tamilnadu

img

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்.... ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்....

சமூகநீதி தளத்தில் ஒரு முன்னோடி மாநிலம் தான்தமிழ்நாடு.69 விழுக்காடு இட ஒதுக்கீடு, சாதிபின்னொட்டு நீக்குதல், சாதி மறுப்பு திருமணங்கள் போன்ற முத்திரைகள் தமிழ்நாட்டுக்கு வலுச் சேர்க்கிறது.எனினும் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகளும், அதனை எதிர்ப்பவர்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல்களை தொடுப்பதும் தமிழகத்தில் கவலையளிக்கும் விதத்தில் இன்றும்தொடர்கிறது. அவமரியாதையாகப் பேசுவது, பொது இடங்களில் தீண்டாமைக் கொடுமைகள் செய்வது, தாக்குவது, கொலை செய்வது, சொத்துக்களை சேதப்படுத்துவது,வீடுகளை எரிப்பது,சாதி ஆணவக்கொலை செய்வதுபோன்ற எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகளும்,வன்கொடுமைகளும் தொடர்வதை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசும்,துறை அமைச்சரான தாங்களும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வரவேற்பு
2021 சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்பாக “சமூக நீதிசாசனம்” ஒன்றை வெளியிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குழுவிடம் சமர்ப்பித்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மக்களின் நலனுக்கான பல கோரிக்கைகளை இணைத்து இருந்தது. சாதி பேதமற்ற சமூக அமைப்பை விழைவோர்க்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய அறிவிப்புகள் பெரும் நம்பிக்கையை தந்தது. ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது.புதிய ஆட்சியின் முக்கிய நகர்வாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற நெடுங்கனவை ஈடேற்றியுள்ள தமிழகமுதல்வருக்கு நன்றி. பாராட்டுக்கள். பெண் ஓதுவார்கள் நியமனம் போன்ற முன்மாதிரி நகர்வுகளிலும் எங்களின் ஒருமைப்பாட்டையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நபார்ட் நிதியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள்,விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு சில்லரை செலவினக் கட்டண உதவித் தொகை இரண்டுமடங்காக உயர்வு,பள்ளி - கல்லூரி மாணவர் விடுதி மேம்பாட்டிற்கு சிறப்பு மூலதன ஒதுக்கீடு ரூ.25 கோடி ஆகிய அறிவிப்புகள் தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு இருப்பதையும் மனமார வரவேற்கிறோம்.இந்நிலையில் அரசிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்பார்க்கிற உடனடி கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நலன், தூய்மைப் பணியாளர் நலன். அஞ்சுகம்அம்மையார் கலப்பு திருமண உதவித் திட்டம்,தனியார் துறைஇட ஒதுக்கீடு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைவான முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உடனடி வழக்குப் பதிவு- தண்டனை பெற நடவடிக்கை...
தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரஉடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.வன்கொடுமை, தீண்டாமைக் கொடுமைகள் குறித்த புகார்கள் மீதுமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் உள்ள தாமதம்,பாரபட்சங்கள், எதிர் வழக்குகள் பதிவு செய்து வழக்கை நீர்த்துப் போகச் செய்தல் போன்ற  குறைபாடுகளைசரி செய்திட வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கிட வேண்டிய தீர்வுதவித் தொகை மற்றும் அரசு வேலை, வீடு,நிலம்,உதவித்தொகை போன்றவைகளை உடனடியாக கிடைத்திட செய்திட வேண்டும்.நீதிமன்ற நடவடிக்கைகள் குறிப்பாக உரிய காலத்தில்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது.சாட்சிகள்,பாதிக்கப்பட்டவர்களின் சட்டப்படியான உரிமைகளானபாதுகாப்பு, பயணப்படி, அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமித்துக் கொள்வது, விரைவான விசாரணை, தீர்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்திட வேண்டும்.குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதி செய்வதன் மூலமாகவே தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை குறைத்திட முடியும் என்பதையும் கவனப்படுத்துகிறோம்.வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் டிஜிபி  தலைமையிலான மாநிலத்தின் எஸ்சி எஸ்டிபாதுகாப்பு பிரிவு (செல்) அந்த மாதம் நடந்த வன்கொடுமைகள் குறித்த தகவலை வெளியிடவேண்டும். அவ்வப்போது மீளாய்வும் செய்யவேண்டும்.தீண்டாமை,வன்கொடுமைகள் தொடர்வதைத் தடுத்திட அவ்வாறான பகுதிகள்/கிராமங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறப்பு செல்கள் அமைப்பு
சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு பாதுகாப்பு தரமாவட்ட அளவிலான சிறப்பு செல்களை அமைத்திட வேண்டும் என்கிற சென்னைஉயர்நீதி மன்ற உத்தரவு(WP.NO 26991/2014)கடந்த ஆட்சிக் காலத்தில் முறையாகஅமலாக்கப்படவில்லை.எனவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (contempt petitionNo 460/2017) தொடர்ந்து.இவ்வழக்கில்தமிழக அரசு ஏற்றுக்கொண்ட சிறப்புப் பிரிவு, அலுவலகம்,தொலை பேசி எண்,புகார் பதிவு,தம்பதியினர்களின் பாதுகாப்பு ஆகிய ஏற்பாடுகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.இவைகளை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமணம் திட்டத்தின்கீழ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி  ரூ.60,000 மற்றும் 8 கிராம் தங்கக் காசு வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட வேண்டும்.சாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

