tamilnadu

img

பழிவாங்கப்படுகிறாரா, தேர்தல் ஆணையர்? லவாசாவின் மனைவிக்கு வருமான வரி நோட்டீஸ்!

புதுதில்லி:
இந்திய தேர்தல் ஆணையமானது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, அப்பட்டமாக பாஜகஆதரவு நிலையெடுத்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி,தேர்தல் ஆணையர்களில் ஒருவரே இதனை பகிரங்கமாக வெளிப்படுத்திய நிகழ்வும் அரங்கேறியது.

பிரதமர் மோடியின் 2019 ஏப்ரல் 1 வார்தா உரை, ஏப்ரல் 9 லாத்தூர் உரை, ஏப்ரல் 21-ஆம் தேதி பதன்,பர்மேர் ஆகிய பகுதிகளில் ஆற்றிய உரை, ஏப்ரல் 25அன்று வாரணாசியில் ஆற்றிய உரை ஆகியவை தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக இருந்தன. இதுபோன்ற பிரச்சாரத்திற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மத்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், அதனை சக அதிகாரிகளான சுனில் அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர் ஏற்கவில்லை. இதையடுத்து, தேர்தல் முடியும் வரை, ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அசோக் லவாசா தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதுஅப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தேர்தல் முடிந்து மோடி மீண்டும் பிரதமராகி விட்ட நிலையில், அசோக் லவாசாவின் மனைவிநோவல் சிங்கலுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்அனுப்பியுள்ளது. லவாசாவின் மனைவி நோவல் சிங்கல், 2005-ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கிப்பணியிலிருந்து விலகிய பின், பல்வேறு நிறுவனங்களுக்கு தனியார் இயக்குநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் வருமான வரிக்கணக்கை சரியாக அளிக்கவில்லை என்று தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது அசோக் லவாசாவைப் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந் துள்ளது.

;