tamilnadu

img

அமைதியாகப் போராடியவர்கள் மீது நடவடிக்கையா? திரும்பப்பெற வலியுறுத்தி அமித் ஷாவுக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் கடிதம்

புதுதில்லி:
அமைதியாகப் போராடியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், இவற்றைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குக் கடிதம் எழுதியுள்ளன.

சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற்சங்கங்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை சார்பாக, மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடுகிற மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின்  உண்மையான பிரச்சனைகள், ‘ஆஷா’, மதிய உணவு, அங்கன்வாடி போன்ற திட்ட ஊழியர்கள்கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடியவர்கள்மீது மத்திய அரசுமுதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்திருக்கின்றன. தொழிலாளர் வர்க்கம், இக்கால கட்டத்தில் அதிகரித்துவரும் துன்ப துயரங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இப்போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வேலை
இவ்வாறு போராட்டம் நடத்திய சமயத்தில் ஒவ்வொருவரும் தனிநபர் இடைவெளியை உறுதிப்படுத்திக்கொண்டும், முகக் கவசம் அணிந்துகொண்டும்தான் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எனினும் அவ்வாறு செய்யவில்லை என்றுகூறி முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும்வேலையேயாகும். இதனை ஏற்க முடியாது.நாட்டின் ஜனநாயகத்தின் நலன்களைக் காத்திடும் விதத்தில், நாடு முழுதும் தொழிற்சங்கத் தலைவர்கள், முன்னணி ஊழியர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கைகளை, தாங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அந்த கடிதத்தில் தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.(ந.நி.)

;