politics

img

மகாராஷ்டிரா : 50 முன்னணி ஊழியர்கள் சிவசேனையிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மும்பை,

மகாராஷ்ட்ரா மாநிலம், பால்கார் மாவட்டத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனை ஊழியர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே வெற்றி பெறச் செய்திட வேலை செய்ய இருப்பதாகவும் சூளுரைத்துள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பால்கார் மாவட்டத்தில் தகானு வட்டத்தில் உள்ள அம்பேசாரி மற்றும் நாக்சாரி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனை ஊழியர்கள், சிவசேனை செயல்பாட்டில் விரக்தியடைந்திருந்தனர். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திட தங்கள் விருப்பத்தினையும் தெரிவித்திருந்தனர்.

இதனையொட்டி அம்பேசாரி கிராமத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே, வேட்பாளர் வினோத் நிகோலே மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் சிவசேனைக் கட்சியின் சார்பில் பஞ்சாயத்து சமிதி உறுப்பினராக இருந்த விஜய் நாங்ரே, நாக்சாரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர்கள் (சர்பாஞ்ச்கள்) வசந்த் வசவ்லா மற்றும் துலுரம் தண்டேல் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.  

அவர்கள் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, எப்படியெல்லாம் சிவசேனை-பாஜக கூட்டணி தங்களை ஏமாற்றி வந்த்து என்பதை விளக்கினார்கள். பின்னர் செங்கொடியின்கீழ் தங்களை இணைத்துக் கொள்வதாகவும், தோழர் வினோத் நிகோலே வெற்றிக்கு முழுமையாகப் பணியாற்றி உறுதி எடுத்துக்கொள்வதாகவும் கூறினார்கள்.

அவர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் பூங்கொத்து அளித்தும், செந்துண்டுகள் அணிவித்தும் வரவேற்பு  அளிக்கப்பட்டது.

தஹானு தொகுதி ஒரு பழங்குடியினர் தொகுதியாகும். இவ்வாறு ஒரு நிகழ்வு நிகழ்வது இதுவே முதல் தடவை. இந்த நிகழ்வு, தேர்தல் வெற்றி என்னும் காற்று  காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பதை காட்டும் விதத்தில் அமைந்திருந்தது.

மேலும் இத்தொகுதியில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் தோழர் வினோத் நிகோலேவிற்கு தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ், பகுஜன் விகாஸ் அகாடி, லோக் பாரதி மற்றும் கஷ்டகாரி சங்காடானா ஆகிய கட்சிகளும் தங்கள் முழு ஆதரவை அளித்துள்ளனர்.

அக்டோபர் 10 அன்று தஹானுவில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அக்டோபர் 16 அன்று நடைபெறும் கூட்டங்களில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்கிறார்.

 

 

;