tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்ய உயர்நீதிமன்றம் தடை

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புது பேருந்துகள் கொள்முதல் செய்யத்  தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உள்ள இருக்கைகளை கொண்ட வடிவமைப்புகள் இடம்பெற வேண்டும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுமார் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வசதிகளுக்காக உபயோகம் செய்யக்கூடிய பேருந்துகளாக உள்ளது. கூடுதல் பேருந்துகள் இன்று வரை அரசால் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வாதாடுகையில், தற்போது சாலைகளின் தரம் குறைவாக உள்ளது. சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்ட  பின்னர், அரசு உத்தரவு மற்றும் சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படும். தற்போது குறிப்பிட்ட அளவு பேருந்துகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கொண்ட பேருந்துகளை இயக்க ரூபாய்  58 இலட்சம் செலவாகும். தற்போது 10% பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிதி பிரச்சனையும் கொரோனா வைரஸ் பரவலும் தற்போது உள்ளதாகவும் வாதிட்டார்.

 

இதனைக் கேட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கடந்த 2016 ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், அதுவரை புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இடைக்காலத்தடை விதித்தும் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரங்கள் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;