tamilnadu

img

மதுரையில் எழுகிறது ‘நைபர்’... 8 ஆண்டுகளாக புதைந்து கிடந்த திட்டம் மீண்டும் உயிர் பெறுகிறது

மதுரை:
சுமார் 8 ஆண்டு காலமாக நிலுவையில் இருக்கிற மதுரை சார்ந்த ஒரு முக்கியமான கோப்பினை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தவும், வரும் ஆண்டிலேயே செயல்பாட்டிற்குக்கொண்டுவரவுமான முனைப்பில் ஈடுபட்டி ருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுடன் இணைந்து, கடந்த நவம்பர் 20 அன்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடாவை நேரில் சந்தித்து அவர் ஒரு மனு அளித்தார். அது,மதுரையில் ‘நைபர்’ என்று அழைக்கப்படக்கூடிய “தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை” அமைப்பதற்காக 2011ல் ஒப்புதல் அளிக்கப்பட்ட முன்மொழிவை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஆகும். 

நல்வாய்ப்பாக, மத்திய ரசாயனம் மற்றும்உரங்கள் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பொறுப்பேற்றிருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்ட முன்மொழிவை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் விரைவான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.15வது நிதிக்கமிஷனின் காலமான 2020 - 25ஆம் ஆண்டில் மதுரையில் நைபர் கல்வி நிறுவனத்தை நிறுவிட வேண்டும் என்ற கோரிக்கையோடு அரசை அணுகியிருக்கிறார் மதுரை மக்களவை உறுப்பினர். இந்த முன்மொழிவு அமலாக்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே 2013, 2018 காலத்திலும் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது மத்திய அரசால் கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 

நைபர் கல்வி நிறுவனத்திற்காக 116 ஏக்கர்நிலம் மதுரை மாவட்டம் திருமோகூர் அருகேஅடையாளம் காணப்பட்டு மத்திய அரசின் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் எட்டு ஆண்டுகாலமாக இது நிலுவையில் வைக்கப் பட்டிருக்கிறது எனக்குறிப்பிடும் சு.வெங்கடேசன், நாடு முழுவதும் நைபர் கல்வி நிறுவனங்கள் உருவான வரலாற்றை விளக்குகிறார். “தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - நைபர் அமைக்க வேண்டுமென்று முதன் முதலில் 2011-12ஆம் ஆண்டில் பேசப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காக பல மையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில்ஒன்று மதுரை. 2011 ஜனவரியில் நடைபெற்ற எட்டாவது நிதிக் கமிஷனின் கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரையை தவிர, அகமதாபாத், கவுகாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர், கொல்கத்தா, மொகாலி, லக்னோ ஆகிய இடங்களில் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. ஆனால் மதுரையைப் பற்றி பேச்சு மூச்சு இல்லை. மதுரையில் இக்கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காக ரூ.1100 கோடி முன்மொழிவு தயாரிக்கப்பட்டு, நிலமும் கையகப்படுத்தி ஒப்படைக்கப்பட்டு மத்திய நிதியமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டும், மதுரை திட்டம் மட்டும் ஏனோ கிடப்பில் போடப்பட்டுவிட்டது”.

நைபர் கல்வி நிறுவனம், மருந்தியல் அறிவியல் துறையில் (பார்மஸி) முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குகிறது. அதுமட்டுமல்ல, மருந்து கட்டுப்பாடு, கண்காணிப்பு, மருந்துகளின் பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு ஆகியவற்றின் சமூகவியல் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் படிப்புகளை வழங்குகிறது. மருத்துவ வேதியியல், இயற்கை மருந்துகள், பாரம்பரிய மருத்துவம், மருந்தியல் கூறாய்வு, நச்சுயியல், உயிரி தொழில் நுட்பவியல், மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தொழில் நுட்பம், மருந்து மேலாண்மை உட்பட 15 விதமான படிப்புகளையும், நைபர் நிறுவனம் வழங்குகிறது. இப்படிப்பட்ட உயர் மருத்துவக் கல்வி நிறுவனம் மதுரையில் அமைந்தால், நிச்சயம் மதுரை ஒரு மருத்துவத்துறை முனையமாக மாறும்; அது வெவ்வேறு விதமான வளர்ச்சிப் பரிமாணங்களை எட்டும் என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்... 
15வது நிதிக் கமிஷன், ரூ.1100 கோடிக்கான அனுமதியை அளித்து கட்டுமானம் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடக்க வேண்டும்; எனினும் அரசு அனுமதித்தால் உடனடியாகவே வரும் கல்வியாண்டிலேயே நைபர் நிறுவனம் செயல்பாட்டிற்கு வரமுடியும்; 2020ஆம் ஆண்டு மதுரையில் தனது செயல்பாட்டை துவக்க வாய்ப்புள்ள அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனத்துடன் (எய்ம்ஸ்) இணைந்து நைபரும் மாணவர் சேர்க்கையை துவக்க முடியும். அப்படி அனுமதிக்கப்பட்டால், நைபர் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்திலேயே முதல் மூன்று ஆண்டுகள் இயங்குவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகியுள்ளேன் எனத் தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், நைபர் நிறுவனத்திற்கான சொந்த வளாகம் உருவாகும் வரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இயங்குவதற்கான அனைத்து வசதிகளையும் பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா எம்.கிருஷ்ணனும் பெருமிதத்துடன் கூறுகிறார்.இத்தகைய வேண்டுகோளை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முன்வைக்க இருப்பதாக தெரிவித்த அவர், மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைவது, நிச்சயம் தென் தமிழகத்தில் மருந்தியல் துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும்; நைபர் நிறுவனத்தோடு காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து பல்வேறு படிப்புகளை மாணவர்களுக்கு வழங்க புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்கிறார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின்முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டால் மருத்துவ உற்பத்தித் துறையில் ஏராளமானோர் முதலீடு செய்ய முன்வருவார்கள். நமது கைகளில் நைபர் நிறுவனத்திலிருந்து வரும் சிறந்த மருந்தியல் வல்லுனர்கள் கிடைக்கும் போது அது ஒரு பெரும் வளர்ச்சிக்குஇட்டுச் செல்லும். தற்சமயம் இந்தத் துறையில் மகாராஷ்டிராவும், குஜராத்தும்தான் முன்னணி வகிக்கின்றன. மதுரை பெருமளவில் சிறு, குறு உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்தபகுதி என்றாலும், மருந்துத் துறை புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தினால் இந்த தொழில் துறையும் புதிய வளர்ச்சியை எட்டுவது உறுதி என்று குறிப்பிடுகிறார்.

;