articles

img

பேய் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் -க.கனகராஜ்

சங்பரிவாரும், நரேந்திர மோடியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை கக்குவதற்கும், தூண்டி விடுவதற்கும் தயங்கியதே இல்லை. அதுவும் தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர் வெறுப்பு அவர்களின் இயல்பின்படி முன்னிலைக்கு வந்து விடுகிறது. மூச்சைத் திணறடிக்கும் வகையில் புளுகு மூட்டைகள் பிரவாகம் எடுத்துப் பாய்கிறது.  கறி சாப்பிடுகிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்; இந்துக்களின் சொத்து, பணம், நிலம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றைப் பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்; என் உயிர் உள்ளவரை பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதை அனுமதிக்க மாட்டேன்; நாங்கள் 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வெற்றிபெறவில்லை என்றால் கிரிக்கெட் குழுக்களில் இஸ்லாமியர்கள் எல்லாம் ஆதிக்கம் செலுத்துவார்கள் - என்று அது கட்டம் கட்டமாக உச்சத்திற்கு சென்றது.  தற்போது  பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு ஒரு ‘ஆய்வை’ வெளியிட்டு, காலம் காலமாக இந்தியாவில் சங்பரிவார் பரப்பி வரும் “இப்படியே போனால் இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் இந்துக்கள் எண்ணிக்கையை முந்தி விடுவார்கள்” என்ற பொய்யுரைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்கள். இது அப்பட்டமாக பாஜகவிற்கு ஆதரவு கோரும் முயற்சிகளில் ஒன்று.  இதற்கு முன்னர், இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், இந்த ஆட்சியில் தான் இந்த ஆணையத்திற்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது; எனவே, இந்தியாவைக் காப்பாற்றுபவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அருவருக்கத்தக்க இந்த முயற்சிகளை தேர்தல் ஆணையம் தேமே என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

அனைவர் வாயில் இருந்தும் விஷம்

இது ஒருபுறமிருக்க இஸ்லாமியர்களைப் பற்றிய பல அவதூறுகளை  தொடர்ச்சியாக சங்பரிவார் வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறது. அதில் கடைசியாக வந்திருப்பது தான், “இஸ்லாமியர் மக்கள் தொகை” பற்றிய வதந்திகள். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இது குறித்து ஒரு புத்தகமே எழுதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திடம் வழங்கி விட்டு வந்தார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை இது தவறு என்று தெரிந்தே தான் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். குஜராத் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் இருந்த இஸ்லாமியர்களை, “குழந்தை பெறும் தொழிற்சாலைகள்” என்று மோடியே பேசினார். நாம் இருவர், நமக்கு இருவர் என்பதைப் போல, இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில் நாம் ஐவர், நமக்கு இருபத்தி ஐவர் என்று பேசினார். சமீபத்தில் ராஜஸ்தானில் பேசுகிற போது பல குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்று பேசினார். நிர்மலா சீதாராமன், மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமியர்களை குறிவைத்து பேசினார். அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாமில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 35 சதவீதமாகப் போகிறது ; எனவே, அவர்களை சிறுபான்மையினர் என்று சொல்லக் கூடாது. சிறுபான்மையினருக்கான எந்த சலுகைகளும் காட்டக் கூடாது என்று பேசினார். 

