tamilnadu

img

நுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி

புதுதில்லி:
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திய பொருளாதாரம் படுமோசமான நிலைக்கு போயிருக்கிறது.

2016-இல் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம், இந்தியாவின் சிறு-குறுமற்றும் நடுத்தரத் தொழில்களை பெருமளவிற்கு நாசம் செய்தது. நாட்டில் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு 2017-18இல் 6.1 சதவிகிதம் வரைஅதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன்காலாண்டில் 5 சதவிகிதமாகவும், ஜூலை -செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசியை கடுமையாகஉயர்த்தியுள்ளது. வறுமை முன்னெப்போதையும் விட அதிகமாகியுள்ளது.இந்த காரணிகளால், நாட்டின் நுகர் வோர் செலவினமும் மிகமோசமான அளவிற்கு குறைந்து போனது.2019 இறுதியிலேயே நுகர்வோர் செலவுகள் தொடர்பான மத்திய அரசின் அறிக்கைவெளியிடப்பட்டிருக்க வேண்டும். மத்தியபுள்ளியியல் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, ஏனோ, மோடிஅரசு வெளியிடத் தயங்கியது. ஆனால், எதிர்பாராத விதமாக ஆய்வு முடிவுகள் கசிந்தன. அதன்படி, 2011-12 முதல் 2017-18 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் நுகர்வோர் செலவுகள் 3.7 சதவிகிதம் சரிவைச்சந்தித்திருப்பது தெரியவந்தது. நுகர்வோர்செலவுகள் விஷயத்தில், கடந்த 40 வருடங்களில் இந்தியா சந்திக்கும் மிக மோசமான சரிவு இது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், மோடியின் ஆட்சியில் இந்தியாவில் வறுமை அதிகரித்து இருப்பதையும் அம்பலப்படுத்தியது. இதனால், அறிக்கையை வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாகக் கைவிட்டது. 

புள்ளியல் அலுவலக அறிக்கையில் உள்ள தரவுகளில் சில குறைபாடுகள் உள்ளன; அதைச் சரிசெய்த பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என்றும் சமாளித்தது. ஆனால், இந்த அறிக்கையை அரசு வெளியிடவே போவதில்லை என்று தேசியபுள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தலைவரான பிமல் குமார் ராய் தற்போது தெரிவித்துள்ளார்.நுகர்வோர் செலவினம் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு, தான்விரும்பியதாகவும், ஆனால் மற்றவர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் பிமல் ராய் குறிப்பிட்டுள் ளார். பொருளாதார மந்தநிலை பெரும் பிரச்சனையாக இருக்கும் இச்சூழலில் நுகர்வோர் செலவுகளும் மோசமான வகையில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவந்தால் அரசு மீதான அதிருப்தி அதிகரிக்கும்; எதிர்க்கட்சிகளும் நெருக்கடி கொடுக்கும். எனவே, அறிக்கையை முழுமையாகவே மூடிமறைத்து விட வேண்டும்என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதையே பிமல் ராயின் கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

;