cinema

img

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி, நடிகர் நித்திஷ் வீரா மரணம்....

சென்னை:
இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். தொடர்ந்து ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களின் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பாத்திரம் நல்ல வரவேற்பைபெற்றது.நடிப்பு தவிர்த்து ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு ‘கனா’ படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அருண்ராஜா.இந்நிலையில் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.சிந்துஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளம் நடிகர்..
நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 45.தமிழில் ‘வல்லரசு’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நித்திஷ் வீரா. கூத்துப்பட்டறை நடிகரான நித்திஷ், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006ல் வெளியான ‘புதுப்பேட்டை’ படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்.கேட்டரிங் மாணவரான நித்திஷ் நடிப்புத் துறையில் கொண்ட ஆர்வத்தில் அவரது உறவினரான இயக்குநர் மஹாராஜன் மூலமாக ‘வல்லரசு’ படத்தில் அறிமுகமானார். காவல்துறை குடும்பத்தை சேர்ந்த இவர் பின்பு கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.அதன்பிறகு ‘வெண்ணிலா கபடி குழு’, ‘காலா’, ‘ராட்சசி’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் இவரது நடிப்பும் கதாப்பாத்திரமும் பேசப்பட்டன.கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நித்திஷ் வீரா திங்களன்று காலை 6.30 மணிக்கு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில் சுவாசப் பிரச்சனை காரணமாக இறந்தார்.அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மதுரையில் நடைபெற்றது. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார் கள். மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘லாபம்’ படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

;