tamilnadu

img

விரக்தியின் உச்சத்தில் மோடி

பொதுத் தேர்தலையொட்டி இதுவரை பிரதமர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொண்டைகிழிய அவர் பேசிய பேச்சுக்களிலிருந்து, இப்போதே அவருக்கு விரக்தி மனநிலை ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது. மக்களின் தினசரி வாழ்க்கையில் கடும் தாக்குதலைஏற்படுத்தியுள்ள மோடி அரசு மீது மக்கள் மிகக் கடுமையான கோபம் அடைந்துள்ளனர். மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அந்த கோபத்தைச் சந்திக்க இயலாமலும், அவர்களின் கோபம் தேர்தலில் தங்களுக்கு எதிராகத் திசைதிரும்பிக் கொண்டிருக்கிறது என்கிற அச்சத்தின் காரணமாகவும், நரேந்திர மோடி இப்போது மிகவும் கேடுகெட்ட முறையில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்’ குறித்து மூர்க்கத்தனமான முறையில் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். நம் ஆயுதப்படையினரின் தியாகங்களையெல்லாம் தனக்கு ஆதரவான வாக்காக மாற்றுவதற்கு இழிவான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்காக மோடியும், ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரத்தினரும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள தேர்தல் நடத்தை விதிகளையும் அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையமோ, ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் மக்களின் உணர்ச்சியைக் கிளப்பிவிடும் விதத்தில் மோடி அவிழ்த்துவிடும் சரடுகள் மிகவும் மோசமானவை.

சரடு 1: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம்

உண்மை நிலை: மோடி பிரதமரானபோது, தனக்கு56 அங்குல மார்பு இருப்பதால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்துவரும் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடிக்கும் வல்லமை தனக்கு உண்டு என்று பீற்றிக்கொண்டார். இப்போது பயங்கரவாதிகளிடையே ஒருவிதமான பயத்தை விதைத்திருப்பதில் தான் வெற்றிபெற்றிருப்பதாக, பரபரப்புடன் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் உண்மை நிலைமை என்ன தெரியுமா?முந்தைய காலகட்டத்தைவிட நரேந்திர மோடியின்ஆட்சிக் காலத்தில்தான் பயங்கரவாதத் தாக்குதல்கள்அதிகரித்திருக்கின்றன. இந்தியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் 2009-14இல் 109ஆக இருந்தது, இவருடைய 2014-19 ஆட்சிக் காலத்தில் 626ஆக அதிகரித்திருக்கின்றன. பாகிஸ்தானால் எல்லை ஒப்பந்த மீறல்கள் 563இலிருந்து 5596ஆக அதிகரித்திருக்கின்றன. நம் வீரர்கள் கொல்லப்படுவது, 139இலிருந்து 483ஆக அதிகரித்திருக்கிறது. பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது என்பதும் 12இலிருந்து 210ஆக உயர்ந்திருக்கிறது.மோடி அரசாங்கத்தின் ஜம்மு-காஷ்மீர் கொள்கைமிகவும் அச்சம்தரும் விதத்தில் காஷ்மீர் இளைஞர்களைத் தீவிரவாத இயக்கங்கள் பக்கம் தள்ளிக்கொண்டிருக்கிறது. தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்திடும் இளைஞர்களின் எண்ணிக்கை 2014இல் 16ஆக இருந்தது, தற்போது 2018இல் 191ஆக அதிகரித்துள்ளது.

உரி என்னும் இடத்தில் உள்ள இராணுவ முகாம் மீதுபயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தபின்னர், இந்திய ராணுவத்தால் ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோடியும் பாஜக அரசாங்கமும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டோம் என்றும் இனி எல்லை தாண்டி நம் நாட்டிற்குள் எவ்விதமான பயங்கரவாதத் தாக்குதலும் இருக்காது என்றும் பீற்றிக்கொண்டார்கள். இதன்பின்னர்தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்று நம் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள்கொல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து நம் விமானப்படை பாகிஸ்தானுக்குள் பாலக்கோட் என்னுமிடத்தில் பயங்கரவாதிகளின் தளங்கள் மீது வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்கமுடியாவிட்டாலும், அனைத்து எதிர்கால பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும் வெற்றிகரமான முறையில் நிலைகுலைய வைத்துவிட்டோம் என்று நம் அனைவருக்கும் கூறப்பட்டது. எனினும் பாலக்கோட் சம்பவத்திற்குப்பின்பும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன. மேலும் அதிகமான அளவில்பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜம்மு பிராந்தியத்தில் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அப்பாவி மக்களும் காயங்கள் அடைந்திருக்கிறார்கள்.இதுதான் திருவாளர் மோடியின் 56 அங்குல மார்பின் எதார்த்த நிலையாகும்.

