tamilnadu

img

நல வாரியத்தில் இல்லாத தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும், நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா  தொற்றை தடுக்க நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு முறைசாரா தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி தங்கள் அன்றாட செலவுகளை நிறைவேற்றவும் வசதியின்றி தவித்து வருகின்றனர். 

தற்போது தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் பதிவை புதுப்பிக்கும் காலமாக உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் நலவாரிய பதிவை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தொகையை நலவாரிய பதிவை புதுப்பித்தவர்கள் மட்டுமல்லாது, நலவாரியத்தில் பதிவு செய்திருந்தாலே நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் பல இடங்களில் அதிகாரிகள் நலவாரிய பதிவை புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்குவதுடன், நலவாரியத்தில் பதிவு செய்து பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரண தொகையை மறுப்பதாக தெரிகிறது. 

இதனால் ஏற்கனவே நலவாரியங்களில் பதிவு செய்து, ஊரடங்கின் காரணமாக நலவாரிய பதிவை புதுப்பிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களும் தற்போது தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் வீடுகளில் முடங்கி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து நலவாரிய பதிவை புதுப்பிக்காமல் இருந்தாலும், ஏற்கனவே நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கும், நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் அரசின் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் இரண்டு வாரங்களுக்கு கூட போதாத நிலையில், இந்த ஊரடங்கு நடவடிக்கை முடிவடையும் வரை நலவாரியத்தில் பதிவு செய்த மற்றும் நலவாரிய பதிவு செய்யாத அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதத்திற்கு 5000 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய சமையல் பொருட்கள் 500 ரூபாய்க்கு விற்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;