முஸ்லிம் பெயரில்  ஒரு திசை திருப்பல்

கடந்த வருடம் பிப்ரவரி 14 அன்று ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் பத்திரிகை “இஸ்லாமியர்களின் மக்கள் பெருக்கம் இந்தியாவிற்கு ஏன் ஒரு கவலை தரும் செய்தி” என்று தலைப்பிட்டு, சலா உதின் சோகைப் சௌத்ரி என்ற இஸ்லாமியர் பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறது. அந்த விபரங்களின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2100 வாக்கில் 200 கோடியாக மாறி விடும்; அப்போது இஸ்லாமியர்கள் இந்திய மக்கள் தொகையில் 30 சதவிகிதமாக மாறிவிடுவார்கள்; அது 90 கோடியாக இருக்கும் (அது என்ன கணக்கு என்று தெரியவில்லை) என்று எழுதியிருக்கிறார். 300 கோடியாக இருந்தால் தான் 30 சதவிகிதம் என்பது 90 கோடியாக இருக்கும். ஆனால், 200 கோடி ஆனாலே இஸ்லாமிய மக்கள் தொகை 30 சதவிகிதமாகி விடும், அது 90 கோடி என்று சொல்வது போன்ற திசை திருப்பல் எதுவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்கள் கணிசமான பகுதி தீவிரவாதிகளாகவும், ஜிகாதிகளாகவும் இருக்கிறார்கள் என்று அந்த கட்டுரை சொல்கிறது. அந்த கட்டுரையாளரின் வீட்டில் அவரது அம்மா இதையே தான் பேசிக் கொண்டிருப்பாராம். அதாவது, புனிதப் போரை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார் என்று எழுதியிருக்கிறார். முஸ்லிம்கள் அவர்களுடைய வருட சேமிப்பில் 2.5 சதவிகிதத்தை ‘ஜக்காத்தாக’ வழங்குவார்கள். “அந்த பணத்தை அப்படியே இந்தியாவில் உள்ள மற்றும் உலகத்தில் உள்ள ஊடகங்களுக்கு எல்லாம் கொடுக்கிறார்கள்; இதனால், ஊடகங்கள் அவர்களைப் பற்றி மூச்சுவிடுவதில்லை” என்று எழுதியிருக்கிறார்.  இப்படி அவர்களின் ஏராளமான வெறுப்பு பேச்சுக்களை நாம் பட்டியலிட முடியும். ஆனால், இவற்றில் முழு பொய்யோ அல்லது ஓரளவு உண்மை கலந்த பெரும்பான்மை பொய்களோ மட்டும் தான் இருக்கும்.

முழுப்பொய்கள்

தற்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் அறிக்கையை முன்வைத்து நடைபெறும் விவாதத்திற்கு வரலாம். அதாவது, “இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாமியர்கள் பின்பற்றுவதில்லை. அதனால் அவர்களது மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 9.84 சதவிகிதத்திலிருந்து 14.09 சதவிகிதமாக 65 ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது. மாறாக, இந்துக்களின் மக்கள் தொகை இதே காலத்தில் 84.68 சதவிகிதத்திலிருந்து 78.06 சதவிகிதமாக குறைந்து விட்டது. காரணம், இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் - எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்கிற - அவர்களது நடவடிக்கை தான். அவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு சட்டங்கள் பொருந்துவதில்லை. இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசின் உதவித் தொகை எதுவும் கொடுக்கக்கூடாது. அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்க கூடாது” என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.  குழந்தை பெறும் விகிதத்தை Total fertility rate என்று குறிப்பிடுகிறார்கள். 

உண்மை என்ன?

இந்த விகிதம் உண்மையில் எப்படி இருக்கிறது? இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் அது வேறுபடுகிறது. உதாரணமாக, ஏப்ரல் 23, 2022 தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ரெபேகா ரோஸ் வர்க்கீஸ் ஆகியோர் தொகுத்துள்ள மூன்று பட்டியல்கள் உள்ளன. அந்த மூன்று பட்டியல்களும் தேசிய மாதிரி குடும்ப ஆய்வை அடிப்படையாக கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் 1998-99 முதல் 2019-2021 வரையிலான காலத்தில் ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய பெண்ணும் குழந்தை பெறும் விகிதத்தை பட்டியலிட்டுள்ளனர். எல்லா இடத்திலேயுமே இஸ்லாமிய பெண்களின் குழந்தை பெறும்விகிதம் அதிகமாக இருந்திருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த இடைவெளி 1998-99ல் 0.81 என்பதிலிருந்து 2019-21ல் 0.42 ஆக குறைந்திருக்கிறது. அதாவது, இந்து பெண்கள் 1999ல் சராசரியாக 2.78 குழந்தையை பெற்றார்கள் என்றால், அது 2021ல் 1.94 ஆக குறைந்திருக்கிறது. அதாவது, 0.84 குறைவு.  இஸ்லாமிய பெண்கள்  1999ம் ஆண்டு சராசரியாக 3.59 குழந்தை பெற்றார்கள். இது 2021ல் 2.36 ஆக குறைந்திருக்கிறது. அதாவது, 1.23 அளவிற்கு இஸ்லாமிய பெண்களின் குழந்தை பெறும் விகிதம் குறைந்திருக்கிறது. ஆனால், இதில் மூன்றில் இரண்டு பங்கு தான் இந்து பெண்களின் குழந்தை பெறும் விகிதம் குறைந்திருக்கிறது. இது இயல்பு தான். இதற்கான காரணத்தை பின்னர் பார்க்கலாம். 

