பேஸ்புக் உலா

img

கீழடி பற்றிய வினா விடை பதிவு

கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது என்பதால் வினா விடையாக இப்பதிவுகள்.‌

கேள்வி 1:
கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

விடை:
ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தை சேர்ந்தது. கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை "வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு" என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌ சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லை பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது "புரிதல் விகாரத்தில்" போய் முடியும். அது நல்லது அல்ல.


கேள்வி 2:
சிந்துவெளி பற்றிய உரையாடல்களில் "திராவிடம்" என்ற "தமிழ்" என்ற சொல்லாடல்களின் பொருத்தப்பாடு என்ன?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டை கட்டமைத்தவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தாலும் சிந்துவெளி மகுடத்திற்கான முக்கியமாக இரண்டு வேட்பாளர்கள் தான்.
1. "திராவிட மொழிக் குடும்பம்" ( கிழக்கு ஈரான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி நடு இந்தியாவிலும் கிழக்கு இந்தியா நேபாளம் ஆகிய இடங்களில் அங்கும் இங்கும்; தென்னகம் முழுவதும்; இலங்கையிலும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகிற பல மொழிகள் அடங்கியது) என்று அறியப்படும் மொழியை / அல்லது மொழிகளைப் பேசிய பண்பாட்டினர்.
2. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் என்ற வட மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டினர்.
சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் தமிழ்த்தொன்மங்களுக்கும் பண்பாட்டு தொடர்ச்சி என்ற முறையில் ஒரு மிக ஆழமான உறவு இருந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.
ஆனாலும் இந்த தொடர்பு மொழியியல் அடிப்படையில் "திராவிடக் கருதுகோள்" என்றே ஆய்வாளர்களிடையே தொடக்கம் முதல் அறியப்படுகிறது. சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இது வரை வாசிக்க இயலாததால் குறிப்பிட்ட ஒரு மொழி என்று சொல்லாமல் மொழிக்குடும்பத்தின் பொது அடையாளமாக "திராவிடம்" என்ற அடையாளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிராகுயி என்ற திராவிட மொழி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைவாசல் பகுதிகளில் இன்றும் பேசப்படுவதாலும் கோண்டி போன்ற நடு இந்திய திராவிட மொழியின் சில பண்பாட்டு கூறுகள் சிந்துவெளி பொறிப்புகளுடன் நெருக்கம் காட்டுவதாலும் இத்தகைய பொதுவான சித்தரிப்பு தேவைப்படுகிறது.

சிந்துவெளிப் பண்பாடே பல்வேறு திணைகளைச் ( நிலப்பின்னணிகள்) சேர்ந்த பலவகையான சமூகப் பொருளாதார பண்பாட்டு பின்னணியின் கூட்டு இயக்கம் தான் என்று தோன்றுகிறது. மலை நில மக்களின் வாழ்விற்கும் கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களின் வாழ்க்கைக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும். ஆனால் சிந்துவெளிப் பண்பாடு இந்த இரண்டு துருவங்களும் எளிதில் சேர்ந்து இயங்கிய பண்பாட்டின் தொடர்ச்சியும் நகர்மய வாழ்வின் உன்னதமான உச்ச கட்டமும் ஆகும்.

சிந்துவெளியின் பரந்த நிலப்பரப்பிலும் பல்வேறு நகரங்களிலும் நகர அமைப்பு, செங்கல் அளவு, எடைக் கற்கள், எழுத்துப் பொறிப்புகள், முத்திரைகள் என்று பொதுக்கூறுகள் உள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாடு ஒரு பண்பட்ட மொழி/ தொடர்பு மொழி இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால் அந்த மொழி எதுவென்று உறுதியாக சொல்லமுடியவில்லை.
ஆனால் அந்த உயர் நாகரிகத்தின் தொடர்ச்சியை அந்தப் பண்பாட்டோடு பொருத்தப்பாடு கொண்ட இன்னொரு ஆவணப்படுத்தப்பட்ட அடுத்தகட்ட பண்பாட்டு மரபில் இலக்கிய மரபில் தான் தேட வேண்டும். அங்கு தான் சங்க இலக்கியம் முக்கியமான சான்றாக நிற்கிறது.

ஒருவேளை சிந்துவெளிப் பண்பாட்டின் பொது நாகரிக மொழியாக தமிழ் அறியப்படும், நிறுவப்படும் சூழல் வந்தால் அப்போது ஆய்வாளர்கள் சிந்துவெளிக்கான மொழி அடையாளம் குறித்து தெளிவாக உரையாடுவார்கள்.

அதுவரை சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி குறித்த தேடலில் "திராவிடக் கருதுகோள்" என்ற சொல்லாடல் தேவையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும். இல்லையென்றால் அது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
 

(தொடரும்)

Balakrishnan R

 

;