india

img

தலிபான்களிடமிருந்து தப்பிவந்த பெண் எம்.பி.யை திருப்பி அனுப்பிய இந்தியா.... காந்தி தேசத்திடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை.... ரங்கினா கார்கர் வேதனை....

புதுதில்லி:
“தலிபான்களிடமிருந்து தப்பி, புதுதில்லி வந்த என்னை, காந்தியின் தேசம் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பிஅனுப்பும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை” என்று ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி. ரங்கினா கார்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ரங்கினா கார்கர். 36 வயதே ஆகும் இளம் பெண் எம்.பி.யான இவர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லிலிருந்து ஆகஸ்ட் 20 அன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அடுத்த 2 மணி நேரத்திற்குஉள்ளாகவே, குடியேற்ற செயல்முறை களை (Immigration Check) பூர்த்தி செய்யவில்லை என்று இந்திரா காந்தி விமான நிலைய அதிகாரிகள், ரங்கினா கார்கரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனைக் குறிப்பிட்டே, “இந்தியாவில் தனக்கு இவ்வாறு நேரும் என்று ஒருபோதும், தான் நினைத்துப் பார்த்தது இல்லை”என்று ரங்கினா கார்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

“கடந்த காலங்களிலும் இதே பாஸ்போர்ட்டில் இந்தியாவிற்கு பலமுறை பயணம் செய்துள்ளேன். ஆனால் இந்த முறைதான், குடிவரவு அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறி காத்திருக்க வைத்தனர். பின்னர், ‘மன்னித்து விடுங்கள், எங்களால் உங்களுக்காக எதுவும் செய்ய முடியாது’ என்று என்னிடம் கூறி நாடுகடத்தினார்கள். நான் ஒரு குற்றவாளியாக நடத்தப்பட்டேன். இதை, காந்திஜியின் இந்தியாவிடமிருந்து நான் எதிர்பார்க்க வில்லை. நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருக்கிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவுகளும் உள்ளன. எனினும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் ஒரு பெண் மற்றும்நாடாளுமன்ற உறுப்பினரான என்னை வெளியேற்றி விட்டனர். துபாய்க்கு சென்றபிறகும் கூட என்னுடைய பாஸ்போர்ட்டை என்னிடம் தரவில்லை. அவர்கள் எனக்கு செய்தது நல்ல விஷயம் அல்ல. 

காபூலில் நிலைமை மோசமாக உள்ளதால், இந்திய அரசு ஆப்கன் பெண்களுக்கு உதவும் என்று நம்பி நான் வந்தேன்.ஆனால், எதற்காக திருப்பி அனுப்பப்படுகிறேன் என்பதைக் கூட சொல்லாமல் அவர்கள் நாடு கடத்தி விட்டார்கள்” என்று கார்கர்கூறியுள்ளார். இவ்வளவுக்கும் ரங்கினா கார்கர், இந்தியாவுடனான பரஸ்பர ஏற்பாட்டின் கீழ் விசா (Visa) இல்லாத பயணத்தைஎளிதாக்கும் தூதாண்மை அதிகாரிகளுக் கான பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். அவ்வாறு இருந்தும் தான் திருப்பி அனுப்பப்
பட்டதை கார்கரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 2010 முதல் நாடாளுமன்ற உறுப்பின  ராக இருக்கும் ரங்கினா கார்கர், தன்னை எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணைத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணுரிமை செயற்பாட்டாளராக மட்டுமே அறிவித்துக் கொண்டவர் ஆவார்.

;