politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ரபேல் ஊழல் வழக்கில் தங்களது அரசாங்கத்தை குற்றமற்றது என்று உச்சநீதிமன்றம் நற்சான்றிதழ் அளித்துவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உச்சநீதிமன்றம் அரசாங்கம் குற்றமற்றது என்று தீர்ப்பு வழங்கிடவில்லை. உச்சநீதிமன்றம், இதற்கு முன்பு அளித்த தீர்ப்பிலோ அல்லது தற்போது சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து வெளியிட்டுள்ள உத்தரவிலோ, இந்த ஊழல் தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வுக் கழகம்(சிபிஐ) அல்லது இதர விசாரணை அமைப்புகள் தங்களது விசாரணையை தொடரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ரூ.58 ஆயிரம் கோடி பெறுமான ரபேல் ஊழல் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை தொடர விரும்பினால் தொடரலாம் என்று, சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஜோசப் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரபேல் ஊழலில் பாஜக அரசாங்கம் குற்றமற்ற ஒன்று என நீதிமன்றம் முழுமையாக அறிவித்துவிடவில்லை என்பதே உண்மை. இதனால்தான் ரபேல் பேரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கே உத்தரவிட வேண்டுமென்று எமது கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே வலியுறுத்தின. இப்போதும் அதையே வலியுறுத்துகிறோம். ஆனால் மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. குற்றமற்றவர்கள் என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் அஞ்சுகிறீர்கள்? ஏன் மறுக்கிறீர்கள்?

;