சரடு 2: மோடி பாகிஸ்தானை பயமுறுத்தி அடக்கி வைத்திருக்கிறார்

உண்மை நிலை: அனைத்துவிதமான மத அடிப்படைவாதங்களும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்க்கும் என்பது நிறுவப்பட்டதோர் உண்மையாகும். ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பயந்துவிட்டது என்று கூறுவது உண்மைகளுக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். உண்மையில், இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், இந்துத்துவா மதவெறியும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்து, ஒன்றிலிருந்து மற்றொன்று வலுவடைந்து கொண்டிருக்கிறது.1999இல் என்ன நடந்தது என்று திரும்பிப் பார்ப்போம்.அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கம் மக்களவையில் பெரும்பான்மையை இழந்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில், இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் கேட்கப்பட்டபோது, அதன் தகவல் செயலாளர், “பாஜகதான் எங்களுக்குப் பொருத்தமானதாகும். ஓராண்டுக்குள்ளேயே அவர்கள் எங்களை அணுஆயுதம் மற்றும்ஏவுகணை வல்லமையுடையவர்களாக மாற்றிவிட்டார்கள். பாஜகவின் அறிக்கைகள் மூலமாக லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்திற்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பிருந்ததைவிட இப்போது மிகவும் சிறப்பாக இருக்கிறோம். எனவே அவர்களே மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்போதுதான் நாங்கள் மேலும் வலுவாகஉருவாவோம்,” (இந்துஸ்தான் டைம்ஸ், ஜூலை 19, 1999) என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் விருப்பம் 

ஸ்பை கிரானிகில்ஸ் (Spy Chronicles) என்கிற புத்தகம் ஒன்று. பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக (டைரக்டர் ஜெனரல்) இருந்து

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) அசாத் துரானி மற்றும் இந்தியாவின் உளவு ஸ்தாபனமான ‘ரா’ (RAW) வின் முன்னாள் தலைவராக இருந்த ஏ.எஸ். துலாத் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய புத்தகம்.

அதில், அசாத் துரானி, “ஐ.எஸ்.ஐ-யைப் பொறுத்த வரையிலும், மிகவும் விரும்பக்கூடிய தேர்வு என்பது இந்தியாவில் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என்பதேயாகும்,” என்று கூறுகிறார். அவர் மேலும், “மோடி பிரதமராக வருவதற்கு பாகிஸ்தானின் எதிர்விளைவு என்னவெனில், இந்தியா சரியாகவே நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது; மோடி இந்தியா மீது கவனம் செலுத்தட்டும்; அதன் இப்போதைய வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்கிற சித்திரத்தை அழித்து ஒழித்துக்கட்டட்டும்; அப்படி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அங்கே தற்போது அனைத்து மதத்தினருக்கும் இடையே இருந்துவரும் நல்லிணக்கச் சூழலை அழிப்பதற்கு வழிவகுத்திடும்,” என்று கூறுகிறார். இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.-இன் தேர்வு இவ்வாறு தெளிவாக இருக்கிறது.கிட்டத்தட்ட இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே, ஏப்ரல் 10 அன்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவில் பொதுத்தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி வருவதே சரியாகஇருக்கும் என்று கூறியிருக்கிறார். அந்நிய ஊடகவியலாளர்கள் முன்பு அவர் பேசுகையில், இந்தியாவில் மோடிவெற்றி பெறுவார் என்றே தான் நம்புவதாகவும், ஏனெனில்அப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை “ஒரு சிறந்த வாய்ப்பினைப்” பெறும் என்றும் கூறியிருக்கிறார்.இந்தியாவில் திருவாளர் மோடிதான் வெற்றி பெற்றுமீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது என்பதற்கு வேறென்ன சான்று தேவை?இந்தியாவில் இந்துத்துவா மதவெறி வலுப்படுமானால், பாகிஸ்தானில் இஸ்லாமிய மத அடிப்படை வாதமும் வலுப்பெறும். உண்மையில், இவர்களிருவருமே,“ஒருவருக்காக மற்றொருவரால் உருவாக்கப்பட்டவர்கள்.” இவ்வாறு மக்களிடையே மதவெறி உணர்ச்சிகளைக் கிளப்பி அதன்மூலமாக மக்களின் வாக்குகளைக் கவர்ந்திடும் முயற்சிகளை நாட்டு மக்கள் கடந்த ஐந்தாண்டு காலமாக தங்களது ஒவ்வொருநாள் அனுபவத்தின் மூலமாகவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பாஜக அரசாங்கம் வீழ்த்தப்பட்டு, அதனிடத்தில் தேர்தலுக்குப்பின் உருவாகும் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதற்கான வழி வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது நிச்சயமாகிக் கொண்டிருக்கிறது.



‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தமிழில்: ச.வீரமணி

;