tamilnadu

img

காஷ்மீர் குழந்தைகள் நம் குழந்தைகள் இல்லையா? - ஆர்.வைகை, அன்னா மாத்யூ, எஸ்.தேவிகா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் மாவட்டத்தில், குழந்தைகள் மற்றும் மக்களின் மன  நலன் குறித்து, இந்த ஆண்டின் துவக்கத்தில் மருத்துவரீதியாக ஓர் ஆய்வினை சமுதாய மன நல இதழ் (Community Mental Health Journal) ஒன்று மேற்கொண்டது. இதே போன்று எல்லைகள் இல்லா மருத்துவர்கள் (Doctors without borders) என்னும் அமைப்பும் 2015இல் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இவர்களின் கூற்றுப்படி, சுமார் 18 லட்சம் பேர், (மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம்), மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு ஆகஸ்ட் 5க்கு முன்பாகவே அங்கே நிலைமைகள் மிகவும் மோச மாகத்தான் இருந்திருக்கின்றன. அம்மாநிலத்தில் நடைபெற்று வந்த வன்முறை, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், துன்புறுத்தல் என்பனவற்றின்  விளைவுகள் அம்மாநிலத்தின் குழந்தைகளைப் பார்த்தாலே தெரிகிறது.

குழந்தைகள் திரும்ப வருவார்களா?

இத்தகைய கோர நிலைமை இப்போது மேலும் கடுமையாக மாறியுள்ளது. சட்டவிரோதமான முறை யில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து எண்ணற்ற செய்திகள் ஊடகங்களில் வந்திருக்கின்றன. இவர்களில் பலர் இரவில் இருட்டில் தப்பிச் சென்று விடுவதால், இவர்களைக் கைது செய்த அதிகாரிகளிடம் இவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் பதிவு செய்யப் படாதிருப்பதால், அவ்வாறு தப்பிச்சென்ற  குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று எவருக்குமே தெரிவதில்லை. அவ்வாறு தப்பிச் சென்றவர்களை அவர்களால் அடையாளம் கண்டு மீண்டும் பிடிக்கவும் முடியவில்லை.  பொருளாதார அறிஞர் ஜீன் டிரெஸ் ஆகஸ்ட் மாதத்தில், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிற சிறுவர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் இந்திய மகளிர் மற்றும் இதர அமைப்புகளின் சம்மேளனம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், காணாமல் போன தங்கள் குழந்தைகள் திரும்ப வரமாட்டார்களா என்று ஏக்கத்துடன் தங்கள் வீட்டின் வாசலிலேயே எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிறது.   அவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எவருக்குமே தெரியவில்லை. இவ்வாறு குழந்தைகள் காணாமல் போவது என்பது, நிச்சயமாக உச்சநீதிமன்றத்தின் கட்டளைகளை மீறும் செயலாகும். உச்சநீதிமன்றமானது, டி.கே. பாசு வழக்கில், எவரொருவராவது கைது செய்யப் பட்டால், அத்தகைய கைது குறித்தும், அவர் கைது செய்யப் பட்டதற்கான காரணங்கள் குறித்தும் அவருக்கு நெருங்கிய உறவினருக்குத் தெரிவித்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

பகடைக் காய்களாகக் குழந்தைகள்

அரசியல் விளையாட்டின் பகடைக் காய்களாகக் குழந்தைகள் மாறியிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களைத் தண்டித்திட அரசாங்கம் விரும்புகிறது. இதற்கு, அது அவர்களின் குழந்தைகளை குறி வைக்கிறது. 1990க்கும் 2005க்கும் இடையே 46 பள்ளிக்கூடங்களை, ராணுவம் தனது முகாம்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுடன், மேலும் 400 பள்ளிக் கூடங்களை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது. இவ்வாறு கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளை இடித்துத் தரைமட்டமாக்கி இருப்பதும், “மாணவர்களைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதும் அம்மாணவர் களிடம் அதிர்ச்சி, அச்ச உணர்வு மற்றும் அரசுக்கெதிராகக் கசப்புணர்வு ஆகியவை அவர்களின் அடிமனதில் என்றென்றைக்கும் இருக்கக்கூடிய விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது,” என்று மனித உரிமைகள் குறித்த பொது ஆணையம் 2006இல் அறிக்கை அளித்திருக்கிறது.  காஷ்மீரில் உள்ள குழந்தைகள் (இவர்களின் வயதுகள் வேண்டுமென்றே தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன) போலீஸ் லாக்கப்பில், பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, அடித்து நொறுக்கப் பட்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் கிடையாது என்றும், அநேக மாக அவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் இந்த ஆண்டின் முற்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் ஹைகமிஷனர் அறிக்கை அளித்திருந்தார்.  

