tamilnadu

img

அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து தலைநகர் தில்லியில் அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு ஸ்தாபனம் (AIPSO-All India Peace and Solidarity Organisation) மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்தப் பேரணி/ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் அமைச்சர் (US Secretary of State) மைக் பாம்பியோ இந்தியாவிற்கு வருகைதந்துள்ள நிலையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியா, கியூபா, ஈரான், வெனிசுலா மற்றும் பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதற்கு எதிராகவும், அதன் ஆக்கிரமிப்பு யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடந்தது. கண்டனப் பேரணி தலைநகர் தில்லியில் மண்டி ஹவுஸிலிருந்து புறப்பட்டு, அமெரிக்கன் கலாச்சார மையத்தைச் சென்றடைந்தது. பேரணி/ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அறிஞர்கள், ஆர்வலர்கள், மகளிர், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

பேரணி/ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு ஸ்தாபனத்தின் தலைவர் நிலோத்பால் பாசு தலைமை வகித்தார். அவர் தன் தலைமையுரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிறநாடுகளைக் கபளீகரம் செய்திடும் (expansionist) கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். மேலும்,  அமெரிக்காவின் அடாவடித்தனமான நடவடிக்கைகளையும், அவற்றிற்கு இந்தியா அடிபணிந்து செல்வதையும் கண்டித்தார். இந்தப் பேரணி/ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த மற்றுமொருவரான து.ராஜா, தன் உரையின்போது, இந்திய நாட்டு மக்கள், பாஜகவின் அமெரிக்காவிற் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டார். பாஜக தேசியம் குறித்து ஏராளமாகப் பேசினாலும், நடைமுறையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு  அடிபணிந்து  நாட்டுமக்களின் நலன்களைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவின் மேலாதிக்கத்தைக் கண்டித்திடும் விதத்தில் அமெரிக்க அமைச்சர் பாம்பியோ தில்லி வரும்போது அவருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த செய்தியை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவுற்றது.

(ந.நி.)

;