tamilnadu

img

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை

சென்னை ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த பாத்திமா லத்தீப், கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், பாத்திமா லதீபின் தாயார் கடந்த 8-ஆம் தேதி, அவரை ஃபோனில் தொடர்பு கொண்ட போது, பாத்திமா லதீப் ஃபோனை எடுக்கவில்லை. மறுநாள் தொடர்பு கொண்ட போதும், பாத்திமா எடுக்காததால், சந்தேகமடைந்த அவரது தாயார், பாத்திமாவின் தோழிகளை தொடர்பு கொண்டு அவரை குறித்து விசாரித்துள்ளார். 

இதை அடுத்து, பாத்திமா லதீபின் தோழிகள் அவரது அறையை தட்டியுள்ளனர். நெடுநேரமாகியும் திறக்காததால் விடுதி ஊழியர்களின் உதவியுடன் பாத்திமாவின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒராண்டில் இது சென்னை ஐஐடியில் நடந்த 5வது தற்கொலை சம்பவமாகும். கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த பொறியியல் இறுதி ஆண்டு மாணவர் சாஹல் கோர்மாத் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த முதலாமாண்டு எம்.டெக் மாணவர் கோபால் பாபு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். ஜார்கண்ட்டை சேர்ந்த பிஎச்.டி மாணவி ரன்ஜனா குமாரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிதி சிம்ஹா என்ற உதவி பேராசிரியர் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;