இடஒதுக்கீடு, தனியார் துறையிலும் 
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்விநிறுவனங்களில் ஆசிரியர் நியமனம், மாணவர் அனுமதிகளில் இட ஒதுக்கீட்டை அமலாக்குவதற்கான சட்டங்கள் முறையாக அமலாக்கப்படுவதை ஒன்றிய அரசிடம் வற்புறுத்த வேண்டும். ஆசிரியர் நியமனம், முனைவர் பட்டஅனுமதிகளில் இட ஒதுக்கீட்டை விலக்கவும், நீர்க்கவும் செய்கிற இராம் கோபால் ராவ் அறிக்கையை முற்றிலும் நிராகரிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள எஸ்சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டு நிலுவை காலி இடங்களை நிரப்ப சிறப்பு பணி நியமன அறிவிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். அருந்ததியர் உள் ஒதுக்கீடு அமலாக்கம்கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அலுவலர்கள் இட ஒதுக்கீடுகளுக்கான ரோஸ்டர்களை(Roster’s) ஒவ்வோர் ஆண்டும் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றங்களில் நீதிபதி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி, பழங்குடியினர் உரிய எண்ணிக்கையில் இடம் பெறுவதை உறுதி செய்ய ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.தனியார் துறை இட ஒதுக்கீடு அமலாக்கப்பட ஒன்றிய அரசை வலியுறுத்துகிற தீர்மானம் தமிழ்நாடு சட்ட மன்றத்தில்நிறைவேற்றப்பட வேண்டும்.

நிலை அறிக்கை
பட்டியல் சாதி,பழங்குடி துணைத் திட்டங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் சரி வர நிறைவேற்றப்படவில்லை. ஆகவே கடந்த 10 ஆண்டுகளில் துணைத் திட்டம் அமலாக்கப்பட்ட விதம் குறித்த “நிலை அறிக்கையை” (Status report)வெளியிடுவதோடு எதிர்காலத்தில் ஒதுக்கீடு, இலக்கிடப்பட்டதிட்டங்கள், அமலாக்கம் குறித்த கண்காணிப்பு ஆகியனவற்றை உறுதி செய்ய வேண்டும்.ஆந்திர மாநில அனுபவத்தை ஆய்வு செய்து துணைத்திட்டத்தை முறையாக அமலாக்க சட்டம்  கொண்டு வரப்பட வேண்டும்.எஸ்.சி/எஸ்.டி குடும்பங்களையும், குடியிருப்புகளையும் அலகாகக் கொண்டு துணைத் திட்டத்தில் பகுபடு திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.பட்டியல் சாதி மாணவர் கல்வி உதவித் தொகை உயர்வுகுறித்த தேர்தல் வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.பட்டியல் சாதி, பழங்குடியினர் பெண் வாரிசுகள் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு தகுதி பெற்றால் அவர்களுக்கு கல்லூரிக் கல்விக்கட்டணம் மற்றும்விடுதி ஆகியவை உறுதி செய்யப்படுமென்ற வாக்குறுதியும் வரும்கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வர வேண்டும்.பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் கட்டமைப்பு, உணவு, விடுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.மெட்ரிக் பிந்தைய கல்விக்கான கல்வி உதவித் தொகையில் ஒன்றிய அரசு செய்கிற தாமதத்தை களைய வலியுறுத்தவேண்டும். மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் நெருக்கடிதராத வகையில் உரிய காலத்தில் கட்டணங்கள் அரசால் செலுத்தப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் நேரடியாக மாணவர்களிடம் கட்டணத்திற்காக அணுகுவதை உறுதியாக தடுக்க வேண்டும்.

