tamilnadu

img

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பதா?  சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு அழகிரி, வைகோ கண்டனம்

சென்னை:
சி.பி.எஸ்.இ. 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்து இடம்பெற் றுள்ள கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன. டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தலித்துகள் என்பதன் பொருள் என்ன? கேள்விக்கு “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப் பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.இதே போன்று, முஸ்லிம்களின் பண்பு என்ன? என்ற கேள்விக்கு “முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார் கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை” என்று பட்டியல் தரப்பட்டுள்ளது. டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, “பணக்காரர், ஏழை, தலித், பொருளாதாரம்” என்று 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது மத்திய பாஜக அரசின் வகுப்புவாத, வர்ணாசிரம கொள்கையை புகுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவே இதை கருதவேண்டி இருக்கிறது. இத்தகைய கடுமையான ஆட்சேபகரமான கருத்துக்கள் பாடப் புத்தகங்களில் எப்படி இடம்பெற்றன என்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உரிய விளக்கத்தைத் தரவேண்டும்.சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தி உள்ள சிபிஇஎஸ் நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், கண்டனத்துக்குரிய பகுதிகளை உடனடியாக நீக்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;