tamilnadu

img

மதுரை காமராஜர் பல்கலை. மதிப்பெண் பட்டியல் முறைகேடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை செப்-24ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெற்றது. கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன் உட்பட மாநில செயற்குழுஉறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மூன்றாம் நாள் (26.09.2019) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு செய்தது தொடர்பாக கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழு சார்பில் கடந்த 2018 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட உண்மை அறியும்குழுவின் அறிக்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மோசடித் தனங்களை அம்பலப்படுத்தியது. மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை செயல்பட்ட காலத்தில் சட்டவிரோதமாக அவரால் நியமிக்கப்பட்ட பதிவாளர் சின்னையா, தேர்வாணையர் ரவி, கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், மனிதவளமேம்பாட்டு மைய இயக்குனர் கலைச்செல் வன் ஆகியோரின் பின்னணி குறித்து ஆதாரங்களோடு அறிக்கை பேசியது.

இப்போது கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்  பல்வேறு முறைகேடுகளை மறைத்து தான் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையராக நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிய வருகிறது.போடி ஏலவிவசாயிகள் சங்க கல்லூரியில் முதல்வராகப் பணியில் இருந்த ராஜராஜன் மீது கல்லூரி நிதியைக் கையாடியதாக கல்லூரி நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2016 ஜூன் 29 அன்று நடைபெற்ற கல்லூரி கமிட்டி கூட்டத்தில் ராஜராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பெண்கள் விடுதி கட்டுவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து போலியான ஆவணங்கள் மூலமாக போடிநாயக்கனூர் இந்தியன் வங்கி கணக்கு எண் 750990795இலிருந்து 20,00,000 ரூபாய் கையாடல்செய்தது உள்ளிட்டு அவர் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுக்களுக்கு 09.08.2016 அன்று ராஜராஜன் சமர்ப்பித்த பதிலால் திருப்தியடையாத கல்லூரி நிர்வாகம் 12.08.2016அன்று நடைபெற்ற கல்லூரி கமிட்டி கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகதாஸ் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமித்தது. 

 விசாரணை முடிவின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ராஜராஜனை பணிநீக்கம் செய்வதற்கான அனுமதி கேட்டு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான ராமநாதன்கடிதம் எழுதியிருக்கிறார். இத்தனை நடவடிக்கைகளையும் மீறி ராஜராஜனால் கல்லூரியில் இருந்து தன்விருப்ப ஓய்வு பெற்று பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்குநரகத்தில் கூடுதல் தேர்வாணையராகப் பணியில் அமர முடிந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களாக இருந்த கற்பக குமாரவேல், கல்யாணி மதிவாணன் ஆகியோரின் பதவிக்காலத்தில் ஊழல்களால் சீரழிந்து போயிருந்த நிலையிலே, இவர்களுக்கெல்லாம் ஒத்துழைத்த  செல்லத்துரைக்கு துணைவேந்தராகும் வாய்ப்பு கிடைத்தது. தகுதியற்ற பலரைபல்கலைக்கழக உயர் அதிகாரிகளாகப் பணி நியமனம் செய்து கொண்டு தன்னுடைய ஊழல்கோட்டையைப் பலப்படுத்திக் கொண்டார் செல்லதுரை எனப் பேசப்படுகிறது.எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து அவரால் செய்யப்பட்ட நியமனங்கள் உள்ளிட்டு அனைத்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது.

;