நாடு முழுவதும்  ஒரே விகிதமாக இல்லை

அதே போன்று இந்தியா முழுமைக்கும் எல்லா மாநிலங்களிலும் இந்தியாவில் எந்தவொரு பகுதியோடு ஒப்பிட்டாலும் இஸ்லாமிய பெண்களின் குழந்தை பெறும் விகிதம் அதிகமாக இருப்பதில்லை. உதாரணமாக, 2005-06ல் உத்தரப்பிரதேசத்தில் இந்து பெண்கள் குழந்தை பெறும் விகிதம்  3.73. பீகாரில் 3.86. ஆனால், மகாராஷ்ராவில் இஸ்லாமிய பெண்கள் குழந்தை பெறும் விகிதம் 2.85. மேற்கு வங்கத்தில் இது 3.15. மத்தியப் பிரதேசத்தில் இது 3.06. சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமியப் பெண்களின் குழந்தை பெறும் விகிதம்  இந்து பெண்களை விட அதிகமாக இருக்கிறது என்கிற போதும் மாநிலங்கள் கடந்து ஒப்பிட்டால் ஒரு மாநிலத்தில் இருப்பதை விட மேலே சொன்னவாறு 3 மாநிலங்களில் இஸ்லாமிய பெண்களின் குழந்தை பெறும் விகிதம் குறைவாக இருக்கிறது. (பட்டியல் 1) இதே ஆய்வு 15 ஆண்டுகள் கழித்து 2019-21ல் எடுக்கப்பட்ட போது உத்தரப்பிரதேசத்தில் இந்து பெண்களின் குழந்தை பெறும் விகிதம் 2.29 ஆகவும், பீகாரில் 2.88 ஆகவும் குறைந்தது. ஆயினும், இந்த 2.88, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் குழந்தை பெறும் விகிதமான 2.66ஐ விடவும், மகாராஷ்டிரா முஸ்லீம் பெண்களின் 2.06ஐ விடவும், மேற்கு வங்க முஸ்லிம் பெண்களின் 2.03ஐ விடவும், மத்தியப்பிரதேசத்தின் 2.4ஐ விடவும் அதிகம். அதாவது, உத்தரப்பிரதேசத்தில் இந்து பெண்களின் குழந்தை பெறும் விகிதத்தை விட மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் பெறும் விகிதம் குறைவு.  பீகாரில் இந்து பெண்களின் குழந்தை பெறும் விகிதமான 2.88 உடன் ஒப்பிட்டால் மேற்கண்ட 3 மாநிலங்களோடு உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியப் பெண்களின் குழந்தை பெறும் விகிதம் குறைவாகவே இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தை மட்டும் ஒப்பிட்டால் இந்த 15 ஆண்டுகளில் இந்து பெண்களின் குழந்தை பெறும் விகிதம் 1.44 குறைந்திருக்கும் போது, இஸ்லாமியப் பெண்களின் குழந்தை பெறும் விகிதம் 1.67 குறைந்திருக்கிறது.

மிக வேகமான வீழ்ச்சி

 15 ஆண்டுகளுக்கு முன்னாள் உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியப் பெண்கள் குழந்தை பெறும் விகிதம், இந்து பெண்களின் குழந்தை பெறும் விகிதத்தை விட 0.6 அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், 15 ஆண்டுகள் கழித்த பிறகு இது 0.37 ஆக குறைந்திருக்கிறது. எல்லா மாநிலங்களையும் இப்படி ஒப்பிட்டு பார்த்தால் இஸ்லாமியர்கள் குழந்தை பெறும் விகிதம் மிக வேகமாக குறைந்திருப்பதை காண முடியும்.

பலதார மணம்:  இஸ்லாமியர் மட்டுமா? 

இதேபோன்று, “ இஸ்லாமியர்கள் நினைத்தால் எத்தனை பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இந்துக்களுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடையாது. இது ஒரு அநீதி” என்பது போல அவதூறுப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களில் 1.9 சதவிகிதம் பேர் பலதார மணம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். கிறித்தவர்களில் இது 2.1 சதவிகிதம். சீக்கியர்களில் 0.5. புத்த மதத்தினரில் 1.3. இதர மதத்தினரில் 2.5. இந்துக்களில் 1.3. அதேசமயம், இந்து மதத்திற்குள்ளேயே கூட பலதார மணம் புரிவோரில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. பழங்குடியினரிடம் 2.4 சதமாகவும், பட்டியலினத்தவர்களிடம் 1.5 சதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோரிடம் 1.3 சதமாகவும், இதரர்களிடம் அது 1.2 சதமாகவும் இருப்பதைப் பார்க்க முடியும்.

