tamilnadu

img

குழந்தைகளையும் விட்டு வைக்காத மோடி அரசு....பள்ளிக் கல்விக்கான நிதியில் ரூ. 3 ஆயிரம் கோடி வெட்டு?

புதுதில்லி:
நடப்பு 2019-20 நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளுக்காக  56 ஆயிரத்து 536 கோடியே63 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தநிலையில், அதில் தற்போது ரூ. 3 ஆயிரம் கோடியைகுறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உயர் கல்வியைப் போல அல்லாமல் பள்ளிக் கல்விக்கான நிதியானது அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாக மட்டுமே கிடைப்பதால் அதைச் சார்ந்தேகல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில்தான், பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சகம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தியுள்ளது.அப்போது, ‘பள்ளிக் கல்விக்கான நிதியில் கைவைக்கக் கூடாது’ என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. “பள்ளிக்கல்வித் துறைக்கு முழு நிதியையும் வழங்க வேண்டும். ஏனெனில் பள்ளிக்கல்வித் துறையானது, வேறு வகையில் நிதி திரட்டுவதற்கு வழிகள் இல்லை; மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மட்டுமே ஆதாரம்” என்று எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்துதான் ‘சமக்ர ஷிக்‌ஷா அபியான்’ உள்ளிட்ட கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்றவற்றுக்கும் நிதி செலவிடப்படுகிறது. அப்படியிருந்தும் அரசு ஆசிரியர்கள் பலருக்கு ஊதியம் கிடைக்காமல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் பள்ளிக் கல்விக்கான நிதியைக் குறைத்தால் கல்விச் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனாலும், ரூ. 3 ஆயிரம் கோடியை, திரும்பப் பெற்றுக் கொள்வதென்ற முடிவில் மத்திய அரசு பிடிவாதத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இத்தகவலை மறுத்திருந்தாலும், சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.2017-18 நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2019-20இல் ரூ. 9 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது, வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரூ. 3 ஆயிரம் கோடியை அரசு திரும்பப் பெறப்போகிறது என்ற அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

;