பேஸ்புக் உலா

img

பறந்த விமானத்தை தரையிறக்கிய நீதிபதி.

ஒவ்வொருவருக்கும் உள்ள ஏதோ ஒரு நம்பிக்கைதான் இந்த உலகை அமைதியாக இயங்கச் செய்கிறது. ஜனநாயக நாட்டில் மனிதனின் கடைசி நம்பிக்கையாக காட்சி தருவது நீதிமன்றங்கள்தான். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமமானது என்ற கோட்பாடு நமது சமுதாயத்தில் காலம் காலமாகச் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. நீதி தாமதிக்கப்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் அநீதியின் அஸ்திவாரம் உறுதிப்படுத்தப்பட்டே வருகிறது.

விரைவான நீதி என்பது எப்போதாவது நிகழும் அதிசயமாகவே உள்ளது. எத்தனையோ இழப்புகள், வலிகள், வேதனைகளில் இருந்து மக்களை ஆற்றுப்படுத்தும் சக்தியாக இருப்பது நீதிமன்றங்களின மீதான மக்களின் நம்பிக்கைதான்.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ஆஸ்திரேலிய மெல்போன் பெடரல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு உலகெங்கிலும் வாழுகின்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

பச்சிளம் குழந்தையோடு ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போனில் இருந்து இலங்கைக்கு ஒரு அகதிக் குடும்பம் விமானத்தில் நாடுகடத்தப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் ஒரு தொலைபேசி செய்தியின் வாயிலாக விமானத்தை நீதிபதி தரையிறக்கினார் என்பது அகதிகள் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே குறிப்பிடலாம். சரியான நேரத்தில் பிறப்பிக்கப்படும் சரியான உத்தரவுகளால்தான் நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்றப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனஅழிப்புப் போரிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் எதிர்பார்ப்போடு படகுகள் மூலம் காற்றின் திசைவேகத்தில் பல நாடுகளில் அகதிகளாக நம் ஈழத் தமிழ் சொந்தங்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் தங்கள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

2012-ஆம் ஆண்டு ஆபத்துகள் நிறைந்த கடல் வழியில் படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவைச் சென்றடைகிறார் நடேசலிங்கம். 2013-ஆம் ஆண்டு படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தவர் பிரியா. இருவரும் ஆஸ்திரேலியாவில் சந்தித்துக் கொண்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு அகதியாக வாழ்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிலோலா என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்த இவர்களுக்கு கோபிகா என்ற நான்கு வயதுக் குழந்தையும், தருணிகா என்ற இரண்டு வயது குழந்தையும் பிறந்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் இலங்கை மண்ணில் கால்பதித்ததில்லை. அந்தக் குழந்தைகள் பிறப்பால் ஆஸ்திரேலியா. ஆனால் அவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை கிடையாது. ஏனென்றால் அவர்கள் அகதிகள். சட்டவிரோதமாக குடியேறியவர்கள்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான குடியேற்ற விதிகளால், இவர்களுக்கு விசா அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அகதிகள், இவர்களால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உள்ளது என்று இவர்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்து ஆஸ்திரேலியாவின் பழமைவாத அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

அந்நாட்டு உள்துறை இவர்களை நாடு கடந்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டது.
தமிழ் அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் பன்னிருகரன் என்ற கரன் மயில்வாகனன், உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் அவர்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தும், ‘அவர்கள் இங்கு தங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை’ என்று மறுத்துவிட்டார். அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசனின் தலையீட்டை வேண்டியும் முயற்சி பலனளிக்காமல் போய்விட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் நூற்றுக்கணக்கில் திரண்டு அவர்களை வாழ விடுங்கள், இலங்கையில் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று வேண்டியும் அரசு செவிசாய்க்கவில்லை. வியாழக்கிழமை இரவு, இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட நால்வரும் இலங்கை செல்லும் விமானத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு விட்டனர். விமானம் இலங்கையை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் மெல்போர்ன் பெடரல் கோர்ட் நீதிமன்றத்தின் கதவு தட்டப்படுகிறது. நீதிபதி ஹீதர் ரிலே முன்பாக முறையிடப்படுகிறது. நள்ளிரவு நேரமாக இருந்தபோதிலும், நீதிமன்ற நடைமுறைகளைக் காட்டி அவர் வாய்தா ஏதும் போடவில்லை. தனக்கான அதிகாரத்தை அவர் பயன்படுத்துகிறார்.

சிக்கலின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, பச்சிளம் குழந்தை நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தடை உத்தரவை பிறப்பிக்கிறார். விமானம் பறந்துவிட்டது நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று விமான நிலைய அதிகாரிகள் கைவிரித்து விடவில்லை. அவர்களும் நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துள்ளனர்.

இலங்கையை நோக்கி விமானம் பறந்து கொண்டிருக்கும் அதே வேகத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, பறந்து கொண்டிருந்த விமானிக்கு நீதிபதியின் உத்தரவும் பறக்கிறது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக டார்வின் விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகிறது.

பச்சிளம் குழந்தையால் அந்தக் குடும்பத்திற்கு தற்காலிக நிவாரணம் கிடைத்திருக்கிறது. எதிர்வரும் புதன்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அவர்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வுரிமை கிடைக்கும் என்று நாம் நம்புவோம். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மக்கள் இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும் நம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது.

அகதிகள் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரண வாசலில் தானே இளைப்பாறுகிறது. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அகதிகள் உள்ளிட்ட எளிய மக்களுக்கான நீதி என்பது ஹீதர் ரிலே போன்ற நீதிமான்களிடம்தான் பாதுகாப்பாக இருக்கிறது.

இந்தச் செய்தியைக் கூட தமிழக ஊடகங்கள் வெளியிடவில்லை என்பதையும் மனதில் வைத்துத்தான் எளிய மக்களுக்கான நம்பிக்கையை நாம் கட்டமைத்தாக வேண்டும்.

வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி.

;