பொதுப் பாதுகாப்புச் சட்டம் ராணுவத்தினருக்கு எவரையும் ஈராண்டு காலத்திற்கு எவ்வித  விசாரணையுமின்றி தடுப்புக்காவலில்  அடைத்து வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறது. ஆயுதப் படையினரின் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் அவர்கள் எவர்மீதெல்லாம்  நடவடிக்கை எடுத்தார்கள் என்று வெளி உலகத்திற்குச் சொல்வதுமில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

1990க்கும் 2013க்கும் இடையே, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் மூலமாகத் தெரிய வந்ததாக, 2018இல் ஜம்மு-காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டணி (JKCCC-Jammu Kashmir Coalition of Civil Society)  கண்டிருக்கிறது. அடைத்துவைக்கப்பட்டிருந்த மாணவர் களின் வயதை சரிபார்த்திட காவல்துறையினரோ, நீதித்துறை நடுவர்களோ எவ்விதமான நடைமுறையையும் பின்பற்றவில்லை. இளம் மாணவர்கள், அவர்களுடன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த வயது வந்தவர் களுடன் சேர்த்தே அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.  நீதித் துறையின் தலையீட்டின் பிறகுதான் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடைத்து வைக்கப்பட்டிருந்த வர்களில் 80 சதவீதத்தினர் சட்டவிரோதமாக அடைத்து  வைக்கப்பட்டிருந்ததாக, நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக் கின்றன.

சர்வதேச சட்டங்கள் சொல்வதென்ன?

குழந்தைகள் சித்தரவதைக்குள்ளாவது என்பது சர்வதேச சட்டங்கள் மற்றும் கன்வென்ஷன்கள் பல வற்றிற்கு எதிரான அத்துமீறல்கள் என்பதில் எவ்விதச் சந்தேக முமில்லை. இவை அனைத்தும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கன்வென்ஷன் 14(4)ஆவது  பிரிவினை மீறிய செயலாகும். அதன்கீழ், “இளம் சிறார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நட வடிக்கைகளும் அவர்களின் வயது மற்றும் அவர்களின் மறு வாழ்வைக் கணக்கில் எடுத்துக் கொண்டபின்னர்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று கூறுகிறது. இந்தியாவும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டிருக்கிற குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐ.நா. கன்வென்ஷன், சிறார்கள் கைது செய்யப்படுவதோ அல்லது அடைத்து வைப்பதோ சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்றும், அதனை வேறு வழியில்லாத நிலையில் கடைசிப் பிரயோக மாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், அதுவும் மிகவும் குறுகிய காலத்திற்குத்தான் இருந்திட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், நாட்டிற்குள் அமைதி யின்மை (civil unrest) நிலவும் சமயங்களில், கண்மூடித்தன மாகப் பதின்பருவ சிறார்களை அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என முத்திரைகுத்தி, அடைத்து  வைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு குழந்தைகளை தான் தோன்றித்தனமாகக் கடத்திச் சென்று, அடைத்து வைத்து, சித்திரவதைகள் செய்த அலுவலர்கள் மீது புலன்விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிகவும் தெளிவாகவே கூறுகிறது.

சம்மட்டியால் தாக்குவதா?

2003இல் சென்னை உயர்நீதிமன்றம், பிரபாகரன் (எதிர்) தமிழ்நாடு அரசு வழக்கில், தேசப் பாதுகாப்பு தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருந்த தடுப்புக் காவல் சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்து, இளம் சிறார் சட்டத்தை ஓர்  ஒருங்கிணைந்த சட்டமாகக் கொண்டுவந்தது. இதற்கு முன்னதாக, 1982இல், உச்ச நீதிமன்றம், ஜெய மாலா வழக்கில், ஒரு மாணவனைத் தடுப்புக் காவலில் வைத்திருந்த தைக் கண்டித்ததுடன், இளைஞர்கள், அவர்கள் தவறான வழியிலேயே சென்றாலும்கூட, அவர்களைச் சம்மட்டி கொண்டு அடிப்பது கூடாது என்று தீர்ப்பு அளித்திருந்தது.

