகளை சிறப்பாக கையாளும் நிபுணராக நன்கு அறியப்பட்டவர் ஜெ.ராதா கிருஷ்ணன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர். துரிதமாக செயல்படக்கூடியவர். துல்லியமாக முடிவெடுக்கக் கூடியவர்.  இழுத்துப் போட்டு வேலையை செய்வார். அதைவிட ஒருங்கிணைப்பில் வல்லவர் என்பதால் மீண்டும் அவருக்கு இந்த பொறுப்பு தேடி வந்துள்ளது.

பீலா ராஜேஷ் மாற்றத்தின் பின்னணி

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் துவக்க கால கட்டத்தில் சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் உடன் தினமும் மீடியாக்களில் அதிகம் இடம் பிடித்து வந்தவர் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்.

வைரஸ் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிக ரித்து வந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் என்னவானார்? என்பது குறித்து பெரும் விமர்சனம் எழுந்தது. தினமும் செய்தியாளர்கள் சந்திப்பில் துறையின் செயலாளர் மட்டுமே விளக்கம் அளி த்து வந்ததால் அமைச்சர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, ஊடகங்களில் துறை அமைச்சர் தனது முகத்தை மீண்டும் காட்டத் துவங்கினார். சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஒமந்தூ ரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மார்ச் 25-க்குப் பிறகு ஜூன் 11ஆம் தேதி வரை நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற குரல் வலுவாக எழுந்துள்ளது.

இதற்குக் காரணம், சுமார் 400 கொரோனா இறப்புகள் மறைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழ கத்தில் ஜூன் 11 நிலவரப்படி கொரோனாவால் 349 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் 279 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் கொரோனா இறப்பைக் குறைத்துக் காட்டுவதாகப் புகார் கிளம்பியது. 

சிறப்புக்குழு அமைக்கும் உத்தரவு

இதற்கிடையில், பெரம்பூர் ரயில்வே மருத்துவ மனையில் கொரோனாவால் உயிரிழந்த 20 பேர் பற்றிய மருத்துவ விவரங்களை தமிழக சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஆனால், மருத்துமனை தரப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆக,சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தமிழக சுகாதாரத்துறை நிர்வாகத்துக்கும் இடையே கடந்த இரண்டு மாதகாலமாகப் பனிப்போர் நிலவி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக சிறப்புக் குழுவை அமைத்து இறப்பு எண்ணிக்கை யைச் சரிபார்க்க சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டார். அந்த உத்தரவுதான் அவரது பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது என்றும் செய்திகள் உலா வருகின்றன.

சென்னையைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, சென்னையில் மட்டும் அதிகமாக இருக்க மாநகராட்சியின் நிர்வாகக் குளறுபடிதான் காரணம் என்று தமிழக சுகாதாரத்துறை குற்றம்சாட்டியது. மாநில சுகாதாரத்துறை நிர்வாகத்தின்கீழ் சென்னை மாநகராட்சி ஆணையர் வருவதால் சென்னை மாநகராட்சி பற்றி செய்தியாளர் சந்திப்பில் பீலா ராஜேஷ் புகார் சொல்வதாக சென்னை ஆணையர் பிரகாஷ் தரப்பில்  முதல்வரி டம் புகார் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் ஆணையர் பிரகாஷ் என்பதால், `கொரோனா இறப்புகளை அரசு மறைக்கவில்லை’ என்று திரும்பத் திரும்ப முதல்வர் எடப்பாடி பழனி சாமி கூறி வந்தார். சிறப்புக் குழுவை அமைப்பது பற்றி முன்கூட்டியே முதல்வரிடம் பீலா ராஜேஷ், ஆலோ சனை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், முதல்வர் அலுவலகத்துக்கும் சுகாதாரத்துறைக்கும் பிரச்சனை வெடித்தது. அதன் எதிரொலியாகத் தான், பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


 

;