tamilnadu

img

பிளஸ்-2 மற்றும் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்க... இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
கொரோனா நோய் தொற்றுப் பரவல்  மிகக்கடுமையாக உள்ள சூழலில் மாணவர் நலனை முன்னிறுத்தி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட் உள்ளிட்டஅனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய   வேண்டும் என்று அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா நோய்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. பள்ளிக்கல்வி துறையில் குறிப்பாக பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கான வழக்கமான காலம் முடிவடைந்த நிலையில்  அதுகுறித்து முடிவெடுப்பதில்  பெற்றோர், மாணவர், ஆசிரியர் மற்றும் பலதரப்பட்ட அமைப்புகளிடம் கருத்து கேட்கிற தமிழக அரசின் நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது.பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை தமிழக அரசு மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மற்றும் ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் உள்வாங்கி முடிவெடுக்க வேண்டியது அவசியம்.  கடந்த ஓராண்டாகவழக்கமான கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறாத சூழலில் பொதுத்தேர்வு நடத்துவது என்பது மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதலாகவே இருக்கும். இது பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் மாணவர் விகிதத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் கிராமப்புற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள், நோய்தொற்று சூழலால் பள்ளிகளுக்கு வர இயலாத நிலையில் தேர்வை ரத்து செய்வதே மாணவர் நலனைமுன்னிறுத்தும் செயலாகும். இணையவழி தேர்வு என்பது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சாத்தியமில்லை என்பதை கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் இருந்தே அறியமுடியும்.

தற்போது தேர்வு நடத்துவது  தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை வசூலுக்கு மட்டுமே வழிவகுக்கும். ஆகவே பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வதோடு மாணவர்களின் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கொரோனா பரவல் காலத்தில்  பனிரெண்டாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது எனினும், அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு கள் ரத்து செய்யப்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.மத்திய அரசு இத்தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்.மத்திய பிஜேபி  அரசு இந்த தொற்றுச்சூழலைப் பயன்படுத்தி  தேசியகல்விக் கொள்கை அமலாக்கம், நீட் உள்ளிட்ட அகிலஇந்திய நுழைவுத் தேர்வுகளை முதன்மைப் படுத்தும்  சூழ்ச்சியை முறியடிக்க தமிழ்நாடுஅரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;