tamilnadu

img

தோழர் ப.ரத்தினம் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி

சென்னை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தை 1975 ஆம் ஆண்டில் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் ப. ரத்தினம் காலமானார். அன்னாரது மறைவுக்கு செவ் வஞ்சலி செலுத்தி தமுஎகச மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 

மதுரை மாநகர், புறநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்றாயிருந்த மதுரை மாவட்டத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, தமுஎகச (முன்னர் தமுஎச) என்ற எழுத்தாளர் கலைஞர்கள் இயக்கத்தை கட்டி வளர்த்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர். நவபாரதி, முப்பால் மணி, காஸ்யபன் போன்ற சமகால எழுத்தாளர்களுடன் ப.இரத்தினம்  கலை, இலக்கிய பெருமன்றத்தில் தன் இலக்கிய இயக்கத்தைத் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டு செம்மலர் பத்திரிகை கு.சின்னப்ப பாரதி ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டபோது ப.ரத்தினம்  என்ற பெயரில் எழுதி வந்தார். சில சமயங்களில் மதிச்சியம் கணேசன் என்ற பெயரிலும் எழுதி உள்ளார். சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு எனத்  தொடர்ந்து முற் போக்குப் படைப்புலகுக்குப் பங் களிப்புச் செய்தவர். அவரது மொழிபெயர்ப்பில் செம்மலர் இதழில் தொடர்ந்து வெளிவந்த சீனக்கதைகளும், இந்தியன் லிட்டரேச்சர் இதழிலிருந்து பல் வேறு அற்புதமான இந்திய, அயல்நாட்டு மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்த்தது மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்குத் தோழர் ப.ரத்தினத்தின் காத்திரமான பங்களிப்பாகும். அன்னம் பதிப்பகம் வெளியிட்ட ‘சீனக் கதைகள்’ தமிழில் வெளிவந்த சிறந்த மொழி பெயர்ப்பு நூலாகும். 1974 ஆம் ஆண்டு செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்களில் 16 பேர் மதுரை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தில் சந்தித்து புதியதொரு எழுத்தாளர்சங் கத்தை ஆரம்பிக்க முடிவெடுத்தனர். அவ்வாறு 1975 ஆம் ஆண்டு உதயமான தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடக்ககாலம் முதல் 32 உறுப்பினர்களில் தோழர் ப.ரத்தினமும் ஒருவர்.இன்று தனித்தனியாக வளர்ந்து இயங்கும் மதுரை நகர், மதுரை புறநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தமுஎகச என்கிற கலை இலக்கியப் பேரியக்கத்தின் அடிப்படைகளை உருவாக்கியவர் தோழர் ப.ரத்தினம். தொடர்ந்த வாசிப்பை அவர் எப்போதும் கைவிட்டதில்லை. மிகவும் அன்போடும் வாஞ்சையோடும் இளம் தோழர்களை உற் சாகப்படுத்துகிற தோழர். கூர்மையான அதேநேரம் மனம் நோகாத வகையில் விமர்சனங்களை முன்வைப்பார். கடைசியாக ஆகஸ்ட் 14 நாகமலையில் நடந்த தமுஎகச கலை இலக்கிய இரவில் தோழர் ப.ரத்தினம் கௌரவிக்கப் பட்ட நிகழ்வே அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்வு.தன் 90 வயதிலும் தளராத இடதுசாரியாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட தோழர் ப.ரத்தினத்தின் மறைவு முற்போக்கு இயக்கத்திற்கும் இலக்கியத் திற்கும் பேரிழப்பே.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;