tamilnadu

img

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே ஓபிஎஸ் மகனுக்கு எம்.பி. பட்டம்

தேனி:

கோவில் கல்வெட்டில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இருட்டடிப்பு செய்து, மறைந்த ஜெயலலிதா பெயரை ‘முதல்வர்’ என இடம்பெற செய்ததோடு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ஓபிஎஸ் மகனுக்கு எம்.பி. பட்டம் சூட்டியதால் எழுந்த சர்ச்சை காரணமாக கல்வெட்டு மறைக்கப்பட்டது. 


தேனி தொகுதியில் கோரிக்கை வைக்கப்படாத 2 மையத்தில் நடைபெறும் மறு வாக்குப்பதிவுக்காக கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.தற்போது மேலும் ‘ஒரு சர்ச்சையாக கோவில் கல்வெட்டில் ,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்’ என்று ஓ.பி.எஸ். மகன் பெயர் இடம் பெற்றுள்ளது. வாக்குஎண்ணிக்கைக்கு முன்பே துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு எம்.பி.,பட்டம் சூட்டப்பட்டது என்பது எதிர்க்கட்சியினர் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


எடப்பாடி பெயர் இருட்டடிப்பு 

தேனி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள 16.5.2019 நாளிட்ட கல்வெட்டில் கோவில் கட்டுவதற்கு பேருதவி புரிந்ததாக தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை இருட்டடிப்பு செய்து விட்டு கடந்த 2016 ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த ஜெயலலிதா பெயர் இடம்பெற்றுள்ளது. 

ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க மனமில்லாமல் ஜெயலலிதா பெயரை ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறச் செய்துவிட்டார் .


மகனுக்கு எம்.பி., பட்டம் 

மேலும், பேருதவி புரிந்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கு கீழே ‘தேனி பாராளுமன்ற உறுப்பினர்’ என்று ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பெயரும் துணைமுதல்வரின் மற்றொரு மகன் பிரதீப்குமார் பெயரும் பொறிக்கப்பட்டு உள்ளது.இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட புகைப்படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.வாக்கு எண்ணிக்கையே இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்டுள்ளதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தேனியில் நாடாளுமன்றதொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருந்தன. வாக்குக்கு பணம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த போதும் மீண்டும் 19 ஆம் தேதி 2 மையங்களில் மறு வாக்குப்பதிவு என்று கூறி, அதுவும்வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 16 ஆம் தேதியே கல்வெட்டில் எம்.பி., என பொறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது .இதற்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கல்வெட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். 


கல்வெட்டு மறைப்பு 

இதனிடையே கல்வெட்டு தொடர்பாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்த நிலையில், கல்வெட்டு உடனடியாக ‘மறைக்கப்பட்டது’. (ந.நி)


;