tamilnadu

img

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தொடங்கியது.... திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தில் 125 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை....

நாகர்கோவில்:
கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு படிப்படியாக குறையதொடங்கியதை அடுத்து 125 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து திங்களன்று (ஆக.23) பகல் 12.30 மணியில் இருந்து தொடங்கிமாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெற்றது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் படகில் சென்று பார்த்து வந்தனர்.இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுபோக்குவரத்தை நடத்தி வருகிறது. 

இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும்காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை வேகமெடுக்க தொடங்கியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல்சுற்றுலாத்தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் மூடப்பட்டன. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கி யதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. 

முதல் நாளான திங்களன்று ஒரே நாளில் மட்டும் 923 சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்துள்ளனர். 2ஆவதுநாளான செவ்வாயன்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து படகில் சென்றனர்.

;