tamilnadu

img

ஹைப்பர்சானிக் தொழில்நுட்பமும் புதிய ஆயுதப் போட்டியும்..

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி ற்றும் வளர்ச்சிக் கழகம் (DRDO)கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி ஹைப் பர்சானிக் தொழில்நுட்ப சோதனை வாகனத்தை(HSTDV) வெற்றிகரமாக இயக்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக இந்த
முயற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்ததொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா,சீனா ஆகிய நாடுகள் முதன்மையாகவும் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை குறிப்பிடத்தகுந்த ஆற்றல் பெற்றவைகளாகவும் உள்ளன. இப் பொழுது இந்தியாவும் இந்தக் குழுவில் சேர்ந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது ‘ராக்கெட் தொழில்நுட்பம்’ முன்னுக்கு வந்தது. ராக்கெட் எஞ்சின் தன்னுள்ளே வைத்திருக்கும் எரிபொருளை எரித்து அதை வெளியேற்றும் உந்து சக்தியால் முன்னுக்கு போகிறது என்று எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இதற்காக அதனுள் கம்ப்ரசர்கள், உருளைகள் மற்றும் பல அசையும் பாகங்கள் தேவைப்பட்டன. இவை அதன் எடையை அதிகரித்தன. இதற்கு அடுத்த முன்னேற்றமாக ‘ரேம்ஜெட்’ (Ramjet) வந்தது. இது தன்னுடைய வேகத்தால் வெளியிலிருக்கும் காற்றை உள்ளிழுத்து எரிபொருளுடன் கலந்து வெளியிட்டு உந்து சக்தியை பெறுகின்றது. 

சாதாரண ராக்கெட் என்ஜின்களில் இருக்கும் பல பாகங்கள் ரேம்ஜெட்டிற்கு தேவையில்லை என்பதால் இதன் எடை, தயாரிப்பு சிக்கல்கள், எரிபொருள் ஆகியவை குறைவாக இருந்தன. இது தேவையான வேகத்தைப் பெறுவதற்காக இன்னொரு ஏவுகலத்தில் வைத்து செலுத்த வேண்டும். இதன் வேகம் மேக்3லிருந்து மேக்6வரை இருந்தது. (மேக்-ஒலியின் வேகம்) இதன் அடுத்த நிலையாக ‘ஸ்கிராம்ஜெட்’ (scramjet) வந்துள்ளது. ரேம்ஜெட் டில் உள்ளிழுக்கப்படும் காற்று, ஒலியின் வேகத்திற்குக் கீழே குறைக்கப்பட்டு (subsonic) பயன்படுத்தப்படுகிறது. ஸ்கிராம்ஜெட்டில் காற்றின் வேகம் குறைக்கப்படாமலேயே எரிபொருளுடன் கலக்கப் படுகிறது. இதுவே ஹைப்பர்சானிக் தொழில் நுட்ப வாகனம் ஆகும்.தொழில் நுட்பத்தால் புதிய வாய்ப்புகள், புதிய அபாயங்கள் இரண்டும் இருக்கும். இவை விவாதிக்கப்பட வேண்டும். மறு பயன்பாடு செய்யத்தக்க ஏவுகலம், குறைந்த செலவில் செயற்கைக் கோள் ஏவுதல், மற்றும் முக்கியமாக புதுவகை ஏவுகணைகள் ஆகிய பலவகை பயன்பாடுகள் இந்த தொழில் நுட்பத்தில்உள்ளன. இந்த ஏவுகலம் தயாரிக்க புதிய தொழில்நுட்பங்கள், மூலப்பொருட்கள் தேவைப்படும். எனவே அது தொடர்பான பல்வேறு தொழிற்சாலைகள் திறக்க வாய்ப்புகள் ஏற்படலாம். எனவே நாம் இதை வரவேற்க வேண்டியதுதானே என்று கேட்கலாம்.

ஆனால், ஏகாதிபத்திய காலகட்டத்தில் அறிவியலின் ஒவ்வொரு முன்னேற்றமும் சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமில்லாமல் ஆளும் வர்க்கங்களின் வணிகநோக்கங்களுக்காகவும் குறிப்பாக ஆயுதமேலாதிக்கத்திற்கும் பயன்படும் என்பதேநாம் கவனிக்கத் தவறக் கூடாத அம்சம்.

அமெரிக்கா தரமறுத்த தொழில்நுட்பம்
இந்தியாவில் ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப வளர்ச்சியை இத்தகையபார்வையில் நாம் அணுக வேண்டியிருக்கிறது. HSTDV ஏவுகலத்தின்  மேல்பகுதி, இறக்கைகள், வால் பகுதி, அடிப்பகுதி, எஞ்சினின் உட்பகுதி  ஆகியவற்றிற்கு பலவிதமான விசேஷ உலோகக் கலவைகள்தேவைப்பட்டன. இதற்கான தொழில்நுட் பத்தை தர அமெரிக்காவும் மற்ற நாடுகளும் மறுத்துவிட்ட நிலையில் நமது ஆராய்ச்சிக் கழகம் நீண்ட காலம் செலவழித்து இவைகளை சொந்தமாகவே தயாரிக்க வேண்டிவந்தது. ஆனாலும் வெற்றிகரமாக செய்யப்பட்டுவிட்டது. இந்த ஏவுகலம் டிஆர்டிஓவினால்  சுயேச்சையாக வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் காற்றுச்சுரங்க சோதனைகள் இஸ்ரேல் மற்றும்இங்கிலாந்தின்  உதவியோடு செய்யப்பட்டன. ஹைப்பர்சானிக் தொழில் நுட்பத் தில் முன்னணியில் இருக்கும் ரஷ்யாவும் சில கேந்திரமான பகுதிகளில் உதவியது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் (BrahMos Aerospace) எனும் இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனம் மேக்3 வேகத்தை எட்டக்கூடிய சூப்பர்சானிக் குரூயிஸ் ஏவுகணைகளை தயாரிக்கின்றது. இந்த நிறுவனமும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் உள்ளது.

