tamilnadu

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சிபிஐ விசாரணை

கோவை, மே 20-பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கியகுற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு முக்கிய நபரான சபரி ராஜன் வீட்டில் திங்களன்று விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்கள்மற்றும் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்த கொடூரம்வெளியாகி தமிழகத்தையே அதிச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து மாணவர்கள், மாதர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. எனினும் அரசியல் பின்புலத்தோடு நடைபெற்ற பாலியல் குற்றங்கள் நீதிமன்ற கண்காணிப்பில் பெண் அதிகாரியின் தலைமையில் தீர விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குப் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் ஒரு மாத கால தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் சிபிஐ விசாரணை தொடங்கியது. இதன்படி கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு தோட்டம், வீடு மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிலும் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் திங்களன்று மற்றொரு குற்றவாளியான சபரிராஜன் வீட்டையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

;