tamilnadu

img

முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள் - பரூக் அப்துல்லா குமுறல்

 

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது ஒருவரின் உடலை துண்டு போடுவதற்கு சமமானது. மாநிலத்தை பிரித்த இவர்கள் இதயங்களையும் இரண்டாக கூறுபோடுவார்களா என்று 
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா  கேள்வி எழுப்பி உள்ளார்.  முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள் என்று மத்திய அரசு மீதான தனது குமுறலை செய்தியாளர்கள் முன் வெளிப்படுத்தி உள்ளார். 

மத்திய அரசு நேற்று ஜம்மு காஷ்மீரை ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டாக பிரித்தது. மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யும் அரசாணைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்களன்று ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 
மக்களவையில் சட்டப்பிரிவு 370 மறுசீரமைப்பு மசோதா குறித்த விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து என்டிடிவி-க்கு ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் இதுபோன்று பொய் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, என்னை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு வீட்டு வாசலில் காவலுக்கு அதிகாரிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். என்னை வீட்டுச்சிறை வைப்பதற்கு நீங்கள் யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். 
தொடர்ந்து, மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய திமுக மக்களவை எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு எங்கள் நண்பர் ஃபரூக் அப்துல்லா எங்கே? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 
இந்த மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் அமர்ந்திருந்த நிலையில், இந்த அவையில் இருக்க வேண்டிய எங்கள் நண்பர் ஃபரூக் அப்துல்லா எங்கே என்பதற்கு உள்துறை மந்திரி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
இதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதையும் அமித்ஷா தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக தயாநிதி மாறனும் கேள்வி எழுப்பினார். 
இதையடுத்து, அமித்ஷா பேசுகையில், ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, தடுப்புக்காவலில் வைக்கப்படவோ இல்லை. தனது இல்லத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் இருக்கிறார்” என்றார். 
முன்னதாக, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி நேற்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 
ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு பிரித்து இருப்பது ஒருவரின் உடலை துண்டு போடுவதற்கு சமமானது. மாநிலத்தை பிரித்த இவர்கள், மக்களின் இதயங்களையும் இரண்டாக கூறு போடுவார்களா என மத்திய ஆட்சியாளர்கள்? என ஃபருக் அப்துல்லா கேள்வி எழுப்பினார். 
காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது மத்திய அரசு கொடுத்த உத்தரவாதத்தை மீறிவிட்டதாக ஃபருக் அப்துல்லா குற்றம் சாட்டினார். ஒற்றுமைக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காஷ்மீர் இந்தியாவில் இருந்து ஒருபோதும் பிரிந்து போக விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 
இதற்கிடையில் தனது வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா நான் வீட்டுக் காவலில் கைது செய்யப்படவில்லை, எனது சொந்த விருப்பப்படி என் வீட்டிற்குள் தங்கியிருக்கிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா  நாடாளுமன்றத்தில் பொய் சொல்லியுள்ளார். 
எனது மக்கள் சிறையில் அடைக்கப்படுகையில், எனது அரசு எரிக்கப்படும்போது, எனது சொந்த விருப்பப்படி நான் ஏன் என் வீட்டிற்குள் தங்குவேன்? இது நான் நம்பும் இந்தியா அல்ல. மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். 
எனது மகன் ஒமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
 
 

;