ஹைப்பர்சானிக் ஏவுகலத்தின் சிறப்புகள் என்ன?
இந்த வகை ஏவுகலங்களில் நாசாவின் X-43Aவினால் அடையப்பட்ட மேக்9.6வேகமே இதுவரை பதிவு செய்யப்பட அதிகபட்ச வேகம் ஆகும். அண்மையில் சோதிக்கப்பட்ட ரஷ்ய அவன்கார்ட் மற்றும் 3M-32 சிர்க்கான் ஹைப்பர்சானிக் ஏவுகலம் மேக்9 வேகத்தை எட்டியுள்ளது. இந்த வேக அளவுகளில்  ஏவுகலத்தை சுற்றி ஒருபிளாஸ்மா மேகப்படலம் உண்டாகி ரேடாரிலிருந்து வரும் ரேடியோ அலைக் கற்றைகளை உள்வாங்கி அவற்றின் கண்களுக்குபுலப்படாமல் மறைந்து விடுகிறது. பழையராக்கெட்டுகள் உந்துசக்திக்கு தேவையான எரிபொருளை கீழிருந்தே எடுத்துச் செல்வதால் தங்களுடைய எடையில் 2-4% அளவே ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். புதிய தொழில்நுட்பத்தில் மேலேசெல்லும்போதே காற்றிலிருந்து ஆக்சிஜனை உறிஞ்சிக் கொள்வதால் அதிக எடைகளை சுமந்து செல்ல முடியும். ஏவுகலம் மீண்டும் பயன்படுத்த முடியுமானால் செலவுகள் குறையும். இப்பொழுதுள்ள வெகுரக (ballistic)ஏவுகணைகள் முன்கூட்டியே திட்டமிடப் பட்ட வளைவுப் பாதையில் மட்டுமே செல்லக் கூடியவை. ஆனால் ஹைப்பர் சானிக் ஏவுகணைகள்  அதிக வேகத்திலும் விருப்பப்படி இயக்கமுடிவதால் மிக அதிகப் பயனுள்ள ஏவுகணைகளாக இருக்கின்றன.ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை பின்தொடர்ந்து அவற்றை அழிப்பது கடினம். அதற்கு தொலைதூர ரேடார்கள், விண்வெளியிலிருக்கும் உணர் சாதனங்கள், மிகநுட்பமாக பின்தொடர்வதும் சுடும் திறனும் தேவைப்படும்.  

அமெரிக்க நடவடிக்கைகளும் ஆயுதப் போட்டியும்  
அமெரிக்கா இத்தகைய ஏவுகணைகளை 2020களிலும், ஹைப்பர்சானிக் ஆளில்லா விமானங்களை 2030களிலும்,மீட்டெடுக்கக்கூடிய ஹைப்பர்சானிக் டுரோன்களை 2040களிலும் தயாரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யாவும் சீனாவும் இந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளன. அவைகளை தொடர்ந்து மிக நெருக்கத்தில் அமெரிக்காவும் இருப்பதாக நம்பப்படுகிறது.இடைநிலை அணு ஆயுத ஒப்பந்தம் (INF), ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தம் (ABMT), கேந்திர ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் (STARTII) போன்ற ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது. மேலும் ரஷ்யாவை சுற்றி லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும்ருமேனியா ஆகிய நாடுகளில் ஏவுகணை எதிர்ப்பு கற்றைகள், இடைநிலை க்ரூஸ்ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்வினையாக ரஷ்யாவும் ஹைப்பர்சானிக் போன்ற புதிய வகை ஏவுகணைகளை தயாரித்துள்ளது. ஹைப்பர்சானிக் ஏவுகணை வல்லமை உடைய எல்லா நாடுகளும் தாங்கள் அதில் அணு ஆயுதங்களைப் பொருத்த மாட்டோம் என்று சொல்கின்றன. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் எப்பொழுதும் இருக்கின்றன. எனவேஹைப்பர்சானிக் ஏவுகணை பரவல் அபாயம் உண்மையான ஒன்றாகும். ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை நெறிப்படுத்தக் கூடிய பன்னாட்டு ஒழுங்காற்று மையமோ ஒப்பந்தமோ இல்லை என்பது பெரும் பிரச்சனையாகும். நம் கண்முன் நிகழ்ந்து கொண்டிருப்பது புதிய ஆயுதப் போட்டி; அனேகமாகஅது அணு ஆயுதப் போட்டியாகவும் இருக்கும்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி செப்டம்பர் 7-13இதழில் ரகு எழுதிய கட்டுரையிலிருந்து)

தமிழில்: ஆர்.ரமணன்

;