tamilnadu

img

அமித்ஷாவை நீக்குக!

குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுதில்லி,பிப்.27- தில்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம்  காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நேரில் கோரிக்கை மனு அளித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசின் தூதுக்குழு பிப்ரவரி 27 வியாழனன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தது. அந்த மனுவில், தில்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மனு அளித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படு வதை உறுதிப்படுத்த குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். தில்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் உள்துறை அமைச்சரை உடனடியாக நீக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி யுள்ளோம். 4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்தாடின. மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன என்று தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், தில்லி வன்முறை  மிகுந்த கவலைக்குரியதும் தேசிய அவமானமும் ஆகும். இது மத்திய அரசின் மொத்த தோல்வியின் பிரதிபலிப்பாகும் .  தலைநகரில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். ராஜ தர்மத்தை பாதுகாக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு குடியரசுத்தலைவரிடம் வலியுறுத்தினோம் என்றார்.

;