மனிதக் கழிவை மனிதன் அகற்றும் கொடுமைக்கு முடிவு
பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற உள்ளாட்சிகள் அனைத்திற்கும் நவீன இயந்திரங்கள்,வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசுப் பணி வழங்கிட வேண்டும்.தூய்மைப்பணியாளர் நல வாரியத்தை மீண்டும் அமைத்திடவேண்டும்.மனிதக் கழிவு அகற்றுவோர் பணி அமைத்திட தடை மற்றும் அவர்கள் மறுவாழ்வுக்கான சட்டம்-2013சட்டத்தைஅதன் உள்ளார்ந்த அழுத்தத்துடன் செயல்படுத்திட வேண்டும்.தலித் கிறித்தவர்கள் பட்டியல் சாதியினராக இடம் பெறுவதை உறுதி செய்யும் சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.2009 -ல்  அறிவித்த  புதிரை வண்ணார் நல வாரியத்தை செயல்பட வைக்கவும், புதிரை வண்ணார் நல வாரியத்தில் கிறிஸ்துவ புதிரை வண்ணார்களையும் உறுப்பினராக சேர்க்கவும்  அரசாணை வெளியிடப்படவேண்டும்.அறநிலையத் துறை கோயில்கள் அனைத்திலும் பட்டியல் சாதியினர் அறங்காவலர்களாக நியமனம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

பட்டியல் சாதி மக்களின் மனைப் பட்டாக்களுக்கான நீண்ட காலக் கோரிக்கைகள் உடனடி கவனம் செலுத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.நகர் வாழும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். மாநகர குடிசை வாழ் மக்கள் நகருக்கு வெளியே துரத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.சாதிக்கொரு மயானம் என்ற நிலை மாற்றப்பட்டு அனைத்து கிராமங்களிலும் சமத்துவ மயானங்கள் அமைக்கப்பட வேண்டும்.

பஞ்சமி நிலங்கள் மீட்பு
தாட்கோ வங்கி கடன்கள்எளிமையாக்கப்பட வேண்டும்.பட்டியல் சாதி தொழில் முனைவோர்க்கு முன்னுரிமை, அரசு கொள்முதல், சந்தை ஏற்பாடுகள் அரசின் தலையீடு வாயிலாக உறுதி செய்யப்பட வேண்டும்.தலித் ஊராட்சித் தலைவர்கள் கடுமையான பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள். மாவட்ட ஆட்சியர் வாயிலாக பட்டியல் சாதி, பழங்குடி ஊராட்சிகள் பற்றிய ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் சுதந்திரமான செயல்பாடு, உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.டாக்டர் கலைஞர் காலத்தில் அமைக்கப்பட்ட சமத்துவ புரங்கள் சீரமைக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, போக்குவரத்து ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.பஞ்சமி நிலங்கள் மீட்புக்கான நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டு கால வரையறைகள் அறிவிக்கப்பட்டு அமலாக்கப்பட வேண்டும்.பஞ்சமி நிலங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டியல் இன மக்களுக்கு தற்பொழுதுவழங்கப்படும் நிலங்களை விதிகள் மீறி அபகரிப்பதை தடுக்கும் நோக்குடன் பத்திரப்பதிவு செய்யப்படுவதற்கு சட்டப்படியான தடைகள் ஏற்படுத்திட வேண்டும்.

பழங்குடி சாதிச் சான்றிதழ்
பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில் உள்ளதாமதம் களையப்பட வேண்டும்.தமிழ்நாட்டின்  பழங்குடிகளான   மலையாளிகள், குறவன் பழங்குடியினர், இருளர்,காட்டுநாயக்கர்,கொண்டாரெட்டி, குருமண்ஸ்,மலைக்குறவன்ள்ளிட்டோருக்கு குடியிருப்பு பகுதி முகாம்களின் வாயிலாக,குடும்ப அட்டைகள், இனச் சான்று அட்டைகள்  வழங்கப்படவேண்டும்.குறவன் உட்பிரிவு 26, வேட்டைக்காரன், புலையன், லம்பாடி, படுகர் ஆகியோர் பழங்குடி பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்ற  தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.தமிழ் நாடு சட்ட மன்றத்தின் சிறப்பு அமர்வை பட்டியல்சாதி, பழங்குடியினர் பிரச்சனைகளை விவாதிப்பதற்காக கூட்டி தீர்வுகளை தர வேண்டும்.தமிழ் நாடு அரசு இதற்கான முன் முயற்சிகளை முனைப்போடு எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இதற்கான அறிவிப்புகள், தீர்வுகள் ஆதி திராவிடர் நலத் துறை மானிய விவாத ஆவணத்திலும், முடிவுகளிலும் இடம் பெறுமென்று நம்புகிறோம். 

;