நீதிமன்றம் செயல்பட முடியவில்லை

எனினும் இந்தச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களின் கட்டளைகள் எதுவும் காஷ்மீரில் பின்பற்றப்படவில்லை என்பது போன்றே தெரிகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியாத அளவிற்குப் பயந்துபோயிருக்கிறார்கள். அப்படி யிருந்தும்கூட தெருக்களில் நடைபெறும் மோதல்களின் போது சிறார்களை ராணுவ அதிகாரிகள் பிடித்துச் சென்று விடுகின்றனர். அரசுடனான மோதல்களால் சின்னாபின்ன மாகியிருக்கிற ஒரு பிராந்தியத்தில் இவ்வாறு சிறார்கள் காணாமல் போகும்போது, பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? நீதிமன்றங்கள்தான் பரிகாரம் அளிப்பதாக சில உறுதிமொழிகளை அளிக்கக் கூடிய விதத்தில் இருப்பதுபோல் தோன்றுகின்றன. எனினும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்ட ஆகஸ்ட் 5இலிருந்து, இத்தகைய பரிகாரங் களும் பறித்துக்கொள்ளப்பட்டுவிட்டன. ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரைச் சேர்ந்த 1,050 வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரையிலும் 200க்கும் மேற்பட்ட ஆட்கொணர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், அநேகமாக அனைத்து அஞ்சலகங்களும் மூடப்பட்டிருப்பதால், வழக்கை தொடுத்த வழக்குரைஞர்கள் எதிர்மனுதாரர்களிடம் நோட்டீசை அளிக்கக் கூட முடியவில்லை.


ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதி மன்றத்தின், ஸ்ரீநகர் அமர்வாயத்தில், ‘உத்தரவு பிறப்பிப்ப தற்கான பட்டியலில்’ 31 வழக்குகள் இருந்தன.  எனினும் அன்றைய தினம் “போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள்” கொண்டுவரப்பட்டதன் காரணமாக வழக்குரைஞர்களால் நீதிமன்றத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதால் அத்தனை வழக்குகளும் ஒத்தி போடப்பட்டன. சில வாரங்கள் கடந்த பின், செப்டம்பர் 24 அன்று, விசாரணைக்காக வந்த 78 வழக்குகளில் இருதரப்பிலும் வழக்குரைஞர்கள், 11 வழக்குகளில் மட்டுமே ஆஜரானார்கள். ஒன்பது வழக்குகளில் எவரும் ஆஜராகவில்லை. ஒன்பது வழக்குகளில் மனுதாரர் தரப்பிலும், அரசுத்தரப்பில் மட்டும் 47 வழக்குகளிலும் ஆஜராகியிருந்தார்கள். இத்தகைய நிலைமைகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்த்தே நம்  அரசமைப்புச்சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இத்தகு சமயங்களில் உச்சநீதிமன்றத்தை நேரடியாகவே அணுகுவதற்கு அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருந்தது.  அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பரிகாரம் காண்பதற்கான உரிமையும் ஓர் அடிப்படை உரிமையாகும். குழந்தைகளுக்கு எதிரான அரச வன்முறை குறித்த  புகார்களை விசாரணை செய்திடும் கடமையை உச்சநீதி மன்றமே மேலேகூறியதன் அடிப்படையில் எடுத்திருக்க வேண்டும். அதன்மூலமாக காஷ்மீர் மக்களின் வாழ்வதற் கான உரிமையைப் பாதுகாத்திட முன்வந்திருக்க வேண்டும்.

