tamilnadu

img

மாமதுரையின் அன்னவாசல் - சு.வெங்கடேசன் எம்.பி.,

தொழில் முனைவோரில் தொடங்கி கடைநிலைத்தொழி லாளி வரை அரசு அறிவிக்கும் நிவாரணமே அவர்களின் வாழ்வைத் தீர்மானிப்பதாக மாறி நிற்கிறது. “அரசே! போதிய நிவாரணம்கொடு” என தொடர்ந்து வலியுறுத்துவதும் “அறிவிக்கப்பட்ட நிவாரணங்களை முறையாக வழங்கு” எனத் தொடர்ந்து தலையிடுவதும்தான் இன்றைய முக்கியப் பணி.

ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரேசன் அட்டைஇல்லாதவர்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி அளவிடமுடியாததாக மாறி நிற்கிறது. ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் உணவுதானியப் பொருள்களும் கிடைக்க எந்த வழியும்இல்லை. அவர்கள் பொதுவெளிக்கு வரவே முடியாத சூழல்.

கொளுத்தும் வெயிலில் கோரிப்பாளையம் சிக்னலில் ஊதுவத்தி விற்கும் சிறுமியையும் பெரியார் பேருந்துநிலையப் பாலத்தில் வெள்ளரிக்காய் விற்கும் சிறுவனையும் பார்க்கா தவர்கள் மதுரையில் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அந்த வெயிலை விட வெப்பமான வாழ்க்கைக்குள்தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். அரசின் எந்த நிவாரணங்களுக்குள்ளும் வரமுடியாத பெருங்கூட்டம் குரலற்று ஒடுங்கிக்கிடக்கிறது.

ரேசன் அட்டைகளுக்கும் கீழே இருக்கும் இத்தகைய மனிதர்கள் எத்தனை பேர்? சமைத்து உணவருந்த முடியாதநிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு மதியஉணவு வழங்கலாமா என்று யோசித்தோம்.

தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என விளிம்புநிலை மக்கள் மதுரை நகரத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் எனக் கணக்கிட முயன்றோம்.  பள்ளிக்கூட வாசல்களில் உட்கார்ந்து நெல்லிக்காயும் முறுக்கும் எலந்தைப்பழமும் விற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கை மட்டுமே அறுநூறைத் தொட்டது. 

கணக்கெடுப்பை மாற்றிக்கொண்டோம், நம்மால் என்னமுடியும் என்று கணக்கெடுக்கத் தொடங்கினோம்.  அப்பொழுதும் புள்ளிவிபரங்கள் சரியாக இல்லை; ஆனால், முடியும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் மட்டும் துலக்கமாக இருந்தன. 

எனவே, தொழிலாளர்கள் தினத்தில்தொடங்கினோம், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கான மதிய உணவு வழங்கும் “மாமதுரையின் அன்னவாசல்”திட்டத்தை.  சனிக்கிழமையன்று துவங்கி மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அவர்களுக்கு “மாமதுரை அன்னவாசல்” திட்டத்தின் கீழ் உணவு அளித்து வருகிறார்கள். 

;