articles

img

கிராமப்புற ஏழைகளை வஞ்சித்த ஒன்றிய மோடி அரசை வீழ்த்துவோம்!

விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அறைகூவல்

கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கிராமப்புற மக்களின் நலனை புறக்கணித்த ஒன்றிய பாஜக மோடி அரசை வீழ்த்திடுவோம். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச்செய்வோம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ. தலைமையில் மார்ச் 25 திங்களன்று  கரூரில் நடைபெற்றது. அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ. லாசர், மாநில பொதுச் செயலாளர்  வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் ஆ.பழனிச்சாமி  மற்றும்  மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதாக அறிவித்தது. 

குறிப்பாக கிராமப்புற வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தி வேலையும் - கூலியும் உயர்த்தப் போவதாக கூறியது. ஏழைகளை வறுமையில் இருந்து விடுவிப்போம் உணவு, பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம், விவசாயத்தை பாதுகாத்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், 2 கோடி பேருக்கு வீடு கட்டித் தருவோம். விலைவாசியை குறைப்போம் என்றெல்லாம் மக்கள் மத்தியில் வாக்குறுதி தந்தார்கள்.  ஆனாலும் ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே கிராமப்புற மக்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமான நடவடிக்கைகளை செயல்படுத்த துவங்கினார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை முழுமையாக சிதைக்கும் வகையில் 250-க்கும் மேற்பட்ட கட்டிட, கட்டுமான வேலைகளை இத்திட்டத்தில் இணைக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட்டு செயல்படுத்திட உத்தரவிட்டனர். 

மண் சார்ந்த வேலைகள் மட்டும் வழங்கி அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுவதை நிறுத்தி வைத்திட உத்தரவிட்டது.  இதனால்  ஐந்து பேர் பத்து பேருக்கு மட்டுமே வேலை அளிக்கும் நிலைமையை உருவாக்கினர்.   மேலும் இத்திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற உழைப்பாளிகளை, சாதி ரீதியான மோதலை உருவாக்கும் வகையில், சாதி ரீதியான வேலை- ஊதியம் அமலாக்கம் என்பதை செயல்படுத்திட முனைந்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தால் அது திரும்பப்பெறப்பட்டது. கொடுமையிலும் கொடுமையாக வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை மிகத் தாமதமாக 5 மாதம், 6 மாதம் கழித்து வழங்கி பட்டினியில் தள்ளியது. கிராமப்புற ஏழைகளின் வறுமையைப் போக்கிட செயல்பட்டு வந்த ஒரே திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும்  திட்டத்தில் ஊழல்

பிரதமர் பெயரிலான வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு கோடி பேருக்கு வீடு கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் வீடு கட்டிய பயனாளிகளுக்கு உரிய தொகையினை விடுவிக்காமல் ஆண்டுக் கணக்கில் தாமதப்படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் பாதியில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானப் பொருள்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள போதும், வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தாமல் மக்களுக்கு சுமையை ஏற்றியதுடன் இத்திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்வதில் கடும் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்று உள்ளது. 

உணவு மானியம் குறைப்பு;  1.89 கோடி ரேசன் அட்டை ரத்து

நாடு முழுவதும் வேலையின்மை, விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பை பலப்படுத்தி கிராமப்புற ஏழைகளுக்கு உணவை உத்தரவாதப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசாங்கம். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் உணவு பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கியது கடந்த நிதிநிலை அறிக்கையில் கூட உணவு மானியம் ரூ 60 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்து உணவு பாதுகாப்பை சீரழித்து ரேசன் விநியோகத்தை நம்பி வாழும் மக்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டது பாஜக அரசு. 1.89 கோடி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கான பொது விநியோக அட்டையை ரத்து செய்துள்ளது.   

2 மணி நேரத்துக்கு  ஒரு தற்கொலை

ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் அடித்தட்டில் வாழும் கிராமப்புற  மக்களின் கழுத்தை நேரடியாக நெரித்து வாழ்க்கையை நெருக்கடியில் தள்ளியது. கடன் மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை அதிகரித்த காலங்களாக மோடி ஆட்சியின் பத்தாண்டு காலம் திகழ்கிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயக்கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொள்வது என்பது மோடி அரசின் சாதனையாக மாறி இருக்கிறது. 2021 இல் மட்டும் 5563 விவசாயத்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் 9 அதிகரிப்பதாகவும், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஒரிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் 18 அதிகரித்து வருவதாகவும் ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு  அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

விவசாயத்தை பாதுகாப்போம்;விவசாயிகளை பாதுகாப்போம்; விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று சொன்ன மோடி அரசு ஒரே ஆண்டில் பல்டி அடித்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் அப்படி சொல்லவில்லை என்று பிரமாண பத்திரம் வாசித்து விவசாயிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது . கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி  இந்திய நாட்டு விவசாயத்தை கபளீகரம் செய்திட முயன்றது ஆனால் அதை எதிர்த்து விவசாயிகளும் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் ஓராண்டுக்கு மேல் நடத்திய போராட்டம் மூன்று கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வைத்தது. அப்போது கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றாமல் அடாவடித்தனம் செய்து வருகிறது.

இவ்வாறாக கிராமப்புற விவசாய தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அதல பாதாளத்திற்கு தள்ளிய அரசு தான் ஒன்றிய பாஜக அரசு. பத்தாண்டு காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை கடும் சோதனைக்கு உள்ளாக்கிய ஒன்றிய பாஜக மோடி அரசு இந்த தேசத்தில் நீடிப்பது - நாட்டுக்கு கேடு. இந்த ஆட்சிக்கு துணை போன அதிமுகவை முறியடிக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை நிறைவேற்றிடவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி பலப்படுத்திடவும், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை உறுதிப்படுத்திடவும் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் திமுக அரசின் செயல்பாடுகள் பலப்படவும் தமிழக - இந்திய மக்களின் நலன்களை பாதுகாத்திடவும் தமிழ்நாட்டின் உழைப்பாளி மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாறு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

;