2005ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில், அமெரிக்க நீதிமன்றம் ஒன்றால் மனித உரிமைகள் குறித்து, கொலம்பியா மபிரிபான் படுகொலைகள் தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பு இங்கே நமக்கும் அறிவுரை கூறக் கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. அதில் நீதிபதி கூறி யிருப்பதாவது: “ஒருவரின் பயங்கரவாத செயல்களை, அரசு தன்னுடைய பயங்கரவாத செயல்களைக் கொண்டு எதிர்த்திடக் கூடாது. மாறாக, நாட்டிலுள்ள சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அது செயல்பட வேண்டும். மிருகத்தனமான நடவடிக்கைகளில் இறங்குபவர்கள் மிருகங்களாகவே மாறிவிடுகிறார்கள். அதன்மூலமாக விரிவான அளவில் வன்முறை சுழலை  உருவாக்கி, அவற்றிற்கு குழந்தைகள் உட்பட அப்பாவிகளை யும் பலியாக்கிவிடுகிறார்கள்.” தப்பிப்பிழைத்து ஜீவித்துக்கொண்டிருப்போரிடையே பயங்கரவாதம் விதைக்கப்படுவது, அவர்களைப் புலம்பெயரச்செய்வதற்கு ஆளாக்குகிறது என்று குறிப்பிட்டி ருப்பதுடன், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் அரசாங்கம் சாமானிய மக்கள் மீது மனித உரிமை மீறல்களை மேலும் மோசமான முறையில் ஏவிக்கொண்டி ருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கூண்டுக் கிளியாக...

காஷ்மீரின் குழந்தைகள் துப்பாக்கிக் குண்டுகளின் நிழலில் கூண்டுக்கிளிகளாக வளர்ந்துகொண்டி ருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாத நிலையில், அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் உடன்பிறந்தவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குடும்பங்களை இழந்த நிலையில் எண்ணற்றோர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய அவலநிலை, கல்வி  மற்றும் சுகாதார வசதிகள் பறிக்கப்பட்டிருத்தல் – இவை அனைத்தும் பல குழந்தைகளின் குழந்தைப்பருவ சந்தோஷ ங்களை யெல்லாம் பறித்துக் கொண்டிருப்பதுடன் அவர் களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி  இருக்கின்றன.   கோவார் கிலானி (Gowhar Geelani) எழுதியுள்ள சமீபத்திய புத்தகமான ‘காஷ்மீர் குமுறலும் காரணமும்’ (Kashmir Rage and Reason) என்னும் நூலில், காஷ்மீர் குழந்தைகள்,  “காவலில் வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப் பட்டான்,” (“custody killing”) “பிடி - கொல்,”(catch and kill), “சித்ரவதை,” (“torture”) “விசாரணை,”  (“interrogation”) “அடைக்கப்பட்டிருக்கிறான்” (“detention”), “காணாமல்போய்விட்டான்,” (“disappearance”) போன்ற பல சொற்களை கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும், இதற்குப் பதிலாக மற்ற இடங்களில் காணப்படுவதுபோன்று நிலைமைகள் இருந்திருக்குமானால் இந்த வார்த்தைகள் எல்லாம் இவர்களுக்குத் தெரிந்திருக்காது என்றும் கூறுகிறார்.  

தாங்கள் செய்யாத குற்றத்திற்காக, தங்களுக்குத் தெரி யாத ஓரிடத்திற்குக் கொண்டுசெல்லப்படக்கூடிய இந்தக் குழந்தைகள்  தொடர்ந்து பயந்துகொண்டே வாழக்கூடிய நிலை இருக்குமானால், என்னவிதமான எதிர்காலத்தை இந்தக் குழந்தைகள் கனவு காணும்? பலர் காஷ்மீர் குறித்துச்சொல்வதுபோல் நிச்சயமாக இது அவர்களுக்கு சொர்க்கம் அல்ல. வளர்ச்சி என்ற உறுதிமொழியின்மீது ஜனநாயக உரிமை களைப் பறிப்பதையோ, குழந்தைகளை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்துவதையோ நியாயப்படுத்த முடியாது. காஷ்மீரில் அவதிப்படும் குழந்தைகள் குறித்து நாம் பேசியாக வேண்டியது அவசியம். இல்லையேல், அரசு இவர்கள்மீது ஏவியிருக்கும் குற்றங்களுக்கு நாமும் உடந்தையானவர் களாகிவிடுவோம். தடுப்புக் காவல் என்ற பெயரில் குழந்தைகள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், இல்லையேல், காஷ்மீர் குழந்தைகள் நிரந்தரமாகக் காணாமல் போய்விடுவார்கள்.

கட்டுரையாளர்கள் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், 
நன்றி: தி இந்து,  

தமிழில் : ச.வீரமணி

 

;