tamilnadu

மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்ணையும் எடுத்துக் கொள்க

திருப்பூர், ஏப். 30 -பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கும் சிறப்புத் துணைத் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும், அத்துடன் மாணவர்கள் பெறும் கூடுதல் மதிப்பெண்களையும் பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் கல்லூரிப் படிப்புச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இது குறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்புக் கல்வி ஆண்டில் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைவிட பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்றுத் தேர்ச்சி அடைந்துள்ளனர்.கல்லூரிப் படிப்புச் சேர்க்கைக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என இரண்டாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்களும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திடீரென்று இக்கல்வியாண்டின் இடையில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டது என்று அறிவிக்கப்பட்டது. இது அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.இக்கல்வியாண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்திய கால அட்டவணையில் கடந்த கல்வியாண்டைப் போல தேர்வுக்கு முழுமையாகத் தயாராக போதிய விடுமுறை நாட்கள் கிடைக்கவில்லை. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று அரசு அறிவித்தாலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் எப்பொழுதும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமை, ஆசிரியர் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படாமை, இருக்கின்ற ஆசிரியர்களும் பிற பணிகளுக்கும் பயிற்சிக்கும் அனுப்பப்படுதல், விடுப்புப் பதிலி ஆசிரியர் நியமிக்கப்படாமை ஆகிய காரணங்களால் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் கூட முழுமையாகப் பாடம் கற்பிக்கப்படும் சூழல் இல்லை.அசாதாரண சூழ்நிலைகளால் இக்கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கு முந்தைய இரண்டு மாதங்களில் அரசுப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாகவும் முறையாகவும் நடைபெறவில்லை.மேற்கண்ட உண்மை நிலைமைகளை தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகமும் பரிசீலித்து அரசுப்பள்ளி மாணவர்களின் கல்லூரிப் படிப்புச் சேர்க்கையில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், தேர்ச்சி பெற்ற மாணவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கும் சிறப்புத் துணைத்தேர்வு எழுத அனுமதி வழங்குவதோடு கல்லூரிப் படிப்புச் சேர்க்கைக்கு மாணவர்கள் பெறும் கூடுதல் மதிப்பெண்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.மேல்நிலைப் படிப்பு என்பது பிளஸ் 1 பாடங்களும் பிளஸ் 2 பாடங்கள் இரண்டும் சேர்ந்ததே. எனவே இரண்டாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அரசுப்பள்ளி மாணவர் நலனில் அக்கறை கொண்டவர்களும், ஆசிரியர் இயக்கங்களும் கல்வி அமைப்புகளும் இக்கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூட்டமைப்பு சார்பில் சு.மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

;