எழுத்தறிவும் வருவாயும்  முக்கிய காரணிகள் 

இதேபோன்று, இந்தியா முழுமைக்கும் பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டால்  எழுத்தறிவு இல்லாதவர்களிடம் பலதார மணம் 2.4 சதமாகவும், ஆரம்பக்கல்வி பெற்றவர்கள் மத்தியில் 2.1 சதமாகவும், மேல்நிலைக் கல்வி கற்றவர்களிடம் 0.9 சதமாகவும், உயர்கல்வி பெற்றவர்கள் மத்தியில் 0.3 சதவிகிதமாகவும் இருக்கிறது.  இதேபோல, வளமையும், பலதார மணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பரம ஏழைகள் மத்தியில் 2.4 சதவிகிதமாகவும், ஏழைகள் மத்தியில் 1.8 சதமாகவும், மத்திய தர வர்க்கம் மத்தியில் 1.5 சதமாகவும், பணக்காரர்கள் மத்தியில் 0.9 சதமாகவும், பெரும் பணக்காரர்கள் மத்தியில் 0.5 சதவிகிதமாகவும் இருக்கிறது. ஏழ்மையும், எழுத்தறிவின்மையும் பலதார மணம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். அனைவரிடத்திலும் நிலவும் இந்த அம்சத்தை அப்படியே இஸ்லாமியர்களுக்கு பொருத்தினால் அவர்களில் கல்வியில் பின்தங்கிய நிலையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும், பலதார மணம் செய்வதிலும் தாக்கம் ஏற்படுத்துவதை பார்க்க முடியும்.  2005-06ம் ஆண்டின் கணக்கின் படி எழுத்தறிவற்றவர்கள் இந்துக்களில் 40.5 சதம் பெண்கள். இஸ்லாமியர்களில் அது 47.9 பெண்கள். 2019-2021ம் ஆண்டில் இது இந்து பெண்களில் 28.5 ஆகவும், இஸ்லாமிய பெண்களில் 29.1 ஆகவும் இருக்கிறது. குறைந்தபட்ச கல்வியாவது பெற்றவர்கள் 52.1 சதவிகிதம் என்பதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் 70.9 சதவிகிதமாக உயர்ந்திருப்பதை கணக்கில் கொண்டால் இஸ்லாமியப் பெண்கள் குழந்தை பெறும் விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடியும். (பட்டியல் 2- கீழே) இதேபோன்று, ஏராளமான தரவுகள் இஸ்லாமியர்களோ, இந்துக்களோ, இதர மதத்தினரோ - கல்வி, வருமானம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதே குழந்தை பெறும் விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்பதையும் இந்த நிலைகள் மேம்பட மேம்பட இந்த விகிதம் குறைந்து கொண்டிருப்பதையும் காண முடியும். 

வாய்ப்புகளை வெட்டிய மோடி அரசு

இந்த காரணத்தினால் தான் இஸ்லாமியர்களுக்கு கல்வி உதவித் தொகையை சச்சார் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அறிவித்து செயல்படுத்தி வந்தது. அதற்கு முன்பும் சில கல்வி உதவித் தொகைகள் இருந்தன. ஆனால், இந்த காலத்தில் பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் சிறுபான்மை பெண் குழந்தைகள் படிப்புக்கான பேகம் ஹஸ்ரத் மஹால் ஸ்காலர்ஷிப், உயர்கல்வி பயில்வோருக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் நேசனல் பெலோஷிப், வெளிநாட்டில் சென்று பயில்வோருக்கான கடனுக்கான வட்டியில் மானியம் ஆகியவற்றை மோடி அரசாங்கம் முற்றிலுமாக நிறுத்தி விட்டது.  ஒருபக்கம் இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதன் விளைவான குழந்தை பெறும் விகிதத்தை காரணம் காட்டி அவர்களை எதிரிகளாக சித்தரிப்பதும், இன்னொரு பக்கம் அவர்களை கல்வியில் மேம்பாடு அடையச் செயவ்தற்கான திட்டங்களை வெட்டி வீழ்த்துவதும் சங்பரிவாரின் திட்டமிட்ட சூழ்ச்சிகளே. இது இஸ்லாமியர்கள் மட்டும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை அல்ல; இந்தியர் ஒவ்வொருவரும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய விஷப் பிரச்சாரம்.




 

;