tamilnadu

கோவை மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

வடமாநில தொழிலாளி மர்ம மரணம்


கோவை, ஏப். 22-கோவை எட்டிமடை அருகே தலையில் காயங்களுடன் தூக்கு போட்ட நிலையில் இருந்த வடமாநிலத்தவர் உடலை காவல்துறையினர் மீட்டனர். கோவை எட்டிமடை பிரிவு அருகில் உள்ள முற்புதரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து க.க.சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்துகாவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் மேற்கு வங்க மாநிலம், பிப்பாரா மாவட்டத்தை சேர்ந்த 51 வயதான சூரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரின் தலையில் ரத்த காயங்கள் இருப்பதால் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர் எதற்காக கோவை வந்தார் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும் க.க.சாவடி காவல் நிலையதுணை ஆய்வாளர் மனோஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இந்தியன் வங்கி இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


தருமபுரி, ஏப்.22-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில் முனைவோருக்கான பயிற்சி இலவசமாக பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வெளியிட்ட அறிக்கையில், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசுடன் இணைந்து இந்தியன் வங்கி சார்பில் ஏழு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அனுபவமும், திறமை வாய்ந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள வாழ்வியல் திறன்கள் வழங்கப்படுகிறது.


இத்துடன் காணொளி காட்சி மூலம் செயல்முறை விளக்கங்களும் இந்நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தொழில் முறைகளை பற்றியும் தொழில் அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது. மதிய உணவு மற்றும் தேநீர் பயிற்சி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும், இத்துடன் தொழில் துவங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற இலவசசேவைகளும் வழங்குகிறோம். தற்போது பெண்களுக்கான தையற் பயிற்சி, பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி ஆகிய பயிற்சிகள் துவங்க உள்ளோம், பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்.24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். சுய உதவி குழுக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி பெற விரும்பும் பயிற்சி மற்றும் தொலைபேசி (அ) கைபேசி என்னுடன் மேற்கண்ட தேதிக்குள் நேரிலோ (அ) அஞ்சல் அட்டை மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி -5. 04342-230511, 234464, 94422 74912 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

;